மழையிலே அறிந்த தொடர்புகள்..!

 



தமிழில் மாரி காலம் என்றால் மழை தான். ஆங்கில வருடத்தில் ஜனவரி வந்தாலும் தைப்பொங்கல் வரும்வரை, தமிழில் மார்கழியே என்பதை உணர்த்தும் வகையில் இயற்கை தொழிற்படுகின்றது.

நேற்று அதிகாலை 4.00மணிக்கு வீட்டிலிருந்து வெளிக்கிட்டு திருகோணமலைவர  காலை 8 மணியைத் தாண்டிவிட்டது.

இருந்தாலும் நான் மிகவிரைவாக வந்துவிட்டதாகவே நினைக்கின்றேன். ஹொறோப்பொத்தானை தாண்டிய பின்னர் பிடித்த மழை இரண்டு நாளாகத் தொடர்கின்றது..!

வழமைபோல் அலுவலக வேலைகளை முடித்துக்கொண்டு படுக்கச்செல்ல, ஒரு நண்பர் என்னைத்தேடி வந்தார். அவர்களுடன் சில மணிகள் எனது நிறுவனத்திலே செலவிட்டுவிட்டு, அவருடைய  பல வீடுகளில் ஒரு வீட்டிற்குச் சென்றேன். அங்கு பல விடயங்களை அவரிடம் கற்றுக்கொண்டேன். என்னைப்போல் ஒரு கணித பாட ஆசிரியராக இருந்துகொண்டு, பல வேலைகளைத் தானே செய்கின்றார். அது மட்டும் போதாது என்று பல பிள்ளைகளைப் படிப்பிக்கின்றார்..!  அதுவும் உறவினர் அல்லாத,  உதவிகள் கிடைக்காத கஷ்டப்பட்ட பிள்ளைகளுக்கு, பல விதங்களில் அவர்களது வாழ்க்கைத் திறனை விருத்திசெய்ய வேண்டிய வழிகளைக் காட்டிக்கொடுக்கின்றார்.

படிப்பதால் அரச வேலை தேடுவதைவிட, தனக்கான வேலையைத் தானே செய்யக்கூடிய ஆற்றலை ஊட்டுகின்றார்.  சாதாரணமான குடும்பத்தில் இருந்து வந்தவர், இவ்வளவு விடயங்களைச் செய்யும் போது, எனக்கு மிகப்பெரிய மனிதராகத் தோற்றுகின்றார்..! அதே நேரம் பெரிய மனிதர்களாக காட்டிக்கொள்பவர்கள், அவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது மிகச்சிறியவர்களாகத் தெரிகின்றார்கள்.

வாழ்க்கையில் எவ்வளவு தூரம்  உயரப்பறக்கின்றோம் என்பது முக்கியம் கிடையாது..!

வாழ்க்கையில் எவ்வளவு  தூரம் உறுதியாக நடக்கின்றோம் என்பதே  முக்கியமானது..!

அதனை நிறைவாகச் செய்து, பெரு மனிதனாக எனக்கு காட்சி தருகின்றார் அந்த நண்பர்..!

அதன் பின்னர் கடும் மழைக்கு மத்தியிலே கொத்துரொட்டியை வாங்கி, இரவு உணவாக எடுத்துவிட்டு உறங்கினேன்.

மழை இரவிலும் கொட்டியது.

காலை வழமைபோல் கடமைகளை முடித்து, பல அலுவலக வேலைகளையும் செய்து, மேலதீகமாக எனது மாணவர் ஒருவரைச் சந்தித்து, 25 வருடங்களுக்கு முன்னோக்கிச் சென்றேன்..! அவருடன் கதைக்கும்போது எனக்கு அவர் வகுப்பில் இருந்த மாதிரியே தெரிந்தது..!

பல மாணவர்களது நிலைகள் பற்றியும், அவர்களது தொடர்புகள் பற்றியும், தெரிவித்தோடு, அந்தப்பாடசாலைக்குப் போகவும் ஒரு திட்டத்தைப்போட்டோம்.

இதிலும் ஒரு ஆச்சரியம். அந்த மாணவரின் மனைவியும் என்னிடம் படித்துள்ளார்..! காற்று எல்லோரையும் இணைப்பது போல் நானும் அவர்கள் இருவரையும் இணைக்கின்றேன்.

மழையால் இன்று முழுவதும் எமது நிறுவனத்திலேயே கழித்தேன்.  அடுத்தநாள் வந்தது. எனது நிறுவனத்தில் படித்த மாணவர்கள் சிலரை சந்தித்தேன். மாணவர்களைக் காணும் போது ஒரு தெம்பு மனதிற்குள் எழுகின்றது. இவ்வளவு காலம் கல்வித்துறையில் இருந்தாலும், எமது பலமே எமது மாணவர்கள் தான். அந்த வகையில் மேலும் ஒருவர் வந்தார். கையில் பூங்கொத்துடன் வந்தார். ஒரு கல்வி நிறுவனத்தை நிர்வாகிக்கும் அவரது தன்நம்பிக்கை எனக்கே ஒரு பெருநிறைவைத் தந்தது. கஷ்டப்பட்டு முன்னேறினால் நிச்சயம் அதற்கான பலனை காணலாம் என்பதற்கு ஒரு சான்றாகவும் திகழ்வது, கற்பித்த ஆசிரியர்களுக்கு ஒரு மனமகிழ்ச்சி. அது எனக்கும் இருந்தது.

என்னால் முடிந்த உதவிகளையும் அவருக்கு செய்வதாக வாக்குக்கொடுத்தேன்.

சேவையை நோக்காகக் கொண்ட நிறுவனங்களின் இருப்பு நிலையானது. மாறாக செயற்பட்டால், காலமே காணாமல் செய்துவிடும். இது தான் வரலாறு.

புரிந்து செயற்படவேண்டும் என்று நான் கற்ற பாடத்தையும் கடத்தினேன்.

நான் திருகோணமலையில் இருக்கும் காலத்தை சிறப்பாகப் பயன்படுத்த விரும்புகின்றேன். கடந்த சில நாட்கள் கடும் மழை பெய்தது. நேற்றும் இன்றும் மழை விட்டதால், அதிகாலை உடற்பயிற்சி செய்ய முடிந்தது.

எமது நிறுவனப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இராணுவத்திலும், நேவியிலும் வேலைசெய்தவர்கள். அவர்கள் மூலம் எனக்கான இரு நாள் பயிற்சிகளைச் சிறப்பாகச் செய்தேன்.  என்னைவிடச் சிறியவர்கள் என்றாலும் உடற்பயிற்சியில் நிபுணத்துவம் பெற்றவர்கள்..! 55 வயதில் திரும்ப உடல் மீது கவனம் வந்தது  எனக்கும் ஆச்சரியமானது தான். முன்பு, பல வருடங்களாக அந்தக்கரிசனை குறைந்து இருந்தது. வீட்டிலும், அலுவலகத்திலும் எனக்கு இருந்த வேலைகளைச் செய்தால் போதும் என்று நினைத்து இருந்தேன்.

இப்போது, இன்னும் ஆரோக்கியமாக இருக்க நினைக்கின்றேன். சில கடமைகள் முடிக்கும் வரை அதனைத் தொடர முடிவு செய்துள்ளேன்.

இன்று வெள்ளிக்கிழமை. மாலை பரீட்சை தொடர்பான இணைப்பாளர் பணி உள்ளது. அத்துடன் இன்று  யாழ் வீட்டிற்கும் போக வேண்டும். எனது நண்பர் ஒருவர், யாழ்ப்பாணத்திலும் அவருக்கு வீடு, காணி உண்டு. ஆனால் மனைவி பிள்ளையுடன் திருகோணமலையிலே வசிப்பவர். என்னுடன் வரவிரும்புவதாகச் சொன்னார். பின்னர் குடும்பத்தினர் எல்லோரும் வருவதாகக் கூறினார்.

சொன்னது போல், அனைவரையும் கூட்டிக்கொண்டு இரவு வந்து சேர்ந்தோம்.

தனியாக வரும்போது ஏற்படும் உணர்வு, இன்று தகர்ந்து கலகலப்பாகக் கதைத்துக்கொண்டு ஆற அமர வந்து சேர்ந்தது, இன்னொரு வித்தியாசமான அனுபவமாக, இந்தப்பயணம் இருந்தது.

 

ஆ.கெ.கோகிலன்

12-01-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!