கடலில் கண்ட நட்பு..!
காலங்கள் ஏதோவோர் விதத்தில் சுற்றிச் சுழன்று வந்து, வாழ்க்கையில் கண்டவர்ளை மீண்டும் காணக்கூடிய வாய்ப்பை வழங்கி, அவர்களை நண்பர்களாகவும், மறக்க முடியாத மனிதர்களாகவும் மாற்றி எம்மை மகிழ்விக்கின்றது..! பிரபஞ்ச சக்திக்கு என்றும், நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். அதுவே இயற்கை..! அதுவே இறைவன்..!
திருகோணமலை வந்து ஒன்றரை மாதங்கள் தாண்டிவிட்டது. இன்னும் எல்லா உறவுகளையும்,
நட்புக்களையும் சந்திக்க முடியவில்லை. அந்த அளவிற்கு நபர்களை நண்பர்களாக வாழ்க்கைப்
பயணத்தில் மாற்றியுள்ளேன்.
கடுமையான போராட்டக்காலத்தில் உயர்தரம் படித்து, எதிர்காலக் கனவுக்கான
போராட்டத்தில் தோற்று, கப்பலேறி கரையேற முயலும் பயணத்தில், கூட வந்து, இறுதியில் பெரும்
நட்பாகவும், உறவாகவும் மாறி, பின்னர், நான் இலங்கை வந்தும், தொடர்புகள் அறுந்து, பல போராட்டங்கள் ஊடாக ஒவ்வொருவரும்
ஒவ்வொரு பாதையில் முன்னேறி, பல வருடங்களின் பிறகு, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி எம்மை
மீண்டும், இணைத்து உறவுப்பாலத்தைப் புதுப்பித்தது..!
காலம், திருகோணமலைக்கான இடமாற்றத்தினூடாக மேலும் எம்மை நெருக்கமாக்கி,
இன்று தான் , எம்மைச் சந்திக்க வைத்தது..! அன்று கைக்குழந்தையாக எம்மோடு இருந்தவன்
இன்று முழு மனிதனாக, இளைஞனாக மாறி, அந்தக்குடும்பத்தைக் காக்கும் பொறுப்பான மனிதனாகப்
பார்க்கும் போது, மடியில் வைத்து ஏடு தொடக்கியவன் என்ற வகையில் மிகப்பெரும் பெருமை
கொள்கின்றேன்..! பலரைப் படிப்பித்திருந்தாலும், நானே ஒரு மனிதனாக மாறும் முதலே, ஒரு
தந்தைபோல் நடந்து, அந்த சிறுகுழந்தையுடன் பொழுது போக்கியது, மனநிறைவைத் தருகின்றது.
இன்று அவனது, கடமையைப்
பார்த்து மிகுந்த ஆனந்தத்தைப் பெற்றேன். அந்தக்குழந்தை, இன்று தனது தந்தை மற்றும்
தாய் மற்றும் சகோதரிக்காகப் பாடுபடுவதைப் பார்க்க, உலகே அழகாகவும் பிரபஞ்ச இணைப்பு
ஆச்சரியமாகவும் இருக்கின்றது..!
அந்த அகதி முகாம் உறவு இன்று வரை தொடர்வதற்கு காரணம், பிரபஞ்ச இணைப்புத்
தான்..! எந்த ஒரு ரத்த சம்பந்தமும் இல்லாமல், இந்தப்பூமியில் உறவுகள் இருக்க முடியும்
என்பதை மீண்டும் என்னால் உணரமுடிகின்றது.
அந்தக்குழந்தையின் தந்தையே எனக்கு கவிதை என்றால் என்ன..? காதல் என்றால்
என்ன..? போராட்டம் என்றால் என்ன..? பல கேள்விகளுக்கான
தெளிவான பதிலாகவும், உதாரணமாகவும் இருந்தார்.
சிறைக்கும் சென்றார். குடும்பம் நடுத்தெருவிற்கு வராத வகையில் அந்தக் குழந்தையின் தயார் போராடினார்.
