உறவுகள் வீட்டுக்கல்யாணம்..!

 


 


நேற்று தான் கொழும்பில் இருந்து வந்து பயணக்களைப்பைப்போக்கிவிட்டு, இன்று எனது உறவுகளின் கல்யாணத்திற்குப் போனேன். மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் எனது உறவினர்கள் என்பதால் அங்கு வந்த அனைவரும் உறவினர்களாக இருந்தார்கள். நீண்டகாலமாகக் காணாத எமது தாய்வழி உறவுகள் பலரைச் சந்தித்தேன். நான் சிறுவயதில் இருக்கும்போதே அவர்கள் பலர் நாட்டைவிட்டே சென்றுவிட்டார்கள். அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ளவோ அல்லது சந்திக்கவோ வாய்ப்புக்கள் வரவில்லை. வழமையாக வெளிநாட்டிற்குப் போனால் அங்கு அந்தவாழ்க்கைக்கு மாற அவர்களுக்கு கால் ஆயுட்காலம் வேண்டும். அதன் பிறகு தான் அவர்களால் மற்றவர்களை நினைத்துப் பார்க்க முடியும். அப்படிப்பட்ட சூழல் தற்போது எனது குடும்பத்திற்குள்ளும் வந்துள்ளது..! பலரை புதிதாகச் சந்தித்துள்ளேன். இனி அவர்களுடனான உறவை தொடர வேண்டும். உள்நாட்டு யுத்தம் செய்த  வேலை, உறவுகள் எல்லாம் சிதறின..! கொரோனா வந்தததன் பின்னர்  ஏற்பட்ட மாற்றங்கள், எல்லோருக்கும் தமது சொந்த ஊரின் முக்கியத்துவம் புரிந்துள்ளது..! உறவுகளின் அருமை தெரிகின்றது..! நண்பர்களின் உதவி நெகிழ்விக்கின்றது..!

இறைவன் ஊரிலே நிறைவாக இருக்க படைத்தால், அதனைப் பெரிமையாகவும் பாக்கியமாகவும் நினைத்துப் பழகவேண்டும். மாறாக இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல் நினைப்பது பார்க்க மட்டுமே..!

உண்மை மாறானது..!

இன்றைய திருமணத்தில் எமது உறவினர்களின் கெத்துப்புரிந்தது..! உறவுகளில் ஒரு பகுதி, படிப்பைப் பற்றிய அக்கறையில்லாமல் வெளிநாடுகள் சென்று, கிடைத்த வேலைகளில் உழைத்து, தற்போது பெரும் பணம் படைத்தவர்களாக மாறி எம்மை போன்ற இலங்கை வாசிகளை குறிப்பாக படிப்பையும், அரச வேலைகளில் இருப்பவர்களையும் ஒன்றுமே இல்லாதவர்கள் போல் மாற்றிவிட்டார்கள்..! அதேசமயம், உறவுகளின் இன்னோர் பகுதியினர் நன்றாகப் படித்து அரச உயர்பதவிகளில் வடக்கு கிழக்கு மட்டுமல்லாது முழு இலங்கையும் மதிக்கும் நபர்களாக மாறி, உறவினரான ஒரு பகுதி வெளிநாட்டினரை  அசர வைத்தார்கள்..!

இந்தத் திருமணத்தில், படிப்பும், பணமும், அந்தஸ்துக்களும் ஒருமித்து அமைவதைப் பார்க்கும்போது மனம் ஆச்சரியப்பட்டது. ஒரு காலத்தில் வளரும் சமூகமாக மதிக்கப்பட்டவர்கள், தற்போது உலக சமூகமாக, இனமாக மாறி வளர்ந்திருப்பது இயற்கையின் அடுத்த கட்ட நகர்வு என்பதை மட்டும் எனக்கு உணர்த்தியது. இனி நாடு என்று சிந்திப்பதை விட, மனிதர்கள் என்றும், உலகம் என்றும் சிந்திப்போம். இயற்கையின் அடுத்த மிரட்டல் இன்னும் ஆச்சரியமான  மனிதர்களுக்குப் போட்டியான, ஏன் முழு உலகத்திற்கே சவாலான  சக்திகளின் செயற்பாடுகளைப் பார்க்கலாம்..!  அனுபவிக்கலாம்..! அவற்றால் அழியலாம்..! ஏன்..? நன்மையையும் பெறலாம்..! ஆனால் இயற்கை மட்டும் எமக்கு ஆதரவாக இருக்க பார்க்க வேண்டும். அதற்காக எதுவும் செய்யலாம். இயற்கையே இறைவன்..!

 

ஆ.கெ.கோகிலன்

10-02-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!