கஷ்டமான வாரம்..!
நீண்ட காலமாக வாங்கிய கார் கடந்த சில வாரங்கள் நன்றாக ஓடி
20000 Km தூரத்தை எட்டுகின்ற நேரம், அடிக்கடி நித்திரை வடிவத்திலும், அதிவேகம் காரணமாகவும் தற்காலிகமாகக் காரில் திருமலை
போவதை நிறுத்தியுள்ளேன். 10ம் திகதி ஞாயிறு
மாலை 4.15 மணி பஸ்ஸைப் பிடிக்க மோட்டார் சைக்கிளில் யாழ் சென்று வண்டியை ஒரு தரிப்பிடத்தில்
வாடகைக்கு நிறுத்தி, தலைக்கவசத்தையும் கொடுத்துவிட்டு, அவர்கள் தந்த பற்றுச்சீட்டைப்
பெற்றுக்கொண்டு, விறு விறுவென அரச பஸ் தரிப்பிடத்திற்குச் சென்று 4.15 மணிக்கு வெளிக்கிடும்
பஸ்ஸில் ஏறி ஒரு சீட்டில் அமர்ந்தேன். அப்பாடா ஒரு சீட் கிடைத்துவிட்டது..! என மகிழ்ச்சியில் இருந்தாலும் எனக்கு முன்னால் இருந்த
ஒருவர் எழும்பிப் பின்சென்றார்..! அந்த இடத்தில் ஒரு இளம் பெண் வந்து உட்கார்ந்தார்.
அதன் பிறகு கொன்டக்டர் வந்து, இந்த பஸ்ஸில் பல சீட்டுக்கள் ஒன்லைனில் புக்பண்ணியுள்ளார்கள்..!
நீங்கள் உட்காரும் சீற் புக் பண்ணியதா என்பதைத் தெரிந்துகொண்டு இருங்கள். இல்லையென்றால்
உரியவர் வந்ததும்கொடுக்கவேண்டியிருக்கும் என்றார். அவரிடம் கேட்டேன் என்னுடைய சீற்றைக்காட்டி
”புக் பண்ணியதா..?” என்று..! “இல்லை” என்ற மாதிரிச் சொல்லிவிட்டுப் போனார். பிறகு,
திரும்பிவரும்போது, இதுவும் புக் பண்ணியுள்ளார்கள்..! என்றும் வந்ததும் விடவேண்டும்
என்றார். மகிழ்ச்சி பறந்தது..! சரி வரும்வரை
அதில் இருப்போம் என்று நினைக்க, இருவர் வந்தார்கள்..! என்னுடைய சீட்டைக்காட்டி எழும்பச்
சொன்னார்கள். வேறுவழியின்றி எழும்பி நின்றேன். பஸ்ஸூம் வெளிக்கிட்டது. சரி இன்று நின்று பார்ப்போம்..! என எண்ணியபடி நின்றேன்.
பல நாட்கள் காரில் போகும்போது, நானே காரை ஓட்டுவதால், கை, கால், கண்ணுக்கு வேலையாக
இருக்கும். இன்று காலுக்கும் கைக்கும் மட்டும் வேலை என எடுத்துக்கொண்டேன். இப்படி நினைத்தாலும், கால்கள் சற்று வலிப்பதாக உணர்ந்தேன்.
இருந்தாலும் தாங்க வேண்டும்..! இன்னும் என்ன என்ன கஷ்டங்கள் வர இருக்கோ தெரியவில்லை..!
எது வந்தாலும் தாங்க வேண்டும். விழுந்துவிடக்கூடாது என்பதில் மாத்திரம் உறுதியாக இருந்தேன். உண்மையில்
இந்த பஸ்ஸூக்கு புக் பண்ணவேண்டும் என்பது பஸ்ஸினுள் இருக்கும் போதே புரிந்தது.!. முதலே
புரிந்து இருந்தால், முதலே பின்னாலுள்ள சீற்களில் ஒன்றைப் பிடித்து இருந்திருக்கலாம்.
சரி இன்று இறைவன் இவ்வாறு போக விட்டுள்ளான் என நினைத்தபடி நிற்க, கொடிகாமத்தில் எனது
உறவினரும், யாழ் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில்
படித்தவரும் என்னைக்கண்டார். ஏன் சேர் நிற்கின்றீர்கள்
எனக்கேட்டார்..? நடந்ததைச் சொன்னேன்..! சேர் நீங்கள் இருங்கள்..! நான் புக் பண்ணிய
சீட்டு தான் இது என்று ஒரு சீட்டைக்காட்டி
உட்கார வைத்தார். அந்த நேரம் இறைவனுக்கு நன்றி சொல்லியபடி முறிகண்டிவரை இருந்துவிட்டு,
எழுந்து, அவரிடம் இருக்கச்சொன்னேன். “பராவாயில்லை” தொடர்ந்து இருக்கச்சொன்னார். நன்றிசொல்லி
எழுந்துவிட்டேன். அது வரை அருகில் இருந்த பல்கலைக்கழக முஸ்ஸீம் மாணவியிடம் சில தகவல்களைப்
பெற்றுக்கொண்டேன். அவரும் இந்த புக்கிங் சிஸ்டம் சரியில்லை என்பது போல் பேசினார்.
பின்னர் வவுனியா வந்ததும், அந்த உறவுக்கார மாணவர் மீண்டும்
என்னை இருக்கச் சொன்னார். சரி என்று, வவுனியாவில் இருந்து, கெப்பிட்டிக்கொலாவ வரை இருந்துவிட்டு,
அவரிடமே திரும்பக் கொடுத்துவிட்டு நின்றேன். அப்போது யாழ் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியின்
மகனைச்சந்தித்து, அவருக்கு எமது நிறுவனத்தில் படிக்கும் அலோசனை வழங்கியதுடன் என்னைச்
சந்திக்கச்சொன்னேன். இவ்வாறாக பயணத்தில் சங்கடங்களும் கஷ்டங்களும் இருந்தபோதிலும் ஒருவாறு
இரவு 9 மணிக்குள் திருமலைவந்து, குளித்துச் சாப்பிட்டேன். மனைவி தந்த இறைச்சிக்கறியும்,
சுன்னாகத்தில் வாங்கிய றோஸ் பாணும் சுவையாகவும் பசியைப் போக்கக்கூடியதாகவும் இருந்தது. பின்னர் உறவுகளுடன் கதைத்துவிட்டு உறங்கினேன்.
காலை 4.00 மணிக்கு எழுந்து தனியாக உடற்பயிற்சி செய்துவிட்டு,
குளித்துக் காலை உணவை முடித்துக்கொண்டு எனது முதலாம் வருட மாணவர்களின் விரிவுரைகளை
நிறுத்திவிட்டு, துப்பரவு ஊழியர் ஒருவர் கடமையில் இருந்துவிலகுவதாகச் சொன்னதைக் கேட்டுக்
கவலைப்பட்டுக்கொண்டு, தலைமையகக் கல்விசார் கூட்டத்தில் பங்குகொண்டேன். பல பொறுப்புக்கள் வந்தன..! சில காரணங்களைக்காட்டி அவற்றை மறுத்துவிட்டு,
எனக்குரிய விடயங்களில் மாத்திரம் கவனம் செலுத்தினேன். அதுமாத்திரமன்றி, அடுத்த வெள்ளிக்கிழமை
மாலையில் 3.30 மணி பஸ்ஸில், யாழ்ப்பாணம் போவதற்கும், 17 ஞாயிறு இரவு 7.00 மணிக்கு திருமலைபோக
முற்கூட்டியே பதிவுசெய்து, கிரெடிட் காட் மூலம் பணத்தையும் செலுத்திவிட்டேன். இனி அடுத்தமுறை
நின்று பயணிக்கத்தேவையில்லை என நினைத்துத் திருப்திப்பட்டேன்.
பின்னர் மாலை, கோணேஸ்வரர் ஊர்வலம் பார்க்க விரும்பி, ஒன்றுவிட்ட
தங்கையிடம் கேட்டேன். அவரும் கணவர் வந்ததும், பதில் சொல்வதாகச் சொன்னார். பதில் வரவில்லை.
பின்னர் இரவு உணவை உண்டு, அடுத்த நாளுக்கான
தயார்ப்படுத்தலைச் செய்ததுடன், மாணவர்களுடனும் சற்று கடுமையாக நடந்துகொண்டேன். அது
மாத்திரமன்றி, கணக்காளரின் வரவு தொடர்பான சர்ச்சையில் பதிவாளருக்கு சில ஆலோசனைகளை வழங்கியதுடன்,
கணக்காளருக்கும் வரவுப்பதிவைக்கொடுத்தேன். இது ஊழியர்களிடையே சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது..!
அதேநேரம், பாதுகாப்பு ஊழியர்களும் தங்கள் சேவை இம்மாதம் 15ம் திகதியோடு முடிவதாகக்கூறிக்
கவலைப்படுத்தினார்கள்..! அன்று மாலை, அடுத்தநாள் நடைபெற இருந்த
முன்னைநாள் பணிப்பாளரின் பிரியாவிடைக்குரிய பேச்சைத் தயார்படுத்தினேன். அந்நேரம் ஒன்றைவிட்ட
தங்கையின் அழைப்பும் வந்தது..! அதனைத் தொடர்ந்து, கோணேஸ்வரர் ஊர்வலத்தையும் பார்த்து,
இரவு 10மணிக்கு, நல்ல உணவுடன் நிறுவனம் வந்து
உறங்கினேன். அடுத்த நாள் வழமைபோல் உற்சாகத்துடன்
தயாரானேன். ஆனால் சிலரது நேர தாமதங்கள், பின்னர் பல விடயங்களைச் சொதப்பிவிட்டது..!
நூல் நிலையம் தொடர்பாக சில சிக்கல்களும் ஏற்பட்டன. ஊழியர்களின் விசுவாசங்களில் ஒரு
வெறுப்பும் வெளிப்பட்டது. ஒருவாறு எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு, பழைய பணிப்பாளரையும்,
அவரது மகனையும் வழியனுப்பிவிட்டு, எனது வேலைகளில் இறங்கினேன். ஓபிண் டேக்கான (Open
Day) தயார்படுத்தல் இழுபட்டுக்கொண்டே வந்தது.
மாலை எனது சேனையூர் பாடசாலை நட்பு வட்டத்தில் சிறுவிருந்தும், கணிதம் கற்பிக்க கோரிக்கையும்
வந்தது..! ஒரு சேவை என்ற எண்ணத்தில் இயன்றவரை முயல, கோரிக்கையை ஏற்றுக்கொண்டேன். அன்றைய
இரவும் அடுத்த நாள் இரவும் இடியப்பமே இரவு உணவாக இருந்தது..! கொஞ்சம் அதிகமானதால் வயிறு
இட்டுமுட்டாக இருந்தது. பாதுகாப்பு சேவை தொடர்பான பிரச்சனை மற்றும்
அலுவலகப்பணியாளர் கற்க கணினி வழங்கியதால், சிறு முரண்பாடு வந்து, ஒருவாறு அதனைச் சமாளித்து
அனுப்பினேன். இருந்தாலும் இன்றும் அப்பிரச்சனை தொடர்ந்தது..! எனக்கு அது வெறுப்பை ஏற்படுத்தியது. அத்துடன் மாலைசெல்லும் பஸ்ஸை
உறுதிப்படுத்த பஸ் கொன்டக்டருக்போன் எடுக்க, அது காலையே போய்விட்டது என்று ஒரு குண்டைத்தூக்கிப்போட்டார்..!
பின்னர் புரிந்தது..! 24 மணி நேரக்கடிகாரத்தைப்
பயன்படுத்தாமல் 12 மணிக்கடிகாரத்தை பயன்படுத்தியதால் வந்தவினையிது..! 1000 ரூபா இழந்தே,
இந்தப்பாடத்தை படிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது..!
சரி இழப்பதைத் தடுக்கமுடியாது என்ற எண்ணத்தில், மனம் சற்று சலித்துப்போனாலும், மேலும் பல விடயங்கள் வெறுப்பையே
வளர்த்தன. இதனால் பேச்சைக்குறைத்து கவனமாக
இருந்தேன். பின்னர் பஸ் கொன்டக்டருக்கு போன்செய்து, ஏதாவது ஒரு பஸ்ஸில் பயணிக்க ஏற்பாடும்
செய்துகொண்டேன். சரி இன்றும் நின்றுதான் போக,
இறைவன் வழியமைத்துள்ளான் என்ற எண்ணத்துடன், பாதுகாப்பு ஊழியர் பிரச்சனைக்கும் ஒரு தீர்வைக்கொடுத்து, ஒரு வகுப்புக்கு விரிவுரையை எடுத்துவிட்டு, மதிய
உணவை எடுத்துவிட்டு, மாலை போகும் பஸ்ஸூக்கான ஏற்பாடுகளைச்செய்து, நான் வழமையாகச் சாப்பிடும்
கடைக்கார தங்கையிடம் 15 ரோட்டிகள் பிள்ளைகளுக்காக வாங்கியபடி பஸ்ஸைப் பிடிக்க தரிப்பிடத்திற்கு
ஓடினேன். உடனேயே பஸ்ஸூம் வந்துவிட்டது. இருந்தாலும் ப்றியாக (Free) சீற் இல்லை. பின்னர்
மொரவேவா பகுதியில் சீற் கிடைத்தது. புக்பண்ணிய
சீட் தவறினாலும், சீற்கிடைத்ததையிட்டு மகிழ்ந்து, இறைவனுக்கு நன்றி சொல்லியபடி, சில
சங்கடங்களை மீண்டும் வழியில் சந்தித்தபடி வீடு
வந்தேன்.
ஒரு கிழமையில், சோதனையுடன் தொடங்கிய பஸ் பயணம் சோதனையுடன்
நிறைவுற்றது.! கடந்த வாரம், ஒரு கஷ்டமான வாரமாகவே பார்க்கவேண்டிய நிலை மனதில் ஏற்பட்டது.
கஷ்டங்கள் தான் உடலையும், உள்ளத்தையும் பலப்படுத்தும்..! பக்குவப்படுத்தும்..! கஷ்டங்கள்
எனக்கு ஒன்றும் புதுமையான விடயங்கள் அல்ல..!
சின்ன வயதிலிருந்தே அதனை சந்தித்து, சகித்து தாண்டித்தான் இந்த நிலைக்கு வந்தேன். இன்னும் உயர வேண்டும் என்றால் இன்னும் கஷ்டப்படத்தான்
வேண்டும். இல்லைப் போதுமென்றால் இப்படியே இருக்கலாம். நான் தான் தீர்மானிக்க வேண்டும். காலத்தையும், வரும்
பலாபலன்களையும் பொறுத்து, முடிவு தெரியும். அதுவரை கடமையே கட்டளை என இயங்குவோம்.
ஆ.கெ.கோகிலன்
15-03-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக