கண்ணே ராதா..!

 

 


எனக்கு ஏறக்குறைய 10 வயதாக இருக்கும்போது வந்த படம். அன்று என்னால் இந்தப்டத்தைப் பார்க்க முடியவில்லை. வீடியோகொப்பி கிடைக்கக்கூடிய நிலையிருந்தும் எனக்கு சில நடிகர்களின் படங்கள் பிடிக்காது. அதில் முக்கியமான இருவர் கார்த்திக் மற்றும் மோகன்..! இவர்கள் காதல் படங்களில் தான் நடிப்பார்கள். நிறைய பெண் ரசிகைகள் இவர்களுக்கு இருக்கும். எனக்கு அந்த நேரம் பிடித்த நடிகர் கமல் தான். பின்னர் பிரபு பிடிக்கும். இருந்தாலும் நீண்டகாலமாக சிவாஜி கணேசனைத்தான் பிடிக்கும்.

அந்த சமயத்தில் அலைகள் ஓய்வதில்லை படம் வந்தது..! அதன் பாடல்களும், காதல் காட்சிகளும் இன்றுவரை மறக்கமுடியாமல் இருக்கின்றன. பாரதிராஜா அவ்வளவு யதார்த்தமாக அந்தப்படத்தை எடுத்து இருப்பார். கார்த்திக், ராதா என்ற ஜோடி மிகப்பிரபலமாக இருந்த காலம் அது. அந்தக்காலத்தில் இவர்கள் நடித்துப் பல படங்கள் வெளிவந்தன. அதில் ஒன்று தான் கண்ணே ராதா..!

படத்தில் கதை என்றால் நண்பர்கள் இருவர் ஒருவீட்டைச்சேர்ந்த இரு மச்சாள்களைக் காதலித்து, ஆள்மாறாட்டம் பண்ணித்திருமணம் முடித்து, ஒரு ஜோடி மகிழ்ச்சியாக வாழ மற்றைய ஜோடி, பிரிந்துகொண்டு தவறு செய்த  காதலியின் தந்தைக்குப் பாடம் படிப்பித்ததுடன், காதலனின் பார்வையற்ற அக்காவின் பார்வையை பெற்றதுடன், கேள்விக்குறியான அவளின் வாழ்க்கைக்கு காரணமான காதலியின் தந்தைக்கு, தண்டனை வழங்கியதுடன், அக்காவின்  வாழ்வும் கிடைக்கின்றது. அதேவேளை பிரிந்திருந்து, இந்தக்கைங்கரியத்தைச் செய்த ஜோடி, மீண்டும் சந்தோசமாகத் தமது வாழ்வில் ஈடுபடுகின்றார்கள்.

அந்த நேரத்தில், எனது கனவுக்கன்னியாக இருந்த ராதாவை தற்போது பார்த்தால் மிகப்பாவமாக இருக்கும்..! மூன்று பெரிய பிள்ளைகளின் தாயான அவர்,   உருவத்தில் அந்தளவிற்குப் பெருத்து,  அவலட்சணமாக இருக்கின்றார்..! இவர் தானா அன்று கனவுக்கன்னியாக இருந்தார், என அச்சரியப்படும் அளவில் தற்போது இருக்கின்றார்.

அதேபோல், இந்தப்படத்தில் நடித்த கார்த்திக் தற்போது சினிமா துறையிலே காண முடியவில்லை.

இந்தப்படத்தில் நடித்த தேங்காய் சீனிவாசன், வி.கே.ராமசாமி போன்றோர் தற்போது உயிருடன் இல்லை. வடிவுக்கரசி சில படங்களில் தலையைக்காட்டுவார்.

இளையராஜாவின் இசை, பாடல்கள் அன்று ரசிக்கக்கூடியதாக இருந்தன.

சண்டைக்காட்சிகள் வேடிக்கையாக இருந்தன. ஒளிப்பதிவு  சும்மா சாதாரணமாக இருந்தது.

என்ன தான் பழைய படமாக இருந்தாலும் காட்சிகளில் உணர்வு இல்லை.  எல்லா நடிகர்களின் நடிப்பும் நாடகத்தனமாகவே இருந்தன. ரசிக்க முடியவில்லை. இந்தப்படத்தைப் பொறுமையாக பார்த்து, எனது சகிப்புத்தன்மையைச் சோதித்துக்கொண்டேன்.

இந்தப்படத்தில் ராதா பிரிந்து இருக்கும்போது, அவரைப் பெண் பார்க்க ஒருவர் மாப்பிளையாக வந்திருந்தார். மெல்லிய, சற்று கருத்த அந்த உருவத்தை உற்றுப்பார்க்கத் தெரிந்தது அவர் தான் மக்கள் நாயகன் இராமராஜன். 1990களில் கொடிகட்டிப் பறந்தவர். ரஜனி, கமல் ரேஞ்சுக்கு வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். இளையராஜாவின் நிறைய ஹிட் பாடல்கள் இவரது படங்களில் இருந்தவையாகும்.

கார்த்திக்-ராதா ஜோடியின் காதலுக்காக படத்தைப் பார்க்கலாம். படத்தில் இன்னொரு ஜோடியான ராஜாவும்,வனிதாவும்  சிறப்பாக நடித்து இருந்தார்கள்.

அந்தக்காலத்தில் விலங்குகளை எல்லாம் வைத்துப் படம் எடுக்கக்கூடிய ஜனரஞ்சக இயக்குனர் இராம நாராயணன்  படத்தை எழுதி இயக்கியிருந்தார்.

 


ஆ.கெ.கோகிலன்

15-11-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!