கொலைவெறித் தாக்குதல்

 



முருக்கங்காய் என்பது எனது பிடித்தமான மரக்கறிகளில் ஒன்று. அதனால், நான் வீட்டில் முருங்கை மரங்களை நட்டுத் தேவையான முருங்கக்காய்களை ஆய்வது வழமை..! அவை விற்பனைக்கு இல்லை..! எனக்கும் உறவுகளுக்கும், அயலவர்களுக்கும் கொடுப்பதற்காக..! தற்போது திருமலையில் நிற்பதால் அதனைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. இடையிடையே வரும்போது மயிர்கொட்டிகள் படர்ந்து இருக்கும். என்னால் இயன்றவரை எரித்து அழித்துவிட்டுச் செல்வேன். இருந்தாலும் அடுத்தமுறை வரும்போதும் அவை தொடர்ந்து பெருகுவதைப் பார்க்கக் கஷ்டமாக இருக்கும். மனைவிக்கும், மூத்த மகளுக்கும் அழிக்கும் முறையினைக் காட்டிக்கொடுத்தேன். எரித்துக்கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதாகச் சொன்னார்கள். ஆனால் நான் வரும்போது ஆங்காங்கே இருப்பதை அவதானித்தேன். ஏன் கவனமாக அழிக்கவில்லை என்று கேட்டதற்கு தங்களால் இயன்றளவு அழிப்பதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்களால் முற்றாக அழிக்க முடியவில்லை. நானும் இடையிடையே வந்து அழிப்பதால் பயன்னில்லை. போனமுறை வரும்போது கொஞ்சம் கொப்புக்களை முறித்துவிட்டேன். இந்தமுறை வரும்போது அடிமரம் நன்றாக எரிக்கப்பட்டு, மரத்தில்  இலைகளே இல்லை..! மகளிடம் கேட்டேன் “முற்றாக மரத்தைத் தறிக்கட்டா” என..! அவளும் “ஓம்” என்றாள்.  சரி என்று காலையே மரத்தை முற்றாக வெட்டி எடுத்தேன். எத்தனைமுறை எரித்தாலும் அழியாமல் பல மசுக்குட்டிகள் எமக்கு டிமிக்கி காட்டிவிட்டு மறைவான இடங்களில் ஒளித்து இருந்தார்கள்..! மரத்தைத்தறிக்கும் போது வேறுவழியின்றி வெளியே வந்தார்கள்..! அனைத்தையும் எரித்தும் நசுக்கியும் கொலைகள் செய்தேன். இருந்தாலும் சில தப்பிவிட்டன. சில என்னையும் பதம் பார்த்தன..! மகளையும் கவலைப்படுத்தி, விரல்களைத் தடிக்க வைத்தன..!

முருக்கங்காய் ஆசை..! தற்போது கொலைப்பழியுடன் அலையவேண்டியுள்ளது..! விவசாயிகளை நினைக்கும் போது மிக மிகப் பாவமாக இருக்கின்றது..! எமக்கெல்லாம் உணவு தருவதற்காக, எத்தனை உயிர்களை, அவர்கள் அழிக்க வேண்டியுள்ளது..!  இதனால் தான் என்னவோ, எப்படித்தான் நல்லவனாக இருந்தாலும் இவ்வாறான காரியங்களில் நாம் ஈடுபடவேண்டிய சூழல் இயல்பாகவே வருகின்றன..! அப்படியிருக்க, தாம் வாழுவதற்காக, ஏனைய மனிதர்களைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும்..? என்ற நிலையில் வாழும் மனிதர்களை, ஒன்றும் திட்டவோ நோகடிக்கவோ தேவையில்லை என்றே தோன்றுகின்றது. வாழுவதற்காக வாழும் உயிர்களை அழிப்பதும் தர்மம்..! அழிக்கும் உயிர்களையும் அழிப்பதும் தர்மம்..! நாம் அழிக்காவிட்டாலும், இறைவனாலோ அல்லது இயற்கையாலோ அழிப்பதுவும் தர்மம்..!

இவற்றை எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் வாழுவதே எம்முடைய விநோத வாழ்க்கை..!

 

ஆ.கெ.கோகிலன்

17-03-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!