மறதியும், கவலையீனங்களும்..!

 



வழமையாக மாலைவேளை சிறுதூக்கம் போடுவது வழமை. இருந்தாலும் நுளம்புகள் தொல்லைப்படுத்தி, ஒரு மணித்தியாலத்திற்குள் எழுப்பிவிடும். இன்றும் குட்டித்தூக்கம் போடப்போகவே, மாலை 5.50  ஆகிவிட்டது. அத்துடன் நுளம்புகள் கடிக்காமல் இருக்க, நுளம்பு வலையையும் விரித்து உள்ளே படுத்தேன்.  என்ன நடந்தது என்றே தெரியவில்லை..! இரவு 8.30மணி ஆகிவிட்டது.  எனக்குரிய உணவைத் தயார்படுத்தியவர், தொடர்ந்து போன் எடுத்துக்கொண்டு இருந்தார்..! வழமையாக மாலை 7.30 மணிக்கே எனது இரவு உணவை முடித்துவிடுவேன்.

இன்றைய நிலைமை விளங்கியது. அவர் விடிய, வேளைக்கு எழும்ப வேண்டும். அப்போது தான் அவரால் நாளைய வேலையைச் சிறப்பாகச் செய்ய முடியும். கடந்த சில நாட்கள் தீபாவளி விடுமுறை என்பதால் எனது செயற்பாடுகள் மாறியிருந்தன..! ஊரில் இரவு படுக்கைக்குப் போவதே அடுத்தநாள் தொடங்கி, ஒரு மணிநேரம் கடந்திருக்கும்..! இந்த விசேடகுணம்  எனக்கு நீண்ட வருடங்களாகத் தொடர்ந்தது..!  திருமலை வந்ததால் சற்று மாறியிருந்தது. ஆனால், இன்று  இங்கும் அந்தக்குணம் தொடர வாய்ப்பு வந்தது..! நல்ல வேளை,  வந்த தொலைபேசி அழைப்பு, எனது வழமையான இந்தவூர் திட்டத்தைச் செயற்பட அனுமதித்துவிட்டது..!

 இன்று காலைச்சாப்பாடு நேரத்திற்கு சாப்பிடச்செல்ல, அலுவலகம் திறக்க நேரமாகிவிட்டது. வழமையாக வரும் அலுவலக உதவியாளர்கள் ஒருவரும் நேரத்திற்கு வரவில்லை..! இருந்தாலும் இன்னொரு ஊழியர் வேளைக்கு வந்ததால், அவரின் உதவியால் அலுவலகம் திறந்து, காலைச்சாப்பாட்டை வழமையான நேரத்திற்குள் முடித்தேன். இவ்வாறே மதியமும் முடிக்க நினைத்து, இடையிடையே வந்த வேலைகள் காரணமாக  தாமதமாகி, மாலை 2 மணிக்கு கிட்டவாகவே மதிய உணவை முடித்தேன்.

 காலை 9.00மணிக்கு தபால் மூல வாக்கெடுப்பை நடாத்த நினைத்தேன். அலுவலக உதவியாளர்களின் தாமதத்தால் 9.30 தாண்டியும் தொடங்க முடியாமல் இருந்தது..! ஏறக்குறைய இதேநேரத்தில் எமது வாக்கெடுப்பைப் பார்ப்பதற்கு,  கச்சேரியில் இருந்து அதிகாரி ஒருவர் வந்திருந்தார்..! அவருக்கு முன்னாடியே அனைத்து தபால்மூல வாக்காளர்களையும் வாக்களிக்கச் செய்து, அவருக்கும் ஒரு சிறுவுணவை வழங்கி, அந்த அரச  அதிகாரியின் கடமையை நிறைவு செய்ய உதவினேன். இருந்தாலும், தபாலகத்தில் கொடுக்கும் ஒரு படிவத்தை, மாறி எடுத்துக்கொடுத்துவிட்டேன். அவர்களும் மன்னித்து, ஏற்றுக்கொண்டார்கள்..!  கடந்த தேர்தலின் போதும், தபால் மூலக்கடமையில் இவ்வாறான சில சிறிய தவறுகள் நடந்தன..! இம்முறை  முற்றாகத் தவிர்க்க நினைத்தாலும், அவ்வாறான தவறுகள் மீண்டும் இருந்தன..!

 நேற்றும்  யாழ் வீட்டில் இருந்து வரும்போது,  மனைவி மற்றும் பிள்ளைகளிடம் விடைபெறவேண்டியிருந்தது.  அப்போது, எனது பழைய  கையடக்கத் தொலைபேசியை எனது மேல்வீட்டு குசினியிலுள்ள சார்ஜ்ஜரில் போட்டுவிட்டு, மறந்து வந்துவிட்டேன்..! அந்தப்போனை வாங்கி ஏறக்குறைய 12 வருடங்கள் கடந்துவிட்டன..! அந்தபோனுக்குரிய உபகார சிம்வாங்கி, ஏறக்குறைய 20 வருடங்கள் கடந்துவிட்டன..! அந்த போனும், சிம்மும் என்னுடன் எப்போதும் தொலைவிடங்களுக்கும் வருவதுண்டு..! நவீன போன் இருந்தாலும், அந்தப்போன் மாதிரி வராது..! இரண்டு வாரங்கள் சார்ஜ் நிற்கும்..!  என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை..? சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் ஒருவாறு திருத்தி, இன்னமும் எனக்கு உதவ அந்த போன் காத்திருப்பது ஆச்சரியமானது..! குறைந்த பட்சம் எனது அம்மாவுடன் கதைப்பதற்கு, அது உதவுகின்றது..! இம்முறை எனது மறதியால், அது என்கூட அருகில் இல்லை..!

மறதியும் கவலையீனங்களும் பல சிக்கல்களை  ஏற்படுத்தி வழமை செயற்பாடுகளைக் குழப்புகின்றன..!  இருந்தாலும் அந்த மறதியும், கவலையீனங்களும் தான், தவறான, வெறுப்புக்குரிய மனிதர்களையும் மன்னித்து, தொடர்ந்து அவர்களுடன் சுமூகமாகப்பழக வழியமைத்துத் தருகின்றது..!  நான் கோபிக்க வெளிக்கிட்டால், என்னுடன் தற்போது ஒருவருமே இருக்க முடியாது..! இது தான் உண்மை..! இயற்கைக்கும் அது தெரியும்..!  அதற்காகத்தான்  இயற்கை இந்த பரிசை எனக்குத் தந்துள்ளது..!

 


ஆ.கெ.கோகிலன்

04-11-2024.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!