உகந்தை முருகன்..!
சில அற்புதங்கள் வாழ்க்கையில் நடக்கும்போதே எமக்கு எம்மையும் அறியாமல்
எமக்குமேலேயுள்ள ஒரு சக்திபற்றிய தெளிவு வரும். அதுவரை நாம் யாரையும் நம்ப மாட்டோம்.
எம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற குருட்டு நம்பிக்கை மாத்திரம் வந்துவிடும்.
நம்மை விட உலகில் ஆளே இல்லை என்ற மாதிரி எண்ணமும் வந்துவிடும். சில சமயம் எமது எண்ணம்
போல் காரியங்கள் நடக்க, எம்மையறியாமலே ஆணவமும் தலைக்கணமும் வந்துவிடும்..! எம்மை யாரும்
அசைக்க முடியாது. யாராலும் எம்மை வெல்ல முடியாது. நாம் தான் ராஜா என்ற நிலை மனத்தில்
வலுத்துவிடும். இந்த நிலையில் இருந்து மாற எல்லோருக்கும் வாய்ப்பு வந்ததோ தெரியவில்லை.
எனக்கு 30 வயதுகளிலேயே வந்தது..! அது வந்த வடிவம் ஆச்சரியமானது. நான் திருமணம் செய்து,
சில வருடங்கள் பிள்ளையில்லை என, மனைவி தவிக்கும் போது தான் ஏற்பட்டது..! அதுவரை எனக்குத் தெரியும் நான் யார் என்று..? எனது
திறன் என்ன என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் இங்கு என்ன இருந்தும் ஒன்றும் நடக்கவில்லை..!
மருத்துவ வியாபாரத்தைப் பற்றி முன்பே தெரிந்ததால் அது பற்றி நான் சிந்திக்கவே இல்லை.
ஆனால் இறைவன் ஏதோ ஒரு பாடம் படிப்பிக்கப்போகின்றார்
என்பது மட்டும் புரிந்தது..! சரி படிப்பிக்கட்டும் என்று பொறுமை காத்தேன். சில வார்த்தைகளால்
மனைவியை மனதளவில் காயப்படுத்தியதைப் பார்த்து நானே ஒரு தடவை கலங்கிவிட்டேன். எல்லாம்
நல்லதிற்கே என எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை மட்டும் பெறவேண்டும் என அன்றிலிருந்து முயன்றேன். என்ன தான் நம் முயன்றாலும்,
எமது முயற்சியைத் தாண்டியும் சில விடயங்கள் இந்தப்பூமியில் நடக்கின்றன..! எவ்வளவோ சிறந்த
அறிவாளிகள் ஒன்றுமே இல்லாமல் மறைய, மடையர்கள் போல் இருந்தவர் கூட மணிமகுடங்கள் சூடுவதை
நாம் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளோம். காரணம் புரிவதில்லை..! உண்மை அறிவையும், மரியாதைகளையும்
தருவதே இறைவன் தான். எமக்கு அறிவு இருக்கு..! ஆனால் அதற்கான மரியாதை வரவில்லை என்றால்
அதற்கும் காரணம் இறைவன் தான் என்பதைப் புரியவேண்டும். இதைப்புரிந்தால் இறைவன் யார்
என்பது புரியும்..? இறைவனுக்கும் இயற்கைக்கும் உள்ள பிணைப்பு விளங்கும்.
இவ்வாறான உணர்வுகள் மேலோங்கும் காலத்தில், எமது உறவுகள் சொல்ல, நானும்
மனைவியும் பொத்துவில் பாணமப் பகுதியிலுள்ள
உகந்தை என்ற ஆலயத்திற்குச் சென்று, அங்குள்ள
முருகனை வேண்டி நிற்க, நினைத்தது பலித்தது..!
எனக்கு பிள்ளைகள் வந்ததில் இருந்து மனைவியின் நடத்தையில் பாரிய மாற்றத்தைப்
பார்த்தேன். அதை ரசித்தேன். அப்படியே அனைத்தையும் மனைவியிடமே விட்டுவிட்டேன். இன்றுவரை,
அவரே அனைத்தையும் பார்க்கின்றார்.
பிள்ளையில்லாத பலரிடம் இந்த உண்மையை சொல்லியுள்ளேன். பலர் நம்பவில்லை.
சிலர் நம்பினாலும் உகந்தை சென்றுவர, அவர்களுக்குச் சூழல் அமையவில்லை. அதற்குள் சில
குடும்பங்களே பிரிந்துவிட்டன..! என்ன செய்ய..? நாம் சொல்லத்தான் முடியும் நடப்பதும்,
நடத்தி வைப்பதும் இறைவனின் கையில் தான் இருக்கின்றது.
திருகோணமலைக்கு, இடமாற்றம் பெற்றுவரும்போது, எனது ஒன்றைவிட்ட தங்கையின்
நிலை, முன்பு நான் பார்த்த, எனது மனைவியின் நிலை போல் இருந்தது.,!
நிறையப் பணத்தையும் காலத்தையும் செலவழித்து, இன்னமும் பலன் கிட்டாமல்,
ஒரு வித வெறுப்புடனே வாழ்க்கையை ஓட்டுகின்றாள் என்பது புரிந்தது. அவளுக்கு என்னால்
ஆன ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நினைத்ததைச் செய்து முடிப்பது அவ்வளவு
சுலபமான காரியமல்ல..!
திருகோணமலையில் நிற்கும் போது, மாலையில் சில தூரங்கள் உடற்பயிற்சிக்காக அவளுடன் கூட நடந்தேன். சில பழக்க வழக்கங்களைக் கூறி, அதனை முயற்சி செய்துபார்க்கச் சொன்னேன். அத்துடன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உகந்தைக்கு போய்வருவோம் என்றும் சொல்லிக்கொண்டேன். ஜனவரியில் சொன்னது பெப்பிரவரி 15இற்குப்பிறகே சாத்தியமாக்க முடிந்தது..! அதுவரை பல தடைகளும் எம்மால் தீர்மானிக்க முடியாத சில உடல் உபாதைகளும் வந்தன.!
ஆனால், பெப்ரவரி 15 அன்று உடல் உபாதைகள் மறைந்தன..! அன்றிரவு தங்கைக்கும் அவரது கணவருக்கும் அதிகாலை 3.00மணிக்கு பயணத்திற்குத் தயாராக இருக்கச்சொல்லிவிட்டு,
இரவு 6.30 மணிக்கே பாண், பணிஸ் போன்றவற்றைச் சாப்பிட்டுவிட்டு, இரவு 8.00 மணிக்குள்
உறங்கச்சென்றுவிட்டேன். அதிகாலை 2.00 மணிக்கு எழும்பிக் குளித்துக் காரில் 3.00 மணிக்கு
முதலே புறப்படவேண்டும் எனத்திட்டமிட்டுக்கொண்டேன். ஆனால் கட்டிலில் படுத்தேனே தவிர,
மூளை உறங்கவில்லை..! 1.59இற்கு தங்கைக்கும் கணவருக்கும் போன் எடுத்து அலேட் பண்ணிவிட்டு, உடனேயே குளித்து,
அது முடிந்த கையோடு சாப்பிட்டு, பின்னர் வெளிக்கிட்டேன். அவர்களும் தயாராக இருந்தார்கள். ஏறக்குறைய அதிகாலை 3.00 மணிக்கு பயணம் தொடங்கியது. கிண்ணியா,
மூதூர், செருவில, வெருகல், வாகரை, ஓட்டமாவடி, மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, கல்முனை,
நிந்தாவூர், அக்கரைப்பற்று எனப்பறந்தேன்.
அக்கரைப்பற்றில் எனது வாகனத்திற்கு
எரிபொருள் நிரப்பிக்கொண்டு, தம்பட்டை, தம்பிலுவில், திருக்கோவில் எனச்சென்று காலை உணவை
திருக்கோவிலிலுள்ள “சாம்” என்ற காடையில் எடுத்தேன். பரோட்டா, இடியப்பம், பருப்பு மற்றும் தேநீர் இவற்றை எடுத்துவிட்டுக் கிளம்ப காலை
8.30ஐத் தாண்டியது. தங்கையும் பயணக்களைப்பில்
வாந்தியே எடுத்தாள். என்ன செய்ய..? மனித வாழ்க்கையில் மற்றவர்களைப்போல் வாழ்வதற்காக
அவ்வளவு முயலவேண்டியுள்ளது. இல்லை என்றால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக
வாழமுடியும். பின்னர் தொடர்ந்து, உமரி, கோமாரி,
பொத்துவில் எனப்பறந்து, அங்கு அர்ச்சனைச் சமான்கள் வாங்க வண்டியை நிறுத்தினேன். ஏறக்குறைய
அரை மணித்தியாலங்கள் அலைந்து, அவற்றினை வாங்கிக்கொண்டு வந்தார்கள் தங்கையும், அவரது
கணவரும்..! இடையில் ஒருவர் என்னிடம் வந்து, இந்த சமயத்தில் காரில் போவது கஷ்டம் என்றும்,
அங்கு ஒரே மழை பெய்கின்றது எனவும், பாதைகள் படுமோசமாக இருக்கின்றன என்றும் சீசன் நேரத்தில்
குறிப்பாக வருடத்தின் நடுப்பகுதியில் வரவேண்டும் என்றும் சொன்னார். நானும் ஏதோ குருட்டு
நம்பிக்கையில், அவர்களைக்கூட்டிக்கொண்டு வந்துவிட்டேன். ஒருவாறு போய்வரவேண்டும் என
மனதில் பதட்டம் தொடர, தங்கையும், கணவரும் ஆடிப்பாடி வந்தனர்..! கொஞ்சம் இறுக்கமாக நிலமையைப்
புரியவைத்து, இந்தச்சமயத்தை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டு,
பயணத்தைத் தொடர்ந்தேன்.
அறுகம்பே, பாணம, மற்றும் உகந்தை
எனப்பயணித்தேன். பாணமவிற்குப் பிறகு பாதைகள் சீரில்லை என்பதாலும், அருவி வெட்டு நிகழ்வதாலும்,
மழையிடையிடையே பெய்வதாலும் கலக்கத்துடனேயே பயணத்தைத்தொடர்ந்தோம்.
அப்பகுதியில், குறைந்தது 20 கிலோமீட்டர் தூரமே சரியில்லை, முற்றாக
கிறவல் ரோட், அதுவும் கிடங்கும் முடங்குமாக கடந்த மழையால் அள்ளுப்பட்டுக் கிடக்கின்றது..!
மேலும் அன்று நாம் போன நேரம் மழையும் பெய்துகொண்டிருந்தது. எனவே மிகவும் பாதுகாப்பாகவும் மெதுவாகவும் வண்டி
ஊர்ந்து ஊர்ந்து சென்றது. ஏறக்குறைய 9.30இற்கு மண்ரோட்டில் இறங்கிய வண்டி, அங்கிருந்து
முருகன் கோவிலை அடைய 11.00 மணியைத் தாண்டிவிட்டது. 12.00 மணிக்கு பூஜை என்பதால் அங்காங்கே
பக்தர்கள் பொங்கல் செய்து கொண்டும், ஏதோ படையல்கள் செய்துகொண்டும், பழ வகைகளை வெட்டி
அடிக்கிக்கொண்டும் இருந்தார்கள். சிலர் குடும்பங்களாக வந்து அங்கு சில நாட்கள் தங்கியிருக்கின்றார்கள்.
நாம் போகும் போது, எம்மைத் தாண்டி ஒரு ஆட்டோ வண்டி மட்டுமே சென்றது. ஆனால் கோவிலில்
5 அல்லது 6 டொல்பின் ரக வாகனங்கள் இருந்தன.
சில ஓட்டோக்களும் இருந்தன. டக்டர்களும் இருந்தன. நாம் கோவிலுக்குள் சென்று காலையும்,
பழங்களையும் கழுவிக்கொண்டு, ஜயரைச் சந்தித்து விபரங்களைக்கேட்டு, தட்டையும் அவரூடாக
உள்ளே வைத்துவிட்டு, மலையேறி, கல்லு வைக்கும் கடமையைச் செய்தோம். நானும் எனது பங்கிற்கு
இறைவனிடம் நன்றி கூறி, ஒரு கல்லை வைத்துவிட்டு வந்தேன். அது நிறைவேறினால் நிச்சயம்
மீண்டும் ஒரு முறை செல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.
அவற்றை முடித்துக்கொண்டு, பின்பக்கமாக மலையால் இறங்கி, கோவிலுக்குப்பின்னாலுள்ள
பாதையால் முன்பக்கத்தை அடைந்து, திரும்ப கோவிலுக்குள் செல்ல பூஜை தயாரானது. அதில் கலந்துகொள்ள
வாய்ப்பு வந்ததில் மிகுந்த திருப்தி..! ஜயரும் மிக நேர்த்தியாக எல்லாப்பூஜைகளையும்
செய்தார். நானும் பயபக்தியோடு அவற்றில் கலந்துகொண்டேன். ஏறக்குறைய பூஜை முடியும் நிலையில்
மீண்டும் மழை கொட்டத்தொடங்கியது. நனைந்தபடியே சில பூஜைகளில் கலந்துகொண்டேன். ஏறக்குறைய
1.00 மணியளவில் பூஜை நிறைவுற்று, பிரசாதமும் வழங்கப்பட்டது. விபூதி, தீர்த்தம் போன்றவற்றோடு,
வந்தவர்கள் தந்த, மரமுந்திரிப்பருப்பு மற்றும் பிளம்ஸ் போட்ட இனிப்புப் பொங்கல் மதிய
உணவு போலவே தரப்பட்டது. திகட்ட திகட்ட உண்டு, சில பழங்களையும் உண்டு, மழை பெய்யும்போதே
கோவிலை விட்டு இறங்கினோம். மழை பெய்துகொண்டே இருப்பதால், தண்ணீர் ஓட்டத்திற்கு ஏற்ப மிக மெதுவாக இறங்கினோம். வரும்போதும், போகும் போதும்
அந்தக்காட்டுப்பகுதியில் பல வன விலங்குகளையும், அழகான காட்சிகளையும் கண்டு மகிழ்ந்தோம்.
