பிரியாவிடைக் கவிதை..!

 


நான் யாழ்ப்பாணம் போய், யாழ் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணிபுரியும் போது அளவான தொடர்புகளையே எல்லோரிடமும் பேணி வந்தேன்..! அது என்னை அங்கு பணிப்பாளர் தரம் 2 மற்றும் தரம் 1வரை கூட்டிவந்தது. நான் எதிர்பாராமலும் இறைவனின் கிருபையாலும் வந்த தகுதி, அவனையே சார்ந்தது. எமது கடமை  எம்மால் இயன்றவரை பணிசெய்வது. அவ்வளவு தான். அந்த வகையில் அப்துல் கலாம் சொன்ன மாதிரி எனது நேரத்தில் எனக்கான கடமையை என்னால் இயன்றவரை செய்த காரணத்தால், என்னால் நிம்மதியாக அங்கிருந்து வெளியேற முடிந்தது. அதேபோல் அவர்களுக்கும் ஒரு மாற்றம் கிடைத்துள்ளது. வாழ்வில் மாற்றமே நிலையானது..! அதற்கு யாரும் விதிவிலக்காக முடியாது. அது தான் உண்மை. இந்தச் சூழலில் எனக்கு நடந்த பிரியாவிடையில் எனது நண்பர்  (ஸ்ரீசேதுபரன்)மற்றும் எனது ஊழியர். அதுமாத்திரமன்றி நானும் சில காலம் அவரது ஊழியராகவும் இருக்க சூழல் அமைந்துள்ளது..!  அவரது கவிதை என்னை ஒரு வித  மனநிலைக்கு கூட்டிச் சென்றது. அது என்னை மகிழ்வித்ததுடன் ஒரு கவிஞரையும் இனங்காட்டியுள்ளது..! அவரது திறமைகள் பற்றியும் அறிந்துள்ளேன். நாடகங்கள் எழுதுவதிலும் நடிப்பதிலும் வல்லவர்.

எல்லோரும் விரும்பும் நல்லவர், எல்லோரையும் விட அங்கே உயர்ந்தவர். நான் அடிக்கடி வெறுப்பேற்றும் விருச்சீகராசிக் கொடுக்கன் கூட்டத்தில் ஒருவர்..!  எனது மனைவியின் இயல்புகளைக் கொண்டவர்.   அவரது கவிதையில் தமிழ் விளையாடியுள்ளது..! மரபுக்கவிதை போல் அமைத்துள்ளார். அவருக்கு எனது நன்றிகள். அத்துடன் எனது பக்கத்தில் அவரது கவிதையையும் பகிர விரும்புகின்றேன். 

பொதுவாக, நாம் என்ன தான் செய்தாலும் எல்லோரையும் திருப்திப்படுத்துவது கடினம் என்ற உண்மையும் யாழிலே  தான் கிடைத்தது..!

 “

கோ என்றும் கோகிலனே!

 

மருதம் பொழில் சூழ்

வழுக்கி  ஆற்றங்கரையில் - இறையை

கெந்தீசன்  கிஞ்சி பேறு எடுக்க

வந்துதித்த கோ மகன் நீர் கோகிலனே!

 

உடுவி(லி)ல் நீர் உயர்ந்தவன்

உன்னதங்கள் புரிபவன்

உள்ளங்கள் வென்றவன்

ஊரே போற்றும் உலக நாயகனின் கோ நீர் கோகிலனே!

 

பாரத படைக்கு காரிகை வேடம் காட்டிய

விரல் விட்டாட்டிய

வீரத்திலும் விஞ்சிய

வீரரின் கோ நீர் கோகிலனே!

 

நேர்கொண்ட போர்க்காலம் நெருக்கடியில் சிக்கிச் சிதறி

ஊரென்று உபகண்டம் சென்று

வேர்கொண்ட கல்வியை சோர்வின்றி முடித்த கல்விக் கோ நீர் கோகிலனே!

 

ஊர் விட்டுச் சென்றாலும் உன்னத சேவையை

பார் விட்டுப் பரிதவித்த மக்களுக்கு

ஓய்வின்றி ஒளி கொடுத்த கோ நீர் கோகிலனே!

 

ஊர் திரும்பி

தான் பெற்ற கல்வியை கொண்டு

வீரமண் வடக்கின் யாழ் வன்னி  முதல்

தென் தமிழ் மண் சேனையுருடன் திருமலையிலும்

பெரும் சேவைகள் செய்த கோ ஆசான் நீர் கோகிலனே!

 

ஆசனங்கள் செய்து உடல் சீருடன் விளங்கிட

யோக கலை தனை யோக்கியத்துடன் போதித்த யோகிகளின் கோ நீர் கோகிலனே!

 

சினம் கொள்ளாத சீறிப்பாயாத -எம் சிங்கம்

வலம் வந்து யாழ் சிறக்க வழிகாட்டி -இன்று

புலம் சென்று திருமலை சிறக்க  சீரிய பணி முடிக்கும் சீராளர்களின் கோ நீர் கோகிலனே!

 

பார் போற்றும் சிவ பூமி எவரையும் ஊர் போற்ற உயர்த்தும் .

உம்மை உலகம் போற்ற வைக்கும் 

நேர்கொண்ட சேவையை நித்தமும் தலை நிமிர்ந்து

சித்தத்துடன் சீராய் உன் பணி தொடரும் கோ நீர் கோகிலனே!

 

சுற்றமும் வாழ்க!

சுகத்துடன் வாழ்க!

உற்றவர் வாழ்க!

உன்னதமாய் வாழ்க- என பற்றுடன் வாழ்த்துகின்றோம்

பாரினில் கோ நீர் கோகிலனே!

-ஸ்ரீசேதுபரன்- 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!