ஜனாதிபதியின் பிறந்த நாள்..!

 

 


நாட்டில் பெருமாற்றத்தை ஏற்படுத்த காத்திருக்கும் எமது ஜனாதிபதிக்கு முதலில் பிறந்த தின வாழ்த்தைத் தெரிவித்துக்கொண்டு, அவருக்கு இறைவனினதும், இயற்கையினதும் ஆசியை வேண்டுக்கொண்டு, நாட்டில் அவர் ஆற்ற இருக்கும் பணிகளுக்கு நானும் என்னால் முடிந்த உதவிகளை வழங்குவேன் எனச்சொல்லிக்கொள்கின்றேன்.

இனவாதம், மொழிவாதம், மதவாதம், சாதிவாதம், பிரதேசவாதம் என பேசிக்கொண்டு இருந்தவர்களிடையே அவ்வாறு பயணித்தால், நாட்டிற்கு விமோசனமில்லை என்பதைப் புரிந்து கொண்டு,  அந்தவாதங்கள் அனைத்தையும் தவிர்த்து, ஒன்றாக நியாயமாக அனைத்து மக்களும் பயணிக்க வேண்டும். அது தான் இலங்கை அன்னையை மகிழ்ச்சிப்படுத்தும். வேறுமனே நீ பெரிது, நான் பெரிது என்று துணைக்கு ஆட்களை வைத்துக்கொண்டு, வீம்பு பிடிப்பதால் பெரிய பலன்கள் கிடையாது. வேண்டும் என்றால் தனிப்பட்ட நபர்களின் பைகளை நிரப்ப முடியும். நாடு அனைவருக்கும் பொதுவானது. அனைவரின் பங்களிப்பும், அதன் முன்னேற்றத்திற்கு வேண்டும்.

இந்த நிலையை மிகச்சரியாக, ஜனாதிபதி புரிந்து வைத்திருக்கின்றார் என்பதை நான் உணருகின்றேன். அவ்வாறு இல்லை என்றால் அடுத்த 5 வருடங்களில் தெரிந்துவிடும்.

அண்மையில் ஊடகங்களில் யாழில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட  திசைகாட்டிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிக்குகளின் காலில் விழுந்து எமது தமிழர்களது மானத்தை இழந்ததாக சில செய்திகள் வந்தன.

அறநெறிகளையும், சமூகப்பாதுகாப்புகளையும், பேணும் மதத்தலைவர்கள் மதிக்கப்பட வேண்டும்.  அவர்களிடம் தவறுகள் இருந்தால், அதனைச் சுட்டிக்காட்டலாம். இலங்கையின் ஒரு பகுதி மக்களின் வாழ்வை ஒழுங்குப்படுத்தும் பெரிய பணியை அவர்களே செய்கின்றார்கள்..! அவர்கள், ஒரு சாதியை அல்லது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது.  விருப்பத்தின் பேரில் அந்த மார்க்கத்தை தெரிந்து, அதில் பயணிப்பவர்கள் தான் மதத்தலைவர்கள்..! அவர்களின் காலில் விழுவதால் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு மதத்தினரின் வழிபாட்டு முறைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன. எம்மைப்போல் மற்ற இனத்தவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு.

எமது சமயத்தில், வேண்டும் என்றால் சில சீர்திருத்தங்களைக் கொண்டுவரலாம். யாரும் ஒரு மதத்தலைவராக வரக்கூடிய நிலையை ஏற்படுத்தலாம்..! அப்படியான மதத்தலைவர்களை நாம் பேதமின்றி மதிக்கலாம். அதற்கும் மேலே சென்று, உண்மையில் கடவுளுக்கு நிகராக இருந்தால், காலில் விழுந்து  வணங்கலாம். அதில் தப்பு இல்லை. எமக்கு ஒரு உடற்பயிற்சி, ஆரோக்கிய வாழ்வியலிலுக்குக் கிடைக்கின்றது என எடுத்துக்கொள்ளலாம்.

ஏறக்குறைய எனது வயதை ஒத்த ஜனாதிபதி, 1989, 1990 களில் கொழும்பு யாழ் புகைவண்டியில் நடைபாதை வியாபாரம் செய்ததாக அறிந்தேன்.  வறுமையைப் போக்க யாரும், நியாயமான எந்தத்தொழிலையும் செய்யலாம். வியாபாரத்தை நியாயமாகச் செய்வதில் தவறில்லை.

உண்மையில் அந்தக்கால கட்டத்தில் நானும் கொழும்பு, யாழ்ப்பாணம் என அலையவேண்டிய சூழலில் சிக்குண்டிருந்தேன்..! அந்த சமயத்தில், புகைவண்டியில் நீண்ட நேரம் நின்று பயணிப்பதால் பல நடைபாதை வியாபாரிகளிடம் கதைப்பது உண்டு. வடை, கொய்யா மற்றும் அன்னாசி வாங்கி உண்பதுண்டு.  இவரையும் கண்டதாக ஞாபகம்..! சாரம்,    பெட்டிக்கோடுகளுள்ள சேட்டு, மற்றும் அவரது முகத்திலுள்ள கறுப்புப்புள்ளி என்பதுடன் கட்டையான உருவம், இவை எனது கண்ணுக்குள் நிற்கின்றன..! அவரும் கணிதத்துறையில் பௌதீக விஞ்ஞானப் பட்டப்படிப்பை களனிப்பல்கலைகழகத்தில் 1992இல் தொடங்கி 1995 இல் நிறைவு செய்துள்ளார். அன்றைய காலத்தில் பல சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டு, தீக்கு இரையாக்கப்படுவதும், கங்கைகளில் வீசப்படுவதும் வழக்கம். அதேவேளை யாழில் இயக்கங்களின் நடவடிக்கைகளும் உச்சம் பெற்று இருந்தன..!

இறுதியாக 1990களில் ஒரு புகையிரதத்தில் யாழ் வருகின்றேன். அதன் பிறகு புகையிரதசேவை நிறுத்தப்படுகின்றது..! யாழ்ப்பாணம் புகையிரதத்தை மறக்கின்றது..! எனது வாழ்க்கையும், இந்தியா நோக்கி நகர்கின்றது..! நீண்ட யுத்தங்கள்..! உயிர் இழப்புக்கள்..! இடம் பெயர்வுகள்..! புலம்பெயர்வுகள்..! மீள் குடியேற்றங்கள்..! அரசியல் மாற்றங்கள்..! இயற்கைப்பேரழிவுகள்..! எனத்தத்தளித்த நாடு, சரியான பாதைக்கு வர இவ்வளவு விடயங்களையும் சந்தித்துள்ளது..!

இனியாவது, யாரும் நாட்டை சிதைக்காமல் நல்ல, திறமையான, நாட்டை முன்னேற்றக்கூடிய இன, மொழி, மதம் சாராத நபர்களிடம் பொறுப்பைக் கொடுத்து, இலங்கை அன்னையை இனி எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.

ஜனாதிபதியின் பிறந்த நாளில், அவரும் இந்த உறுதிமொழிக்கு வலுச்சேர்க்க வேண்டும் என இந்தப்பதிவில் கேட்டுக்கொள்கின்றேன்.

 

ஆ.கெ.கோகிலன்

24-11-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!