கருப்பு (ப்ளாக்-Black)..!

 


 


இந்த பிரபஞ்சமே விசித்திரமானது..! புரியாமலே நாம், நான் பெரிது.. நீ பெரிது.. என்று மோதிக்கொள்கின்றோம். இங்கே யாரும் பெரிதும் அல்ல..! சிறிதும் அல்ல..! ஆகவே யாரும் எதற்கும் கவலைப்படத்தேவையில்லை. இது தான் இறைவன் பார்வையிலுள்ள உண்மைநிலை..!

பொதுவாக, கவலை என்பது மற்றவர்களுடன் உங்களது வாழ்க்கையை ஒப்பிடுவதாலே ஏற்படுகின்றது. உங்களுக்கு அந்த ஒப்பிடக்கூடிய அறிவு இல்லை என்றால், இப்படியான கவலைகளே வராது..!

மனிதன் ஒருவன் தான், பெற்ற அறிவாலே நன்மை அடைவதுடன்,  அதே அறிவாலே துன்பம் அடையக்கூடியதாகவும் இருக்கின்றான்..! இன்னும் சில காலங்களில் அறிவுகொடுக்கும் மையங்கள் மாதிரி அறிவுநீக்கும் மையங்களும் கொண்டவரவேண்டிய தேவை ஏற்படும்..! நாம் எந்த அறிவை எடுத்தால் நிறைவாக நிம்மதியாக வாழமுடியுமோ அந்த அறிவை மாத்திரம் பெற்றால் போதும். ஏனையவை எமக்கு  பிரச்சனைகளாக மாறலாம்..! அப்படியான தேவையற்ற அறிவை நாம் முற்கூட்டியே எடுக்கவில்லை என்றால் மிகவும் புத்திசாலிகளாக இருக்கலாம்..! இல்லை என்றால், அவற்றை எடுத்து, அதனால் நொந்து, பின்னர் மறைக்கற்றல் (கற்றல் நீக்கல்) செய்தே நிம்மதியான வாழ்விற்கு வரமுடியும்..!

நவீன மனிதர்களின் சிந்தனைகள் மிகவும் வீரியமானவை..! தேவையற்ற சிந்தனைக்குள் மாட்டினால், குழப்பங்களும், நிம்மதி இழப்புக்களும், சில சமயம் அதிர்ச்சியான, ஆபத்தான சம்பவங்களும் ஏற்படலாம்..!

இது தான், இந்தப்படத்தின் உட்கதை..!

படத்தின் கதைப்படி, ஒரு ஜோடி(ஜீவா மற்றும் பிரியா பவாணி), சில நாட்களைச் சந்தோசமாகக் கழிக்க ஒரு புதிய குடியிருப்பிற்குச் செல்லும் போது, அங்கே இவர்கள் மாத்திரம் தனியாக இருக்க வேண்டிய சூழல் இருக்கின்றது..! அப்படி இருக்கும்போது, இரவு மின்சாரம் தடைப்பட, கணவன் (ஜீவா) கீழேபோய்  ஜெனரேட்டரைப் போட்டுவிட்டு வருவதற்கு இடையில் பல விடயங்கள் நடந்து முடிகின்றன..!

இறுதியாக கணவனும் மனைவியும் பொலீசின் உதவியுடன் மீண்டும் இணைகின்றார்கள்.

இந்தக்கதைக்குள் பல விஞ்ஞான விடயங்கள் புகுத்தப்பட்டு, மிகத்தரமான ஒரு விளக்கத்தை இயக்குனர், தந்திருப்பதற்காக அவரைப் பாராட்டத் தோன்றுகின்றது..!

இதுவரை எந்தப்படத்திலும் அலசப்படாத ஒரு கோணத்தில் படத்தின் கதை நகர்கின்றது..! நேரக்கோடு (time line), கண்ணுக்கு புலப்படாத சுரங்கம் (invisible tunnel), மெய்யியல் (reality), சமாந்தர மெய்யியல் (parallel reality),

சமாந்தரப் பிரபஞ்சம் (parallel universe), புழுக்குழி (wormhole), விளையாட்டுவழி (game way), துறைநிலை (portal), மீ நிலை (super positioning ) போன்ற விடயங்களூடாக குவாண்டம் பௌதீகவியல் (quantum physics) என்ற கொள்கையில் கதை நகர்கின்றது.

பொதுவாக நாம், நேரம் ஒரு திசையில் அதிகரிப்பதை மட்டும் வைத்துக்கொண்டு, எமது மெய்யியல் வாழ்க்கை அமைகின்றது..! ஆனால் கணிதத்தில் அல்லது பௌதீகவியலில் பல நேரக்கோடுகள் வழியே வாழ்க்கையை நகர்த்த முடியும்..! ஒரு நேரக்கோட்டில், ஒரு மெய்யியல் வாழ்க்கையே தெரியும். அவ்வாறு தான் அமைக்க முடியும். அது தான் பிரபஞ்ச சமநிலைவிதி..!  ஒரு மெய்யியலில், இரண்டு வாழ்க்கை வாழ முடியாது..! வேண்டும் என்றால், ஒரு வாழ்க்கையை, கனவு வாழ்க்கையாகக் கருதினால் அது முடியும்.  இப்படியான நிலையில், இரண்டு மெய்யியல் வாழ்க்கை கலக்கும் சந்தர்ப்பங்களில் பெரும் குழப்பங்கள் ஏற்படும்..!

