ஆசிரியரின் பெருமை..!
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் என்னவாக இருக்க ஆசைப்பட்டாலும்
அது நடப்பதும், நடக்காமல் போவதும் இயற்கையின் கையில் இருப்பதாகவே நான் நினைக்கின்றேன்.
சில துறைகளில் எனக்கு ஆர்வம் ஏற்படுவது கிடையாது. சிறுவயதில் நான்
ஒரு நாளும் நினைக்கவில்லை ஒரு ஆசிரியராக வருவேன் என்று..!
க.பொ.த சாதாரண பரீட்சையைத்
தாண்டுவேனா என்ற அவநம்பிக்கையில் இருந்த காலம், எனக்கு ஞாபகம் உள்ளது..!
எனது ஒன்றைவிட்ட அண்ணன் தொடர்ந்து நன்றாகப் படித்துக்கொண்டிருந்தாலும்
க.பொ.த உயர்தரப்பரீட்சையில் கோட்டை விட, எனது தாயார் என்னைப்பார்த்து, அவனே அப்படி
என்றால் உனது நிலை என்ன..? என்பதை யோசித்துப்பார் எனச்சொல்வார்..! நான் என்னத்தை யோசிக்கின்றது..!
வாறது வரட்டும், போறது போகட்டும் என்று இருந்து விடுவேன்.
காலம், என்னை இந்தியா அழைத்துச்சென்று, ஒரு பட்டத்தையும், பல தொழில்கள்
செய்யும் ஆற்றலையும் கொடுத்து, அனுப்பினாலும் ஏதோ தெரியவில்லை என்னுடன் ஆசிரியர் தொழிலே
ஒட்டிக்கொண்டது..! பின்னர் அது வேறு வேறு பரிமானங்களை எடுத்து, இறுதியில் பணிப்பாளர்
ஆக்கிவிட்டது..!
இந்த வளர்ச்சியின் இடைப்பட்ட காலத்தில் பல வேறுபட்ட தராதரங்களையுடைய மாணவர்களை கண்டு, பின்னர்
கடந்து வந்துள்ளேன்..! பலரைத் தற்போது மறந்தே விட்டேன். சில தனித்தன்மை வாய்ந்த பிள்ளைகள்
மட்டும் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றார்கள்..!
அவ்வாறான சில பழைய மாணவ மற்றும் மாணவிகளை, நேற்று நடந்த கணக்கியல்துறை பழைய மாணவர்களின் செயற்குழு கூட்டத்தில்
பார்த்தேன். நானே சில தசாப்பங்கள் முன்னோக்கி சென்று, பின்னர் அவர்களுடன் யதார்த்த
உலகிற்குத் திரும்பினேன். அதில் ஒரு மாணவன், பல பிரச்சனைகளுடனும், குளப்படிகள் செய்வதுமாக
இருந்தான். முன்பு என்னைக் கண்டால் மறைந்து விடுவான் அல்லது சிரித்து மழுப்புவான்.
நேற்று அவனைக்கண்டேன். வயது 40 இற்கு கிட்ட வந்திருக்கும்..! பொறுப்புள்ள மனிதனாகப்
பார்க்கும் போது, மகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல் இன்னோர் பெண், எப்போது பார்த்தாலும்
சுறு சுறுப்பாக இயங்குவதும், கதைப்பதும் என்று சில நிமிடங்கள் அவருடன் செலவழித்தால்,
நமக்கும் அந்த சுறு சுறுப்புத் தொத்திவிடும்..! அவளும் வடக்கு மற்றும் கிழக்கில் நல்ல ஒரு பதவியில் இருந்துகொண்டு,
அடிக்கடி பிறநாடுகளுக்கும் சென்று வருவாள்..! இன்னுமோர் மாணவி, அவர் கண்களாலே கதைசொல்லித்திரிவாள்.
அவளும் பெரிய பெண்ணாக, பிள்ளைகளின் தாயாக, நல்ல பதவியில் இருப்பதைப் பார்க்க, அவர்களின்
வாழ்க்கையின் உயர்ச்சிக்கு சிறு பங்களிப்பு என்னாலும் ஏற்பட்டிருக்கலாம் என்பதில் சிறு
பெருமை உண்டு.
மற்றைய தொழில்களை விட தன்னிடம் படித்தவர்கள், சமூகத்தில் மதிப்பு மரியாதையுடன்
வாழும்போது, அவர்களுக்குப் படிப்பித்த ஆசிரியர்களின் மனம் மிகவும் சந்தோசப்படும். அதுமாத்திரமன்றி, தானே அவ்வாறு, இருப்பதாக எண்ணி
மனம் உவகைகொள்ளும்..! சில சமயம் நாங்கள் விரும்பியும் நடக்காத சில விடயங்களை, மாணவர்கள்
மிக இலாவகமாகச் செய்யும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை.
எல்லாத் தொழில்களும் நல்லது தான். அதிலும் ஒரு ஆசிரியராக இருப்பது
என்பது, இறைவனாலும், இயற்கையாலும் ஆசீர்வதிக்கப்பட்ட தொழில் என்பதைத்தாண்டி சேவையுடன்
கூடிய ஒரு சமூகச் சிற்பியாகவே ஆசிரியர் மாறுகின்றார்
என்பது தான் உண்மை.
சில நல்ல சமூகங்கள் தோன்றியதற்கு அங்கே இருந்த பல ஆசிரியர்கள் காரணமாக
இருப்பார்கள்.
நானும் அவ்வாறான ஆசிரியராக இருக்க முயற்சித்துள்ளேன் என்பதை இப்போது
உணர முடிகின்றது..! இறைவனின் கையில் இருக்கும்
கருவிகளே நாங்கள்..! பயன்படுத்துவது இறைவனே..!
ஆ.கெ.கோகிலன்
28-10-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக