இடமாற்ற அனுபவம்..!

 


காலை 3 மணிக்கு எலாம் (Alarm) வைத்துவிட்டு, இரவு வேளைக்கே படுத்துவிட்டேன். நித்திரை வரவில்லை..! இருந்தாலும் காலை நீட்டி சும்மா படுத்தேன். மூன்று மணிக்கு எழுந்து எலாமை நிறுத்திவிட்டு மீண்டும் அரை மணிநேரம் படுத்தேன். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தது மனதிற்கு நிறைவைத் தந்தாலும், போதிய நித்திரை இல்லாதது கவலையாக இருந்தது. கடந்த இரண்டு மூன்று நாட்கள் இப்படித்தான் இருந்தது..!

பின்னர் குளித்து வெளிக்கிட்டு, காலை 4.30 இற்கு காரில் திருகோணமலை நோக்கிப்பயணமானேன். தனியாகப் போவதால் நித்திரை வரப்பார்த்தது. ஒருவாறு சமாளித்து, காலை 9.00மணிக்குள் சென்றுவிட்டேன்..!  பின்னர் சம்பிரதாயச்சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டன.

SLIATE இன் தமிழ் கீதத்துடன் வேலைகள் தொடங்கின. பின்னர் புதிதாக வைக்கப்பட்ட சுவாமிப்படத்திற்கு  பூக்கள் வைத்து வணங்கிவிட்டு, வெளியே பால் காய்ச்சியபின்னர், மூன்று தேசியக்கொடி உட்பட மூன்று கொடிகளையும் கல்வி, முழு நிர்வாகம், அலுவலக நிர்வாகம்  என்ற வகையில் அதற்குப்பொறுப்பானவர்களால் முறையே ஏற்றிய பின்னர், மாநாட்டு அறையில் விளக்கு ஏற்றிப், பின்னர்  அலங்கரிக்கப்பட்ட பாற்ச்சோற்றை வெட்டி  எல்லா ஊழியர்களுக்கும் ஊட்டினேன்.  அதனைத்தொடர்ந்து அங்கு, என்னைத்தவிர அனைத்து ஊழியர்களும் ஏதோவோர் பங்களிப்புடன் கொண்டுவந்த பலகாரங்களை பகிர்ந்து உண்டோம். மனது மிகநிறைவாக இருந்தது. மதிய உணவே தேவைப்படவில்லை..!

பிறகு அலுவலக ரீதியாக, திருகோணமலை உயர்தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் ஏறக்குறைய 12 வருடங்களுக்குப் பிறகு  சேவையில் இணைந்தேன்..!

அதனைத்தொடர்ந்து, மேலும் சில அலுவலக வேலைகளைச் செய்துவிட்டு, அலுவலகத்திலே தங்க ஒரு இடத்தையும் தயார்செய்துவிட்டு, ஒன்றுவிட்ட தங்கைவீட்டிற்குச் சென்று, முறுக்கு, தொதல் மற்றும் தேநீர் அருந்திவிட்டு, சின்னம்மா வீட்டிற்குச் சென்று பல உறவுகளையும் சந்தித்து, நட்புக்களை வளர்த்ததுடன்,  ஆட்டு இறைச்சிக்குழம்புடன் பாணையும் உண்டேன். பின்னர், தங்கையையும், கணவரையும் அவரது வீட்டில் இறக்கிவிட்டு படுக்கைக்குப்  போனேன்.

கடும் களைப்பு..! A/C இற்கு நித்திரை அதிகமாக வந்தது..!

அதிகாலை 4.00 மணிக்கே நித்திரை கலந்துவிட்டது. வீட்டுயோசனைகள் வரத்தொடங்கியது. ஒரு மூடிய அறைக்குள் இருக்கும் போது, மனம் பல வித உணர்வுகளுக்கு உட்பட்டு பாரமாக மாறியது..!  உடனே அதனைத்தவிர்க்க, மூடிய கட்டடத்திற்குள் இருப்பதை தவிர்த்து, உள்கதவைத் திறந்து வெளியே வந்தேன். காற்றுப்பட்டது..! என்னையும், எனது உறவுகளையும் காற்று இணைத்தது போன்ற உணர்வு வந்தது..! கொஞ்சம் பாரம் குறைந்தது. அந்த சமயம் சிங்கள மொழி பேசும் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் என்னிடம் வந்து கதைத்தார். அவருடன் சேர்ந்து நிறுவனத்தைப் பலமுறை சுற்றிச்சுற்றிப்பார்த்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொண்டேன். அவரும் எனக்குத் தேநீர் போட்டுத் தந்தார்..! இருவரும் காலை சிறிய உடற்பயிற்சிகள் செய்யத் தீர்மானித்தோம்.

அதுமாத்திரமன்றி, இரவு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எனக்கு நல்ல ஒரு புது நுளம்புவலையை எனது கட்டிலில் கட்டிவிட்டார்கள்..! எனக்கு FAN, A/C  படுக்கும்போது தேவைப்படாது. அவற்றை விரும்புவதுமில்லை. இரண்டும் இல்லை என்றால் நுளம்புகள் தூங்க விடாது..! அதற்கும் ஒரு வழியைப் பாதுகாப்பு  ஊழியர்கள் ஏற்படுத்திவிட்டார்கள்..!

நேற்றைய நாள் இவ்வாறே கடந்தது.

இன்றும் நேற்றுப்போல்  சகல வேலைகளையும் முடித்துக்கொண்டு காரில் யாழ்நோக்கிப் புறப்பட்டேன்.

மதிய உணவை எடுத்துக்கொண்டு புறப்பட்டதால், வரும் வழியில் நித்திரை வரப் பார்த்தது..!  தூங்காத வகையில் கஷ்டப்பட்டு முயன்றபடி ஓடி, ஒருவாறு மாலை 6.15இற்கு வீடு வந்தேன். எல்லோருக்கும் மகிழ்ச்சி..! வீட்டில் இருக்கும் போது இதுவரைகிடைக்காத ஒரு நிறைவு இன்று வந்ததது..! அதுமாத்திரமன்றி, நாளை பரீட்சை எழுதும் மகளுக்கு, ஒரு தெம்பு வரும் என்பதும் எனது எண்ணம். அத்துடன் யாழ் நிறுவனத்திற்குப் போய், கடமைகளை முற்றாக கையளிக்க வேண்டும் என்பதும் எனது இன்னொரு நோக்கம்.

 


ஆ.கெ.கோகிலன்

03-01-2024.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!