இதனை விளங்கிக்கொள்ள, எமது வாழ்க்கையை ஒவ்வொரு காட்சியாக (Scene by Scene) பதிவு  செய்து வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட ஒருவரோ அல்லது இருவரோ சேர்ந்து, நேரத்தை முன்னுக்கு அல்லது பின்னுக்கு நகர்த்தும் அற்புத வாய்ப்பைப் பயன்படுத்தி,  குறிப்பிட்ட அந்தக் காட்சிகளைப்பார்க்கும் போது பல வேடிக்கைகளை, நாம் உணர முடியும். அங்கே நாம் இருந்தாலும், அந்தக்காட்சியில் இருந்த எமக்கும், அந்தக்காட்சியை அவதானிக்கின்ற எமக்கும் நிறைய வேற்றுமைகள் இருக்கும். இந்த சந்தர்ப்பத்தில், ஒரு மெய்யியல் வாழ்க்கைக்குள் இருந்துகொண்டு இன்னொரு மெய்யியல் வாழ்க்கைக்குள் புகுந்தால் பிரளயம் தான் எற்படும்..!

இந்தப்படத்தில் அவ்வாறான பல பிரளயங்கள் ஏற்பட்டாலும், இயற்கைச் சமநிலைவிதிப்படி அதற்குரியவை மாத்திரம் தான் அங்கே இருக்க முடியும்.

குறிப்பாக, இந்தப்படத்தில் குவாண்டம் பௌதீகவியலின் அடிப்படையில், ஒரு இடத்தில் இருந்து பல நேரக்கோடுகள் பயணிப்பதாக சொல்வார் ஒரு வயதானவர். அந்த அந்த நேர கிளைக்கோடுகள் வழியேயான மெய்யியலானது அதன் பிரதான நேரக்கோடான உண்மையான அவர்களின் மெய்யியலை விட வேறுபட்டிருக்கும். படத்தில் ஒரு கட்டத்தில், காரை எடுத்துக்கொண்டு இருவரும் தப்ப முனைய, திரும்பத் திரும்ப அந்த கருப்புப் பகுதிக்குள் மாட்டி திரும்பத் திரும்ப அதே பாதையில் செல்வார்கள்..! அதாவது ஒரு லூப்பில் (Loop) இருந்தார்கள்..! தப்பிக்கவே முடியவில்லை..!

குறித்த அந்தக்கருப்புப் பகுதியில் ( அதாவது ஒரு இடத்தில்)  நேரச்சந்தி ஒன்று இயற்கையாகப் பலவருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டதாகவும், அந்தச்சந்தியில் நேரக்கோடுகளில் மாறி மாறிப்போக வாய்ப்பு இருப்பதால், அதிசய நிகழ்வுகள் நடப்பதாகவும், மீ சந்திரன் (Super moon) காலத்தில் இவ்வாறான நேரக்கோட்டு மாற்றங்கள் நடப்பதாகவும், அந்த சமயத்தில் படத்தின் இறுதித் தீர்வுக்காட்சியை அமைத்துள்ளார் இயக்குனர்..!

குறிப்பிட்ட நிமிடங்களில், நேரச்சந்தி மறைந்து வழமையான மெய்யியல் சூழலில் வாழ்க்கை நகரும்.

பொதுவாக, முப்பரிமானச் சூழலிலே எமது வாழ்க்கை நடக்கின்றது.  அதேநேரத்திலே எமக்குத்தெரிய பல் பரிமாண (multi dimension) வாழ்வியல் விடயங்கள் பிரபஞ்சத்தில் கொட்டிக்கிடக்கின்றன..!

பல் பிரபஞ்சங்கள் (multiverse) இருப்பதாகவும், நாம் ஒன்றுடன் மட்டும் நேரடியாகத் தொடர்புபட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது..! இந்தப்படத்தில் குறித்த ஒரு நேரக்கோடு நிலையாக கருதப்பட்டுள்ளது.  அதேபோல், நேரக்கோட்டை மாற்றி, மாற்றி மெய்யியல் பாத்திரங்களை நிலையாக வைத்தும் இயற்கையைப்பார்க்கலாம்.

படத்தில் ஒரு பரிசோதனையை பற்றிக்கதைப்பார்கள். ஒரு பெட்டிக்குள் பூனையையும், விஷம் கலந்த உணவையும் வைத்து, சில நேரத்திற்கு அடைத்துவிட்டால், இரு நிலைகளில் சூழல் மாறலாம். ஒன்று பூனை இறந்திருக்கும்..! இன்னொன்று, விஷ உணவை உண்ணாமல் உயிருடன் இருக்கும்..!  ஆனால் இரண்டில் ஒரு நிலை தான் ஒரு மெய்யியலில் பொருந்தும்.  இந்தப்படத்தைப் புரியும் அடிப்படையே இந்தப்பரிசோதனை தான்..!

 என்னைப்பொறுத்தவரை, அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதமான படம்.  தொழில்நுட்பங்கள், நடிப்பு அனைத்தும் சிறப்பு.

இயக்குனர் கேஜி.பாலசுப்பிரமணிக்கு எனது விசேட பாராட்டுக்கள்.

 


ஆ.கெ.கோகிலன்

09-11-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!