ஒரு முதலாளியின் வாக்குமூலம்..!

 


எனது நிறுவனத்தில் படித்த பல மாணவர்கள் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு நிறுவனங்களிலும் வேலைசெய்யும் நிலையில் வெகுசில மாணவர்களே சுயதொழில்களில் ஈடுபட்டு, தாமும் நன்றாக வாழ்ந்து, சமூகத்திற்கும் பெரிய வேலைவாய்ப்புக்களைக்கொடுத்துள்ளார்கள்..!

அப்படியான ஒரு மாணவனை அண்மையில்  நியமித்த பழைய மாணவர் செயல் குழுவில் இணைக்க முனைய, அவர் பதிலளிக்காததால் அது சாத்தியமற்றுப் போய்விட்டது..!

இருந்தாலும் இன்று காலை அவருக்கு போன் எடுத்து என்ன மாதிரியான உதவிகளை எமக்குச் செய்ய முடியும் என்று கேட்கும்போது அவர் சொன்ன சில விடயங்கள்  எனக்கு மிகவும் கவலையாக இருந்தன..!

அதில், தான் மிகக் கஷ்டமான சூழலில் இருந்து, படிபடியாக முன்னேறி தற்போது ஏறக்குறைய 50 பேர்களுக்கு வேலைகொடுக்கக்கூடிய நிலைக்கு வந்துள்ளேன்..!  அதற்காக ஆரம்பத்தில்  திருகோணமலையிலுள்ள பிரதான வீதியிலுள்ள பிரபல கடைகளில் வேலைகேட்டு அலைவேன்..! சில நேரங்களில் வேலை தரமாட்டார்கள். கஷ்டப்பட்டு, சில நேரங்களில் வேலை கிடைத்தால், அதற்குச் சம்பளமாக 300 மாத்திரம் தருவார்கள்..! ஆனால் தான், இப்போது 3000 ரூபாய் கொடுத்தாலும் வேலைக்கு ஒழுங்காக வருகின்றார்கள் இல்லை. நாடு மாறும் வேளை,  தமது நிறுவனங்களில் வருமானங்கள் பெரிதும் வீழ்ந்து வருகின்றன..! நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் இடையே காதல் தொடர்புகளும், பின்னர் அதனால் வரும் பிரச்சனைகளும், ஏனைய சிக்கலான கால நிலைகளும், அண்மைய நாட்களில் தன்னை, நெருக்கடிக்கு ஆக்கியுள்ளதாகவும், தன்னால் இயன்ற ஒத்துழைப்பை எமது நிறுவன 25 ஆவது ஆண்டுப்பூர்த்திக்கு வழங்குவதாகவும் வாக்குத்தந்தார்.

மேலும் ஒரு விடயத்தை வலியுறுத்தினார். முன்பு தாங்கள் படித்த காலத்தில், காதல் என்றால் என்ன என்றே யோசிக்க முடியாத அளவிற்கு வீட்டுச்சூழல் இருந்ததால், தான் அந்தப்பக்கம் போகவே எண்ணவில்லை என்றார். ஒரே  ஒரு சேட்டை வைத்துக்கொண்டு, தோய்துத் தோய்து படிக்கவும், வேலைக்குச் செல்லவும்  எண்ணியதே தவிர, இப்படியான செயல்களில் ஈடுபட மனமும், சூழலும் இடம் கொடுக்கவில்லை. அத்துடன் குடும்பமும் சமூகமும் அதற்கு இடம் கொடுப்பதே இல்லை. தற்போது எல்லாம் மாறிவிட்டதாகவும், வீட்டில் வறுமை என்றாலும் காதலில் கவனம் செலுத்தும் பிள்ளைகள் அதிகம் என்றார். அது காதலா அல்லது காமமா என்று காலம் தான் பதில்சொல்ல வேண்டும் என்றும் சொன்னார்.

ஒரு சமயத்தில், காதல் காதல் என்று அலைந்து தமது வேலைகளைக் கெடுத்துவிட்டு, சில வருடங்களின் பின்னர்  விவாகரத்து, பிரிந்து வாழுதல் என்று கழுத்தை அறுக்கின்றார்கள்..! கஷ்டம் என்று கேட்க, காசை ஆரம்பத்தில் கொடுத்தால், அந்தக்காசுக்கே வேலைசெய்ய மறுக்கின்றார்கள் என்று தற்கால இளைஞர்கள் பற்றி, விசனம் தெரிவித்தார்..!

எமது இளைஞர் யுவதிகள் பலர் சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கு மனமுடைந்து, போதைப்பழக்கங்களைக்கற்று அதில் இருந்து விடுபடமுடியாமல் பெரும் அல்லல்படுவதைப் பார்க்க இன்னும் வேதனையாக இருக்கின்றது. மன அழுத்தமுள்ள சமூதாயம், மக்களையும், சிறார்களையும் அழுத்தங்களுக்கே தள்ளுகின்றது. விளைவு, சர்வ நாசமான சமூக உருவாக்கமே எஞ்சும் அளவிற்கு போகின்றது இந்தப்படலம்..!

எனக்குத் தெரிந்த ஒருவர் வெலிக்கந்த கந்தக்காட்டில் போதைகளில் சிக்குண்ட மனிதர்களை காப்பாற்றும் சேவை பற்றியும், அங்கு வந்து, காத்திருக்கும் பெரிய இடத்து பெற்றோர்கள் பற்றியும்  சொன்னார்..! கேட்கும் போதே ஆச்சரியமாகவும் அவமானமாகவும் இருக்கின்றது. படித்த  பெற்றோரே  பிள்ளைகளை சரியாக வளர்க்க முடியாமல் திண்டாடும்போது படிக்காதவர்களின் நிலை எப்படியிருக்கும்..?

நாடு சரியான பாதையில் போனால் தான், இளைஞர் சமூதாயத்தையும் அந்த வழியில் கூட்டிச்செல்ல முடியும். எந்த ஒரு பிள்ளையும் நாசமாகப் போகாமல் காப்பது,  இலங்கைத்தாயின் அனைத்துப்பிள்ளைகளின் தலையாய கடமையாகும்.

அழுத்தம் கொடுக்காமல் பிள்ளைகளை  ஆரோக்கியமாக வளர்ப்போம்..! எந்தத் தொழிலைச் செய்தாலும் திருத்தமாகச் செய்ய வழியைக்காட்டுவோம். இப்படியான  மக்களின் மன மாற்றமே, இலங்கைத்தாய் யாருக்கும் தலைகுனியாமல் நிற்க வழிவகுக்கும்.

 

ஆ.கெ.கோகிலன்

26-10-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!