நான் அவர்களை அண்ணன் மற்றும் அக்கா என்று தான் அழைப்பதுண்டு. அவர்களும் என்னைத் தமது
தம்பி போல் தான் பார்த்தார்கள்.
அவர்கள் என்ன உதவி செய்தாலும் நான் “நன்றி” என்று சொல்வதை நிறுத்துவதில்லை. வெறுத்துப்போய்
உமது நன்றிகளை ஒரு கூடையில் போட்டு வைக்கச்சொல்வார்கள். அவ்வளவு நன்றிகள் அவர்களுக்குச்
சொல்லியுள்ளேன். ஒவ்வொரு நாள் சமையலிலும் ஏதோவொன்று எமக்கு வரும். கூட எனது வாயில்
இருந்து அவர்களுக்கு “நன்றி” மட்டுமே வரும்.
தற்போது முதுமையாலும், நோயாலும்
துன்பப்பட்டாலும் பிரபஞ்ச சக்தியை அண்ணன் நம்புகின்றார். அவரது நம்பிக்கை வீண்போகாது
என்பதே எனது எண்ணமும்..!
நீண்ட நேரங்கள் அவர்களுடன் செலவிட்டதால் இரவுச் சாப்பாடே அங்கு எடுக்க
வேண்டிவந்துவிட்டது.
சிறுவயதில் இருந்து சினிமா தொடர்பான அறிவு எனக்கு இயல்பாக வரத்தொடங்கிவிட்டது.
என்ன ஆச்சரியம்..? என்னை விட, பல மடங்கு அறிவுடன் அவர்களுக்கு ஒரு
மகள் பிறந்து வளர்ந்து, ஒரு சிறந்த ஒரு சேவைத்துறையில் பட்டமும் பெற்று கலியாண வயதில்,
பெற்றோருக்கு கடமைசெய்யப் பல தியாகங்களைச் செய்யும் அன்னை திரேசா போல் மாறுகின்றாள்..!
நான் இந்தியாவில் இருக்கும்போது, அந்தக்குழந்தை பூமியிலே இல்லை..!
நான் இலங்கை வந்து நான்கு வருடங்கள் கழித்தே பூமிக்கு வந்துள்ளாள். அவளும் தாயாரைப்போல்
ஒரு அழகு தேவதையாகவே கண்களுக்கு தெரிகின்றார். குரல் மாத்திரம் இன்னும் இந்தியாவின்
தாக்கத்திலேயே இருக்கின்றது..!
இரவுச் சாப்பாட்டில் அந்தக்குழந்தையின் கைவண்ணத்தையும் ரசிக்க முடிந்தது.
பல துறைகளில் பாண்டித்தியம் பெறக்காரணம் அவரது தந்தையின் ஊக்கப்படுத்தலே..!
அவரது கவிதைகளில், ஆழமான சிந்தனைகள் வெளிப்படும். அவரது கவிதைகளே,
அவரது காதலுக்கும், குழந்தைகளுக்கும், ஏன் இன்றுவரையுள்ள அவர்கள் வாழ்க்கைக்கும் ஆதாரமாக இருக்கின்றது.
இலங்கை-இந்தியக்கடலில் கண்டுபிடித்த நட்புக்களை எனது வாழ்க்கை முழுக்க
கூட்டிச்செல்ல ஆசையுள்ளது. ஆனால் பிரபஞ்ச நாயகியின் கணக்கு எப்படி என்பது நமக்குத்
தெரியாது..?
இருந்தாலும் அவர்களை நான் கட்டிய எனது வீட்டிற்காவது சில நாட்கள் கூட்டிச்செல்ல
வேண்டும். அதற்கான வாக்குறுதியையும் கொடுத்துவிட்டேன். செய்துமுடிப்பதே இருக்கும் பணி..!
ஆ.கெ.கோகிலன்
19-02-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக