மதத்தலைவரின் மரியாதை..!
நான் சில நேரங்களில் இந்து சமயத்தில் பிறந்ததற்காக வேதனைப்படுவதுண்டு..!
நான் நினைத்தாலும், சில விடயங்களை என்னால் செய்யமுடியாது என்பதுடன், எனது முயற்சிக்கு
அப்பால் அவை வரையறுக்கப்பட்டிருப்பதாக நினைப்பதுண்டு. எனது அம்மாவின் அண்ணன் ஒருவர்
எனக்குத் தெரிந்த வரை அசைவம் சாப்பிடுவது கிடையாது. ஒவ்வொரு நாளும் மூன்று வேளைக்கு
மேல் அவருடைய சாமியறையிலுள்ள சாயிபாபா உட்படப் பல சாமிகளுக்கு அர்ச்சனைகள் செய்து,
அமுது படைத்து, அதன் பின்னரே அவர் உணவை எடுப்பார்..! எனது வயதைவிட நீண்டகாலமாக அந்தப்
பயிற்சியைச் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றார்..!
அவரைப்பார்த்துப் பார்த்து எனக்குப் பயமே வந்துவிட்டது..! இவ்வளவு
உண்மையாகவும், தனது உடலை வருத்தியும் இறைவனை வணங்கினாலும் அவரால் ஒரு கோவிலுக்குள்
போக முடியாது..!
கோவில் அய்யரே அவ்வளவு ஆச்சாரமாக இருப்பாரா என்பதைச் சொல்ல முடியாது.
எத்தனையோ கோவில்களில் பூஜை செய்பவர்கள் கூட
உண்மையாகவும், ஆச்சாரமாகவும் இருப்பதில்லை. அவர்களும் மனிதர்கள் தானே. அதை நான் குறையாகச் சொல்லவில்லை.
இருந்தாலும் இதுவரை யாரையும் எனது மாமனாரும் குறைசொல்வதில்லை..! அவர்கள் எப்படி நடந்தாலும், அதனை ஏற்றுக்கொண்டு சென்றுவிடுவார்..! சில வேளைகளில் நான் கேட்கும் போது, இவ்வளவு ஆச்சாரமாக
இருந்துகொண்டும் உங்களை யாரும் கண்டுகொள்கின்றார்களே இல்லை என்பேன். அதற்கு அவர், “கொண்டுவந்த கர்மப்பயன்..” என்பதை மட்டும் சொல்வார்..!
அவருக்கு கிடைக்கும் மரியாதையைப் பார்த்துவிட்டு, அந்தப்பாதையினையே நான் நினைப்பதில்லை. அதனால், நான் சுத்த அசைவத்திற்கு
மாறி, என்ன கிடைத்தாலும் உண்பதே வழமை..! தற்போது கொஞ்சம் வயது காரணமாக அந்த அளவிற்கு
எடுக்க முடியவில்லை. ஏறக்குறைய 50 வயது வரை
எந்த நாளில், எது கிடைத்தாலும் உண்பது என்பது, எனது நிலைப்பாடாக இருந்தது..!
ஒரு கட்டத்தில் வீட்டில், அவர்கள் என்ன செய்கின்றார்களோ அதையே சாப்பிடுவதும்,
வீட்டைவிட்டு வெளியே வந்தால், எதையும் பார்க்காமல் உண்பதும் வழமையாக இருந்தது.
இப்போதும், வீட்டில் நிற்கும் போது சைவப்பழமாக இருப்பதும், வீட்டைவிட்டு வெளியேறினால், எதனையும் சாப்பிடும்
நிலையில் இருப்பதையே வழமையாக வைத்துள்ளேன். இன்னும் சைவத்திற்காகத்தேடி அலையும் நிலைக்கு
மனம் வரவில்லை. அப்படியான நிலைவந்தால், என்னால் இப்படி இருக்க முடியாது.
என்ன தான் சைவமாக இருந்தால் என்ன..? அசைவமாக இருந்தால் என்ன..? கோவிலுக்குள்
குறிப்பாக மூலஸ்தானத்திற்குள் நாம் இந்தப்பிறப்பில்
போகமுடியாது..!
ஆனால், டொக்டர் அம்பேத்கார் மாதிரி, கடைசிக்கால கட்டத்திலாவது மதம்மாறி,
தனது சமூகங்கள் மீதான கோபத்தை வெளிப்படுத்தினார்..!
பௌத்த மதத்தில் யார் வேண்டுமானாலும் ஒரு ஆமத்துறுவாக மாற முடியும்..!
அதனை எந்த வயதிலும் சாத்தியப்படுத்தலாம்..!
அதேபோல் கிறீஸ்தவத்திலும், இஸ்லாத்திலும் அந்த மாதிரியான வாய்ப்புக்கள்
உண்டு. இவ்வாறாக, உலகப் பெருமதங்களில் எல்லாம் நிலைமை இருக்கும் போது, ஏன் எமது மதத்தில் மட்டும் இந்த நிலை..? எமது இறைவன்களுக்கே இது தொடர்பாக வெளிச்சம்.
இந்தமுறை யாழில் இருந்து திருமலை வரும்போது, இரண்டு இடங்களில் நிறைய
சிங்கள மக்கள் ஒழுக்கமாகவும் அமைதியாகவும், ஏறக்குறைய அசைவின்றியும் இருந்தார்கள்.
நான் நினைத்தேன் ஏதாவது மரண வீடாக இருக்கலாம் என்று..!
பின்னர், எனது நிறுவனப் பாதுகாப்பு ஊழியர் ஒருவர், அதுபற்றிப்போதிய விளக்கம் தந்தார்..! அதாவது
ஒவ்வொரு சிங்கள கிராமத்திலும் ஒரு பன்சாலை இருந்தால், அந்தப்பன்சாலையிலுள்ள ஆமத்துறுவை
அந்த ஊர்மக்கள கௌரவிப்பார்கள்..!குறிப்பாக மூன்று மாதங்கள், அந்த ஆமத்துறு அந்தப்பன்சாலையிலே
இருக்க வேண்டும். வெளியே எங்கும் செல்லமுடியாது. அவருக்குத் தேவையானவற்றை அந்த ஊர்
மக்களே வழங்குவார்கள். கடைசிநாளுக்கு முதல்,
அந்த ஊர்மக்கள வந்து, இரவு முழுவதும் குறித்த ஆமத்துறுவுடனே இருப்பார்கள்..! அடுத்தநாள்
மதியம் மற்றும் இரவு நல்ல விருந்துணவு அனைவருக்கும் வழங்கப்பட்டு, ஆமத்துறுவின் பன்சாலை
வாசம் முடிவுறும். அதன் பிறகு , குறித்த ஆமத்துறு பன்சாலையைவிட்டு வெளியே
வரமுடியும். இந்தக்கால கட்டத்தில் ஊர் மக்களே அனைத்தும் செய்வார்கள்..! எல்லோரும் தமக்கிடையே
மொத்த வேலைகளைப் பங்குபோட்டு, அவற்றைத் தமது கடமைகளாகச் செய்வார்கள். அத்துடன் அந்த
ஆமத்துறுவின் ஆடையை அனைவரும் சேர்ந்து தைத்து, பின்னர் அதனைக்காவிக்கொண்டு சென்று,
குறித்த ஆமத்துறுவுக்கு அணிவிப்பார்கள்..!
இந்த நிகழ்வே தற்போது எல்லா இடங்களிலும்
நடைபெறுகின்றது..! அதில் இரண்டைத்தான் வரும்போது
நான் அவதானித்தேன்.
எமது நிறுவனத்திற்கு அருகிலுள்ள ஆண்டாள்குளத்திலுள்ள பன்சாலையிலும்
இன்றும் நாளையும் இந்நிகழ்வு நடைபெறுகின்றது. சுற்றியுள்ள பௌத்த ஊர்மக்கள் அதில் கலந்துகொண்டு
தமது ஆன்மீகக்கடமைகளை முடிப்பார்கள்.
இம்மக்களில் யார் விரும்பினாலும், ஆமத்துறுவாக மாறலாம். ஆனால் அதற்காகச்
சில தியாகங்களைச் செய்ய வேண்டும்..!
ஆனால், எமது சமயத்தில் யாரும்
அய்யராக வரக்கூடிய நிலைவரும்போது, சைவ சமயமோ
அல்லது இந்து சமயமோ உலகில் பெரும் சமயமாக மாற
வாய்ப்புண்டு..! அந்தச்சீர் திருத்தத்தை செய்ய யார் முன்வருகின்றார்களோ அவர்களே பிற்கால
இந்து சமய ஆசான்களாவார்..! இதனை, யாரையும் நோகடிக்கும் எண்ணத்தில் நான் எழுதவில்லை. நான் சொல்வது சிலவேளைகளில் நடந்துவிட்டால், மதம் மாறியவர்கள் கூட,
திரும்பத் தமது மதத்திற்கு மாற வாய்ப்புண்டு..!
அனைத்தையும் ஆண்டவன் அறிவான்..! ஆயுள் இருக்கும்வரை அடக்கத்துடன் இருப்போம்.
ஆ.கெ.கோகிலன்
05-11-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக