பயனுள்ள லீவு..!
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மதியம் போகத்திட்டமிட,
காலையில் தலைமையக ஒன்லைன் கூட்டம் மதியம் இருப்பதாகச் செய்தி, வர திட்டம் இவ்வாறு மாற்றப்பட்டது..!
“ஒன்லைன் கூட்டம் முடித்த பின்னர் போகலமென்று..! ” வழமையைவிட இந்தக்கூட்டம் 30 நிமிடங்களில் முடிந்துவிட்டது..!
உடனே மதிய உணவை எடுத்துவிட்டு, கடந்த வாரம் போல இந்தவாரமும் சில ரொட்டிகளுக்கு ஓடர் கொடுத்துவிட்டு,
சில அலுவலகக் கடமைகளைச் செய்துமுடித்த பின்னர் 2.30 மணி பஸ்ஸைப்பிடிக்க பஸ் தரிப்பிடத்திற்கு
சென்றேன். போகும் போது ஓடர்கொடுத்த ரொட்டிகளையும் பெற்றுக்கொண்டேன். பஸ் 3.00 மணிக்கு
கிட்டவாக வந்தது. கூட்டம் அதிகமாக இருந்தது. நின்று போக முடிவுசெய்து கொஞ்ச நேரம் நிற்க,
மொரெவாவ பகுதியில் ஒருவர் இறங்க, சீற் கிடைத்தது..! இறைவனுக்கு நன்றி சொல்லியபடி பயணத்தைத்
தொடர்ந்தேன். இறுதியாக வீடுவந்து சேர இரவு 8.00 மணியாகிவிட்டது. மனைவி பிள்ளைகளைச் சந்தித்துக்கதைத்துவிட்டு, பின்னர்
குளித்து, இரவு உணவை முடித்து படுக்கைக்குப் போக இரவு 12.30 தாண்டிவிட்டது. திருகோணமலையில்
இரவு 10.00 மணிக்கு முதலே படுத்துவிடுவேன். அதேபோல் காலை ஏறக்குறைய 4.00 மணிக்கு எழுந்து
உடற்பயிற்சி செய்வதை தற்போது வழக்கமாக மாற்றியுள்ளேன். யாழ்ப்பாணம் வந்தால் அவை இல்லை..!
மருத்துவ உடற்பயிற்சியை மாத்திரம் செய்வதுண்டு.
இம்முறை வரும்போது நான்கு நாட்கள் பதில் லீவு (Lieu Leave)
எடுத்துவந்தேன். ஏற்கனவே இரண்டு சனி ஞாயிறு வேலைசெய்துள்ளேன். இன்னும் இரு சனி ஞாயிறு
வேலைசெய்து, அதனை முடிக்க வேண்டும்.
இந்த 4 நாட்களும் கலியானவீடு, திருமண நினைவு நாள், இன்னோர்
கலியான வீடு, மாலையில் நடைபெறும் கலியான விருந்துபச்சாரம், செத்தவீடு, அந்தியேட்டி
மற்றும் காடாத்தல் என பல ஊர் மற்றும் உறவுக்கடமைகளைச் செய்ய உதவியது.
இவற்றில் எனது நண்பரின் மனைவி, புற்றுநோயால் காலமானதை நினைக்க
மிகவும் வேதனையாக இருந்தது. பூமியில் என்ன செல்வாக்கு இருந்தாலும், இயற்கையும் இறைவனின்
துணையும் இருந்தால் மாத்திரமே நாம் இருக்க முடியும். இல்லை என்றாலும் ஏதோவோர் நிலையில்
இருக்கலாம். ஆனால் யாருக்கும் பயன்படாது..! வாழும் காலத்தில் எல்லோருக்கும் பயன்படக்கூடிய
மனிதர்களாக வாழும் பாக்கியம் கிடைத்தால், அது ஒரு சிறந்த வாழ்க்கையாக எனக்குத்தெரிகின்றது.
அதனாலோ என்னவோ சிலர் பொது வாழ்க்கையில் ஈடுபடுவது வழக்கம்..!
குறிப்பாக அரசியிலில் ஈடுபடுவது என்பது எமது பகுதிகளில் ஒரு வேடிக்கையாகப் பார்க்கப்படுகின்றது.
அதற்கு எமது மக்களின் நலன்களில் அக்கறையற்ற தன்மையில் அரசியல் வாதிகள் நடப்பதால் அவ்வாறான
எண்ணங்கள் வருகின்றன. இயன்றவரை நல்ல சேவைகளைச்
செய்தால் மக்கள் மனங்களில் இறந்தாலும் வாழலாம்.
நான் யாழில் வேலைசெய்த நிறுவன ஊழியர் ஒருவரின் திருமணத்தில்
கலந்துகொண்டது இன்னோர் புதிய அனுபவத்தைச் தந்தது..! வழமையாக அந்த நிறுவனப் பணிப்பாளர்
என்றவகையில் அந்நிறுவன ஊழியர்களுடன் நின்று
புகைப்படம் எடுப்பது கடந்த 6 வருடங்கள் நடந்தது..!
இந்தவருடம், இடமாற்றம் வந்ததால் தனியாகச் சென்று வரலாம் எனநினைத்தே
போனேன். ஆனால் எனது முன்னாள் ஊழியர்கள் தங்களுடன் அழைத்ததால் அந்தக்கூட்டத்துடன் நின்று
புகைப்படம் எடுத்தேன். அதிலும் குறிப்பாக இன்னாள் பணிப்பாளருடன், முன்னாள் பணிப்பாளர்
என்ற வகையில் நின்றது ஒரு புதிய அனுபவமாகவும், வாழ்க்கையின் போக்கை உணரக்கூடியதாகவும்,
அதை எவ்வாறு எடுக்க வேண்டும் என்ற பக்குவத்தையும் கொடுத்து, என்னை மேலும் அனுபவப்படுத்தியது..!
பயனுள்ள வாழ்க்கை வாழ சேவை செய்யும் எண்ணமிருந்தால் போதும்.
அரசியலில் தான் சேவை செய்ய வேண்டும் என்று கிடையாது. எத்தனையோ
சமூக சேவைகள் செய்யாமல், ஒவ்வொருவரும் தமக்கு தமக்கு எனத் தனியாக இயங்கிக்கொண்டிருக்கின்றோம்.
கொஞ்சம் பொது நலத்தோடு, நோக்கினால் பல விடயங்களை நாம் செய்ய முடியும்.
நானும் இம்முறை எனது வளவைச் சுத்தப்படுத்தும் சாக்கில், எனது
பின்வளவு கேற்றுள்ள (Gate) முச்சந்திக் குப்பை கூழங்களை எடுத்து எரித்து, ஓரளவிற்கு
அந்த வழியால் போகும் மனிதர்களுக்கு உதவியாகச் செயற்பட்டது, மனதிற்கு நிறைவையும், இந்த
லீவு ஏதோவோர் விதத்தில் ஊருக்கும் நாட்டிற்கு உதவியதால், உடலில் ஏதோவோர்புத்துணர்ச்சியாகவும்
இருந்தது..!
வெள்ளிக்கிழமை கிறீஸ்தவர்களின் பெரியவெள்ளி என்பதால் எல்லோரும்
வீட்டில் நின்றார்கள். நானும் இன்று வீட்டில் மெனக்கிட நினைத்தேன். திடீரென நண்பர்களிடம்
இருந்து அழைப்பு வந்தது..! ”காடாத்த கீரிமலைக்கு வெளிக்கிடு என்று..” பின்னர், எனது
வழமையான மருத்துவ உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு, நண்பர்களுடன் கீரிமலைக்குப் புறப்பட்டேன்.
அங்கு எனது பழைய சேனையூர் நண்பரைச் சந்தித்தேன். இருவரும் மகிழ்ச்சியைப் பரிமாறினோம்.
அத்துடன், கடலில் இறங்கி நன்றாகக் குளித்து, உடலை மேலும் ஆரோக்கியமாக்கினேன். அதுமாத்திரமன்றி,
நண்பர் கேட்டதற்காக, அளவோடு சிறிது மருந்தும் எடுத்து, காலை சிற்றூண்டியை அம்மாச்சியிலும்,
தெல்லிப்பழை கூட்டுறவு சிற்றூண்டிச்சாலையிலும் எடுத்து வீடு வந்தேன். ஆக ஒவ்வொரு நாளும்
ஏதோவோர் விதத்தில் நகர்ந்து, இன்று மாலை மீண்டும் திருகோணமலைக்குப் போகத் திட்டத்துடன்
இருக்க, மேலும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள கோரிக்கைகள்
வர, அவற்றை அன்புடன் தவிர்த்துவிட்டேன்..! எல்லாவற்றிற்கும் ஒரு அளவு உண்டு. அது தாண்டினால்,
ஆபத்து என்பதை பல முறை உணர்ந்துள்ளேன்.
ஆ.கெ.கோகிலன்
31-03-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக