மேலாடை

புகழ்பெற்ற கோவில்கள் சில
தடைபோட்டது ஆண்களுக்கு
மேலாடையுடன் உட்செல்ல…!
நல்லது…
பெயரே தெரியாத கோவில்கள் பல
எப்படியாவது சனம் வந்தாலே போதும் எனத்
தடைகளைத்  தகர்த்துவிட்டது…!

கோவில்களில்
தீபந்தங்கள் போய் மின்பந்தங்கள் வந்தாகிவிட்டது…!
அடியார்கள் சுமந்த சுவாமி,  மோட்டார் வாகனத்தில்
நகருலா போகின்றார்…
கொப்பியும் பேணாவும் போய் கணினியும், கைபேசியும் தேவையாகிவிட்டது..
நடைப்பயணங்கள் போய் வாகனப்பயணங்கள் வரையறையற்று வந்துவிட்டது…
கூழையும் களியையும்,  பிட்சாவும் பர்கரும்
தொலைத்துவிட்டது…
உறவுகள் தொலைந்த உதிர்ந்த வாழ்கை, சிறந்த வாழ்க்கையாகிவிட்டது…
மெதுவாக நகர்ந்த வாழ்க்கை, பர பர என பறந்த வாழ்க்கையாகி விட்டது..
மாற்றங்கள் இப்படி வரும் போது….?
பழையதை அப்படியே ஏற்பதா..?
மாற்றங்களூடாக ஏற்பதா..?

பிறநாட்டவர் ஒருவர்
ஆண்களின் அரைநிர்வாணக் கோலத்தைப் பார்த்து
ஆண்கள் கவர்ச்சி காட்டும்
மையமா  கோவில்…?
எனக்கேட்டார்…
சிந்தித்துபார்த்தேன்…
என்னறிவுக்குத் தோன்றியவை
இதோ…

ஆணாதிக்க சமுதாய வெளிப்பாடே
அரைநிர்வாணம்…
அர்ச்சகர்களையும், அடுத்தவர்களையும்
இனங்காண்பதற்கே மேலாடையின்றி இருக்கவேண்டிய நிலை…
வெப்பநாட்டில் வசிப்பவர்களின்
ஆரோக்கிய வாழ்வுக்கான ஆடையணியும்
வழிமுறை...
உடல்களின் உரசலும் வேர்வைகளின்
இணைதலும் ஏற்பட 
வழிவகுத்த அரைநிர்வாணம், 
எல்லாம் ஒன்றே
என்ற  ஆத்மீக தத்துவத்தை உணர்த்த…

சிந்தனைமுடியவில்லை.
நீளுகின்றது….
எப்படியான காரணமெனினும்
காலத்தோடு பொருந்துகின்றதா…?
கைகளில் திறன்பேசிகள்…
வாகனங்களின் அதீத பாவனைகள்…
உலக கலாச்சாரம்…
நாடுகளின் சங்கமம்…
நாடுகள் கடந்த வாழ்வு….
இப்படிப்போகும் எம்மவர்  வாழ்வு
இனி எப்படி போகவேண்டும்…?

சில கோவில்கள் அர்ச்சகர்களின்
கைகளில்…
சில கோவில்கள் முதலாளிகளின்
கைகளில்…
சில கோவில்கள்  அமைப்புக்களின்
கைகளில்…
முகாமை எப்படி இருந்தாலும்
அடியார்களுக்குரிய விதிகள்
ஒன்றாக இருக்க வேண்டும்…
மதவொழுங்குகள் நியமப்படுத்தப்பட்டதாக
இருக்கவேண்டும்...
இடம், நேரம், காலம், காலநிலை, நவீனம் போன்றன
மதவொழுங்கு நியமங்களுக்கு அரண்களாக இருக்க வேண்டும்.

விதிமுறைகளின் முரண்பாடுகள்
பக்தர்களுக்கான நாட்டத்தைப் போக்கும்…
 வேட்டியோடு வந்தவன் தான் பக்தன் என்றோ
பிற ஆடையுடன்  இருப்பவன் பக்தனாகான் என்றோ
முடிவுகளை எடுக்காதீர்கள்…
பக்தன் வேடமிட்ட கள்ளர்களே அதிகம்…
சாமி என்று தன்னைக் காட்டிக்கொண்ட கயவர்களே
அதிகம்…
எழுந்தபாட்டிற்கு முடிவெடுக்காதீர்கள்…

பிற  இனத்தவர், பிற மதத்தவர், பிற நாட்டவர்
மதிக்கக்கூடியதாக மதவொழுக்கங்கள்
அமையவேண்டும்….
ஆளாளுக்கு விதிகளைப்போடாமல்
சரியான விதிகளைத் தொகுங்கள்…
காலத்தோடு ஒத்துப்போகுமா என பாருங்கள்…
மாற்றங்கள் தேவையெனின் 
அனேகரின் ஆதரவோடு செய்யுங்கள்…
யாவருக்கும் பரப்புங்கள்…
கடைப்பிடிப்பவர்களை வாழ்த்துங்கள்…
மறுப்பவர்களின் காரணங்களை
கவனத்துடன் அலசுங்கள்
மேலும் பல உண்மைகள் தெரியும்…
செம்மையான மாற்றங்களை
மறுக்காமல் செய்யுங்கள்
மாற்றம் ஒன்றே மாறாதது…
மதம் மற்றவர்களுக்ளுப் பிடிக்காமல்
அனைவரும் பிடிக்கக்கூடியதாக
அது இருக்கவேண்டும்…



30-08-2016                            ஆ.கெ.கோ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!