இடையில் ஒரு பிள்ளையார் கோவிலையும் கண்டு வணங்கிச் சென்றோம். போகும்போது அங்கே நின்ற
முதியவர், நாம் திரும்பி வரும்போதும் நின்றார்..! அவருக்கு கைகாட்டி நன்றி தெரிவித்தபடி
வந்தோம். போகும் போது எம்மை முந்திச் சென்ற அதே ஓட்டோ, திரும்பவும் வந்து எம்மை முந்திச்
சென்றது.
ஏறக்குறைய 2.30 மணிக்கு நல்ல றோட்டிற்கு வந்துவிட்டோம். போகும் முன்னர்,
ஒரு இரவு தங்கிச் செல்வதாக ஒரு எண்ணம் இருந்தது. அந்த எண்ணம் மறைந்து உடனேயே திரும்ப
மனம் தூண்டியது. தங்கையும் கணவரும் அதே எண்ணத்துடனேயே இருந்தார்கள். போன வேகத்தில்
திரும்பினோம். பாணமாவில் பாதை மாறிச் சில மைல்கள் சென்ற பின்னர் திரும்ப சரியான பாதைக்கு
வந்து பயணத்தைத் தொடர்ந்தோம். பாணமாவில் இருந்து
உகந்தை போகும் போதும் பாதை மாறிப்போய், சிலரிடம் விசாரித்தபின்னர் சரியான பாதைக்கு
வந்தோம்..!
வரும்போது, கடும் வேகத்தில் ஒவ்வொரு ஊர்களையும் கடந்து வந்தோம். ஆரையம்பதியில்
ஒரு மரவள்ளிக்கிழங்குக் கடையைக் கண்டதும் வண்டியை நிறுத்தி, அப்பம், பால் அப்பம், தேநீர் போன்றவற்றை வயிற்றிற்குள் தள்ளிவிட்டுப் பின்னர்
மரவள்ளித்துண்டங்களை வாங்கிக்கொண்டு கிளம்பினோம். வழமைபோல் தங்கையும் வாந்தியெடுத்துப்
பின்னர் எம்முடன் இணைந்தார்.
கடும் வேகத்தில் சென்றதால் இடங்கள் அவ்வளவு புரியவில்லை. மட்டக்களப்பில்,
மட்டக்களப்பு- திருகோணமலை வீதியைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டு ஒரு சுற்று, சுற்றிவந்து
இறுதியாகப் பிடித்தோம்.!. கூகுள்மெப்பும் நம்மை சிறிதுநேரம் குழப்பிவிட்டது. உண்மையில்
அதன் பிழையல்ல..! நாம் புரிந்துகொண்டதே தவறானது. இறுதியாக வாகரைக்குள் நுழைய இருளத்தொடங்கியது.
கடும்வேகத்தில் சென்றதால் வீதியின் தரங்கள் பற்றிக்கவலைப்படவில்லை. வண்டியிடம் கேட்டால்
தான் அதன் கஷ்டம், நமக்குப்புரியும். இரவு 8.30இற்கு தங்கையையும் கணவரையும் இறக்கிவிட்டு
நான், தங்கியிருக்கும் நிறுவனத்திற்குள் வந்தேன். வண்டியை விட்டு இறங்கும்போது தான்
தெரிந்தது உடலின் களைப்பு..! கைகால்கள் தூக்க முடியாமல் வலித்தது..! கோவிலில் இருந்து
காருக்குள் ஏறும்போது கடும் மழையில் நனைந்ததால், படுக்க முதல் குளிக்க வேண்டும் என்று
நினைத்தேன். அதே எண்ணத்துடனே பறந்து வந்தேன். திரும்பவும் அதே எண்ணம் வர அறைக்குள்
சென்று உடுப்பைக்கழட்டிவிட்டு, துவாயைக் கட்டிக்கொண்டு குளியல் அறையில் சிறிதுநேரம்
நீரில் கரைந்தேன். களைப்பு பறந்தாக உணர்ந்தேன். ஓடி ஓடி வரும்போதே மரவள்ளித்துண்டங்களைச்
சாப்பிட்டால், பசியே எழவில்லை. கொஞ்ச நேரம் கணினியுடனும், போனுடனும் இருந்துவிட்டு,
நித்திரை கண்ணை மறைக்க, கட்டிலில் விழுந்தேன். ஒரு நாளில் 24 மணிகள் உண்டு என்றால்
அதில் ஏறக்குறைய 18 மணித்தியாலங்கள் தொடர்ந்து வண்டியை ஓட்டி, நானும் ஒரு சாரதியாகும்
தகுதியை நிரூபித்துக்கொண்டேன். தேவைகளே எம்மைத் தகுதியானவர்களாக மாற்றுகின்றன..!
ஆ.கெ.கோகிலன்
15-02-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக