கொக்கச் சத்தாம் (கொக்கைச் சத்தகம்)..!
சில விடயங்கள் எம்மை அறியாமலே எப்படி நடக்கின்றன என ஆச்சரியத்தையும்,
சில வேளைகளில் குடும்பங்களில் பிரச்சனைகளையும் ஏற்படுத்துகின்றன..! சிலருக்கு அவை வேடிக்கையாகவும்
தோன்றலாம். பொதுவாகச் சொல்வார்கள் ”தலையிடியும் காய்ச்சலும் தனக்கு தனக்கு வந்தால்
தான் தெரியும்.”
அதேபோல் சில விடயங்கள் எனது இந்த விடுமுறைக்காலத்தில் வந்து,
ஒரு வித ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது.
போனவாரம் மனைவி சொன்னார் ” கொக்கத்தடியால் கொஞ்சத்தேங்காய்களை
பிடுங்கும் படி.. தான் முயன்றதாகவும் தன்னால்
முடியவில்லை என்றும் என்னால் முயலச்சொன்னார்..!” ஏற்கனவே கொக்கத்தடி சத்தாம் இல்லாமல்
உடைந்திருந்தது. நான் புதிதாக ஒரு நீட்டு மெல்லிய தடியை வெட்டித்தயார்படுத்தி, அதில்
கொக்கச்சத்தாத்தை வைத்துக்கட்டி, ஒரு வாழைப்பொத்தியை ஆய்ந்துவிட்டு வைத்தேன். அடுத்தநாள்
தேங்காய் ஆயலாம் என்று..! அதேபோல் அடுத்த நாள் மனைவி சொன்ன அத்தனை வேலைகளையும் முடித்து,
மனைவிக்கு காட்டினேன். அவரும் திருப்திப்பட்டுக்கொண்டார்.
ஒரு வாரம் சென்றது..! இந்தவாரம் அதேபோல் விடுமுறைவர சில வேலைகள் வந்தன. அவற்றைச் செய்துகொண்டு,
வாழைப்பொத்தி ஆய்வோம் எனநினைத்துக்கொண்டு, கொக்கத்தடியைப் பார்க்க அதில் சத்தாம் இல்லை.
மனைவி மற்றும் பிள்ளைகளிடம் யாரெடுத்தது என்று கேட்க அனைவரும் தெரியாது என்று மறுக்க
கோபம் வந்துவிட்டது..! அவர்களை ஏசிவிட்டு வர, சாத்திவைத்த மரவட்டுக்குள் சத்தாம் என்ற வளைந்த சின்னக் கத்திவிழுந்திருந்தது என்று
சொல்லி, மூத்தமகள் எடுத்துக்கொண்டுவந்து தந்துவிட்டு, வடிவாகப் பார்க்காமல் தங்கள்
மேல் கோபித்ததாக வேதனைப்பட்டார்.
எனக்கும் ஒன்றும் புரியவில்லை..! கட்டிய சணல் நூலைக்காணவில்லை..!
என்ன நடந்தது..? யாராவது விளையாடுகின்றார்களா..? எனக்கோபமும் வந்தது.
ஒருவாறு, அந்தச்சூழலில் இருந்து மீண்டும் சத்தாத்தைத் தடியில் கட்டி ஒரு வாழைப்பொத்தியை ஆய்ந்தேன்.
போதாது என்று இன்னொன்றையும் ஆயமுனைந்தேன். ஆனால் சத்தாம் மறைந்துவிட்டது. சணல் நூலையும்,
முறிந்த தடியையும் காணவில்லை..! எல்லாப்பக்கமும் தேடிக்களைத்து, பின்னர், நான் வெளியேறிவிட்டேன்.
என்னடா நடக்குது இங்கே..! எனவும் மனதிற்குள்
எண்ணிக்கொண்டேன். சில மணிகள் கழித்து, தொலைந்த சத்தாத்தை மனைவி மற்றும் பிள்ளைகள் எடுத்து
வைத்திருந்தார்கள்..! என்கண்ணுக்குப் படாமல், எவ்வளவோ முயற்சிகளுக்குப் பின்னர் அவர்களுக்குப்
பட்டுவிட்டது.
பின்னர் இன்னோர் தடியை வெட்டியெடுத்து, சத்தாத்தை வைத்து
நன்றாகக் கட்டி ஒரு மாமரத்தில் சாத்தி வைத்தேன்.
என்ன ஆச்சரியம் இன்றும் அந்த மாமரத்தில் இருந்து சத்தாம்
மட்டும் கீழே விழுந்து இருந்தது..! சணல் கயிறைக் கொக்கத்தடியில் காணவில்லை..! ஏதோ ஒன்று
எமக்கு எதிராக வேலைசெய்கின்றது அல்லது அம்மனின் விளையாட்டா என்று கூட எண்ணத் தோன்றியது..!
இப்போது தோன்றுகின்றது..! ”அணில் கூடுகட்ட சணலை அறுத்துக்கொண்டு
போகின்றதோ தெரியவில்லை..?”
இரண்டு மூன்று நாட்கள் கடும்வேலையை வீட்டில் செய்ததால் என்னால்
சரியாகக் குனிந்து எழும்ப முடியிவில்லை..! இடுப்பில் வலித்தது. மனைவிக்குச் சொல்ல,
அவருக்கு முதலில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. என்ன ஆச்சரியம் இன்று அவருக்கும் ஒரு சின்ன வேலையைச் செய்யும்போது, இடுப்பு வலித்து,
குனிய முடியாமல் அவதிப்பட்டார்..! பிள்ளைகளும் கலங்கி விட்டார்கள். அவருக்கு வந்த இடுப்பு
வலியால் எனது வலி மறைந்துவிட்டது..!
இருவரும் மருந்துபூசி, சுடுதண்ணீர் ஒத்தடம் பிடித்து, உள்ளித்தண்ணீரும்
குடித்து, ஒருவாறு அந்நோயில் இருந்து விடுபட
முயன்றோம். அது ஓரளவிற்கு வெற்றியளித்தது. இன்னும் தெரியவில்லை..! “உண்மையில் என்ன நடக்கின்றது என்று..?”
ஆ.கெ.கோகிலன்
09-03-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக