உறவுகளின் கொண்டாட்டங்கள்..!

 



திருகோணமலைக்கு வந்து ஒரு மாதம் முடிய முதலே தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் யாழ்ப்பாணத்தில் நிற்கவேண்டிய சூழல் வந்திருந்தது..! 19ம் திகதி மாலை 4.00 மணிக்கு எனது மச்சாளின் மகனுடன் திருகோணமலையில் இருந்து வெளிக்கிட்டு, யாழ்வந்து எனது வீட்டை அடைய இரவு 8.30மணியைத் தாண்டிவிட்டது. அன்று மருமகனை எனது வீட்டில் தங்கவைத்தேன். அவர் திருகோணமலையில் இருந்து வெளியே வந்து தங்குவது குறைவு என்றார்..! இருந்தாலும் அவரைப் பார்ப்பது எனது கடமை. அன்றைய பொழுது விரைவாகக் கழிய அடுத்த நாள் மச்சானின் மகளின் பொன்னுருக்கும், அதனைத் தொடர்ந்து கன்னிக்கால் நடுகையும் இருந்தது. மனைவி மற்றும் மச்சாளின் மகனுடன் சென்று அனைத்துக்கடமைகளையும் நிறைவேற்றினோம். பல தடவைகள் அங்கு நான் கார் சாரதியாகவே நடந்துகொண்டேன்.

வீடு திரும்பும்போது, மச்சாளின் மகனும் அங்கேயே நிற்கப் பிரியப்பட, நானும் அவரை அங்கேயே விட்டுவிட்டு வந்தேன்.

அடுத்த இருநாட்கள் வீட்டுவேலைகளுடன் கழிந்தது..!

24ம் திகதி திருமணம் நடந்தது. அன்றும் பல வேலைகள் எனக்கு காத்து இருந்தன. அதிகாலையே போய், அனைத்துக்கடமைகளையும் முடித்து வெளியே வர இரவு 8.00 மணி தாண்டிவிட்டது.

பல உறவுகளுடனும், புதிய உறவுகளுடனும் அன்பைப் பரிமாறியது மறக்கமுடியாத நினைவாக மாறியது..!

அடுத்த இருநாட்களும் வீட்டுவேலைகளுடன் பொழுது கழிய, 27ம் திகதி கிறீஸ்தவ முறைப்படி அவர்களின் திருமணம் மீள, “அடைக்கலமாதா ” என்ற உயரப்புலத்திலுள்ள ஒரு தேவாலயத்தில் நடந்தது.

அதனைத்தொடர்ந்து நடந்த மதிய போசனத்தை முடித்துக்கொண்டு, குடும்பத்துடன் வீடு திரும்பினேன். எனது வாழ்க்கையில், பிள்ளைகளுக்கு,  கிறீஸ்தவ முறைப்படி திருமணம் செய்து வைக்கும் நிகழ்வை நேரடியாக் காட்டியது, இது தான் முதல்முறை. அவர்களுக்கும் அது புது அனுபவமாக இருந்தது.

இந்த மூன்றுநாள் நிகழ்வுகளிலும் நான் கார் ஓடியது தான் அதிகம். இருந்தாலும் மச்சானுக்கு உதவியதில் மிகுந்த சந்தோசம் உண்டு. உறவுகளைப் பெருக்க வேண்டும் என்பார்கள். குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. அதுபோல் தீதும் நன்றும் பிறர் தர வரா என்பதில் மிகுந்த நம்பிக்கை எனக்கு உண்டு.

ஞாயிறு அன்று பிள்ளைகளின் வேண்டுகோளுக்கு இணங்க அயலான் என்ற திரைப்படத்தைப் பார்க்க காகிள்ஸ் திரையரங்கிற்குப் பிள்ளைகளைக் கூட்டிச்சென்றேன். அனைவருக்கும் மகிழ்ச்சியை அந்தப்படம் கொடுத்தது. அது எனக்கும், பல நாட்களுக்குப் பிறகு பிள்ளைகளைப் படத்திற்கு கூட்டிச் சென்றதால் ஏற்பட்ட ஒரு திருப்தியும் கூட இருந்தது.

அடுத்தநாளான 29ம் திகதி தம்பியின் மகளின் சாமத்தியச் சடங்கு நடந்தது. அதிலும் எனது கடமையை பூரமாணமாகச் செய்த திருப்தி வந்தது. மூன்று தடவைகளுக்கு மேல் எல்லோரையும் ஏற்றி சாமத்தியவீட்டில் இறக்கினேன். தம்பி குடும்பம் எனது பிள்ளைகளின் சாமத்தியவீட்டிற்குச் செய்த அளவு உதவியை, என்னால் செய்யமுடியவில்லை என்றாலும் என்னால் இயன்ற உதவியை அவர்களுக்குச் செய்தேன் என்ற திருப்தி மட்டும் நிறைவாக உள்ளது.

இந்தச்சம்பவங்களுக்கு இடையே எனது தாயாரின் சகோதரி நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது உதவியைத் தேடிவந்தார். என்னால் இயன்றதை அவருக்குச் செய்து, நான் திருகோணமலை வரும்போது, அவரையும் கூட்டிவந்து வவுனியாவில், அவரது வீட்டில் விட்டுவிட்டு வந்தேன். பல நாள் என்மீதுள்ள கோபம் சற்று ஆறியிருக்கும் என்று நம்புகின்றேன். கோப்படாமல் உறவுகளுடன் பழகி, அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க இப்போது அதிகம் முயல்கின்றேன். வயது போகப் போகத் தான் ஞானம் மூளையால் வழிகின்றது..!

 

ஆ.கெ.கோகிலன்

31-01-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!