முக்கோணப் பயணம்..!

 


கடந்த பல வாரங்களாக ஒவ்வொரு முறையும்  திருகோணமலைக்கு காரில் போய் வந்தாலும், கடந்த இருவாரங்கள் உறவுகளின் நிகழ்வுகளுக்காக யாழிலேயே நின்றதாலும் இருவாரங்கள் மட்டும் பயணங்கள் செய்யமல் திருகோணமலையில் நின்று எனது தேங்கிய வேலைகளை செய்து முடிக்க நினைத்தேன். ஆனால், ஒரு நாளில் அந்த வேலைகள் முடிந்துவிட்டன..!  மேலும் சில வேலைகள் வர தாமதமாகியதால் காலை மாலை இரு வேளைகளிலும் உடற்பயிற்சியில் ஈடுபட்டேன். காலையில் எல்லாப் பயிற்சிகளும் செய்யும் போது மாலையில் நடைப்பயிற்சியை மட்டும் மேற்கொண்டேன். ஆரம்பத்தில் தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்டாலும், பின்னர் எனது ஒன்றைவிட்ட தங்கையைக் கூட்டிக்கொண்டு நடைப்பயிற்சி செய்தேன். அவளுக்கும் தற்போதைய நிலைமையில் நடைப்பயிற்சி தேவையாக இருந்தது. சில சமயம் அதனை முடித்துக்கொண்டு, அவள் தரும் இரவு உணவையும் உண்டுவிட்டே தங்கியிருக்கும் அறைக்கு வருவேன்.

இந்தக்காலப்பகுதியில் எனது மாணவர்கள், நண்பர்கள் எனப்பலர், மீளத்தொடர்பு கொண்டு, மனதிற்கு நிறைவைத் தந்தார்கள்..! அந்தவகையில் நான் சேனையூரில் படிப்பித்த காலத்தில் சிறுமியாக இருந்த போது, குடும்பக்கஷ்டம் காரணமாக, அந்த வயதில் எனக்குப் பால் கொண்டுவந்து தந்த சிறுமி, தற்போது வளர்ந்து, உளவியலில் பட்டம் படித்து, நல்ல ஒரு நிலைக்கு தானும் வந்து, குடும்பத்தையும் கூட்டிவந்து எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய அந்த இளவயதுப்பெண்ணைச் சந்தித்தேன். அவரது தம்பியின் மனைவி, எனது நிறுவனத்தில் தற்போது பயிற்சிப் பயிலுனராகவும் வேலைசெய்கின்றார். அவரைப் பற்றியும், அவரின் திறமைகளையும் எனக்குக்கூறி, தொடர்ந்து இருக்க வழியமைக்க கூறினார். நானும் அந்த வழிகளைக் கூறினேன்.  தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான தருணங்களைக் கூறி அதிலிருந்து மீண்டு வந்ததையும் கூறி, தனது நம்பிக்கையையும், தற்துணிவையும் வெளிப்படுத்தினார். தான் எழுதிய புத்தகத்தை எனக்கு தெரிவித்தார். நானும் எனது எழுத்துக்களையும், உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளையும் கொட்டும் களமான ”சிவகோவசி” என்ற ப்ளோக்கரைப் பார்க்கச்சொன்னேன். சிலவற்றைப் பார்த்து, சில கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கூறினார். இடையில் ஒரு நாள், தான் பன்றிக்கறி சமைத்ததாகவும், சாப்பிடுவீங்களா..? என்றும் கேட்டார். நான் அவ்வளவு விருப்பத்துடன் இருக்கவில்லை என்றாலும் ஒருமுறை மட்டும் அதன் தன்மையை அறிவோம் என்ற நோக்கில் ”ஓம்” என்று சொன்னேன். மதியம் உணவாகவே அது வந்தது..! அவரால் முடிந்தவரை சிறப்பாகச் சமைத்துள்ளார். எனக்கும் அது வித்தியாசமாக இருந்தது. என்ன ஆச்சரியம்..? வேலை தொடங்கிய  காலத்தில் பால் வாங்கிய பிள்ளையிடம்,  ஓய்வுபெறும் காலத்தில் உணவும் வாங்கிச்சாப்பிட இறைவன் வழியமைத்ததை எண்ணிப்பார்க்கின்றேன். வாழ்க்கை ஒரு வட்டம். தொடங்கிய இடத்திலே முடிவு இருப்பது இப்போது புரிகின்றது..!

வேறும் பல நண்பர்களைச்சந்திக்க தருணம் பார்த்துவிட்டு, தலைமையக அலுவல் காரணமாக  முக்கோண பயணம் செய்யத் தீர்மானித்தேன். காரை அலுவலகத்திலே விட்டுவிட்டு காலை 8.00 மணிக்கு பஸ்ஸில் புறப்பட்டு, அனுராதபுரச்சந்தியில் ஒரு மணிநேரம் காத்து,  கொழும்பு பஸ்ஸைப்பிடித்து கொழும்புபோய், எனது வயதான மாமாவையும், அவரது உறவுகளையும் பார்த்துவிட்டு,  தெஹிவளை போய், அங்கு இரவு உணவை முடித்துக்கொண்டு, கிழக்குமாகாண தங்கும் விடுதியில் உறங்கி, அடுத்தநாள் அலுவலகத்தில் புதிய பணிப்பாளர் நாயகத்துடனான கூட்டத்தில் கலந்து, அதனை நிறைவு செய்ய மணி மாலை 6.00 ஆகிவிட்டது. பின்னர் பஸ்ஸில் கோட்டை சென்று, யாழ்ப்பாண பஸ்ஸைத் தேட, அவை நிரம்பியிருந்தது. பின்னர் வெள்ளவத்தைக்கு வந்து ஏற்கனவே புக்பண்ணிய பஸ்ஸில் இறுதி இருக்கையில் இருந்து யாழ் வந்து சேர காலை 4.00 மணி ஆகிவிட்டது. புக்பண்ணும் போது முன்னுள்ள சீற் கேட்டேன்.  அவர்கள்  இல்லை என்பதால் வேறு பஸ்களிலும் முயற்சி செய்வேன் என அனுமதி கேட்டேன்.  அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்..! அதனால், வேறுபஸ்ஸிலும் முயற்சி செய்தேன். பலனில்லை..! இறுதியில் ஏற்கனவே புக்பண்ணி, இறுதி லீட் கிடைத்த பஸ்ஸிலேயே பயணத்தை நிறைவு செய்தேன்.

நீண்ட காலத்திற்குப்பிறகு இவ்வாறான முக்கோணப்பயண அனுபவம் கிடைத்துள்ளது..! அலுப்பு இருந்தாலும் அறிவோடு அலைவதால் பல வித அனுபவங்கள் ஏற்படுகின்றன. சிந்தனைகள் புதுப்பிக்கப்படுகின்றன. பல எண்ணங்கள் தோன்றுகின்றது. வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு தேவையானதைச் செய்ய மனம் தயாராகின்றது. அடுத்தது என்ன என்பது தெரியாத வாழ்க்கையே எனக்கு சுவாரசியமாகவுள்ளது..! பிடிக்கின்றது..! மற்றைய வாழ்க்கை எனக்குப் போரடிக்கின்றது.  இயற்கை அவ்வாறு என்னைப்படைத்துவிட்டது..! இப்படியான வாழ்க்கைக்கு  தான், இயற்கையும் ஆசியையும், உதவியையும் வழங்குகின்றது. என்றும் இந்த இயற்கைக்கு நான் நன்றியுடையவனாக இருப்பேன்.


ஆ.கெ.கோகிலன்

09-02-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!