அயலான்..!

 



2024 பிறந்த பிறகு, எனது வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றம் வந்தது..! அதனை நான் விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டேன். சிலவேளை எனது குடும்பத்தினருக்கு அது பிடிக்காமல் போயிருக்கலாம்.

இருந்தாலும் எனது மனதிற்குச் சரியென்றுபடுவதையே நான் செய்ய விரும்புவேன். இந்த சமயத்தில் எனது முடிவு, எனது மனதிற்கு நிம்மதியையும், ஒரு நிறைவையும் தந்துள்ளது.

அதனைக்கொண்டாட பல வழிகளில் ஈடுபட்டுள்ளேன். இன்று அந்தவகையில் மனைவி, பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு, யாழில் உள்ள பிரபல தியேட்டரில் அயலானைப் பார்த்தேன்.

படம், கணினி வரைபியலில் மிகச் சிறப்பாக இருந்தது..! கதையும் ரசிக்கக்கூடியதாக இருந்தது.

பூமியை அழிப்பதில் அயல்கிரகங்களில் இருப்பவர்களைக் காட்டிலும், பேராசையாலும், ஆணவத்தாலும் மனிதர்கள் முயல்வதைப் பார்க்க வேதனையாக இருந்தது. நாமே நம்மீது அக்கறையில்லாமல் இருந்தால் யார் தான் நம்மைக் காப்பார்கள்..? இறைவன் மீது குறை சொல்வதைவிட இயற்கையைப் பேண முயலவேண்டும். மற்றைய மனிதர்களை அழித்து சம்பாதிக்கும் பணத்தால் நாம் எவ்வளவு காலம் நிறைவாகவும் நிம்மதியாகவும் இருக்க முடியும்..?

பூமி அனைவருக்கும் சொந்தம். அனைவர் என்றால் மனிதர்கள் மட்டுமல்ல..! மற்றைய உயிரினங்களையும் கணக்கில் எடுக்க வேண்டும். அவற்றினது ஒப்புதல்களும் வேண்டும். ஒரு, ஆயிரம் வருட கற்றலில் ஈடுபட்ட சமூகம் என்பதால், ஏனைய உயிரினங்களை ஏமாற்றுவது தவறு தான்.

படத்தின் கதையே  வியாபார ஆசையைக்காரணம் காட்டி, பூமிக்கடியில் இருக்கும் வளத்தைப் பெற முயல்வதும், அதனூடாக ஆதீக்க சக்கியாக உருமாறும் நோக்கத்தைக் கொண்ட வில்லனையும், அவன் கூட்டத்தையும் தடுப்பதற்கு ஹீரோவும், அதற்குத்துணையாக வேற்றுக்கிரகவாசியும் உதவுவதே கதை.

படம் பார்ப்பதற்கு போரடிக்கவில்லை. நடிப்பு, நகைச்சுவை, தொழில்நுட்பம் எல்லாம் தரமாகவும் சிறப்பாகவும் இருந்தது. இசையும் மிரட்டலாக இருந்தது. பாடல்கள் மனதில் நிற்கவில்லை.

இயற்கையை நாம் பாதுகாத்தால், அது எம்மைப் பாதுகாக்கும் என்ற ஒரு கருத்தை மையமாக வைத்தே கதை எழுதப்பட்டுள்ளது. நேற்று, இன்று நாளை பட இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இப்படத்தை சிறப்பாக  எழுதி இயக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு இந்தப்படம் ஒரு சிறந்த ஜனரஞ்சக நடிகர் என்ற பெயரை நிச்சயம் வாங்கிக்கொடுக்கும். ராகுல் ப்ரித்தி சிங் மற்றும் இஷா கோபிகரின் நடிப்பு சிறப்பாக இருந்தது. படத்தை நகைச்சுவையுடன் கொண்டுசென்றது, பொங்கல் காலத்தில், அனைவரும் ரசிக்கும் படமாக வந்துள்ளது..! பொங்கல் ஓட்டத்தில், அயலானுக்கும் ஒரு இடத்தை மக்கள் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையை, படத்திற்கு வந்த கூட்டம் தருகின்றது..!

 


ஆ.கெ.கோகிலன்

26-01-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!