சிப்பி மாஸ்டர்


கேள்விப்பட்டேன் அவர் பெருமையை…
ஜயனார் கோவில் விழா ஒன்றிலே
சொன்னார் கவிதை ஒன்று…
ஜெயராஜ் பேச்சின் சுவாரிஸ்யம் அவர் கவிதையிலும்…
அன்று தான் கண்டேன் அவர் உருவம்…!
ஒருவரின் துணையோடு மேடை வந்தார்
சுவையோடு கவிதை சொன்னார்..
முதுமை ஒத்துழைக்காததால் 
சென்றுவிட்டார் விரைவாக…
நாட்கள் சென்றது.. நானும் மறந்து விட்டேன்…

இன்று தீபாவழி
நேற்றிரவு தம்பி சொன்னான்
சிப்பிஜயா இறந்துவிட்டார்
தன்னால் முடியாது… இயலுமென்றால் இன்றே போய் வா என்றான்…
இரண்டு முறை குளித்தாகிவிட்டது
மூன்றாம் முறை குளிக்க விரும்பவில்லை குளிர் நாள் என்பதால்…
தீபாவளியன்று போவோம் என இருந்து விட்டேன்…

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கட்டிப்போட்டது என்னை இன்று…
அம்மாவும் தம்பியும் பார்த்துவிட்டு வந்து சொன்னார்கள்
மூன்று மணிக்கு எடுப்பினம் என்று…
மதியம் சாப்பிட்டபின் போவோம் என நினைத்துக்கொண்டு
தொலைக்காட்சியுடன் இருந்தேன்
மதியம் வந்தது உண்டேன் உணவை
நேரம் இரண்டாக சோம்பலுடன் தவிர்க்க நினைத்தேன்…
மூத்தமகன் என்னுடன் ரியூட்டரிகளில் படித்தாலும் நட்பு இருந்தாலும்…
தொடர்பு குறைவு என்பதால் தவிர்க்க நினைத்தேன்.
போய் விரைந்து வாருங்கள் என மனைவி தூண்ட
போனேன் ஆர்வமற்று…

இழவுவீடு அமைதியாய் இருந்தது
எங்கும் வங்கி ஊழியர்கள் கண்ணுக்குப்பட்டார்கள்..!
தெரிந்த ஒருவரும் வெளியில் இல்லை
வீட்டுவாசல் அருகே சொற்ப நேரம் நின்றேன்
ஒருவரும் அழைக்கவில்லை…
அருகில் நின்ற தம்பியிடம்  இறந்த மாஸ்டர் மகன் பெயர் சொன்னேன்
தம்பி உள்ளே இருந்த மகனிடம் தெரிவித்தார்
வெளியில் வந்தார் அவர்.
கைகொடுத்து  என்னை உள் அழைத்துச் சென்றார்..
சாதாரண பெயின்ற் அடிக்காத பழைய அறை
அழகான பெட்டியில் உறங்கியபடி இருப்பதாகத் தோற்றினார்.
பிராமணர் என்பதால் கிரிகை முறைகளில் வித்தியாசம் பட்டது.
சிறிதுநேரம் பார்த்துப் பின் காலைத்தொட்டு கும்பிட்டு
மகன்களிடம் இரங்கல் சொல்லி 
வெளியில் தனியாக ஓர் கதிரையில் வந்து இருந்தேன்… மூச்சு வந்தது…!

நேரம் மூன்றாக கிரிகைகள் தொடங்கியது
எனது வாயும் திறந்தது அருகிலுள்ள தெரிந்தவர்களுடன் அளாவிட
எனது மாணவனையும் சந்தித்தேன்…
வவுனியா கம்பஸ்ஸில் படித்தவர்
வங்கிமுகாமையாளராக இருக்கிறாராம்…
பலவிடயங்கள் வந்தது கதையில் கூடுதலாக யோகசனமும் சேர்ந்து…!

நேரம் ஜந்தாக பிரேதம் வெளியில்வரத் தயாரானது 
பல மலர்கொத்துக்கள் மரியாதை செய்யக் காத்திருந்தன…!
இரங்கல் உரை தொடங்கியது பல விடயங்கள் தெரிந்தது…
அன்னாரின் சிறப்பு புரிந்தது..
பல பத்திரிகைகளின் உருவாக்க முன்னோடி
இந்தியாவில் படித்த அறிவாளி
கதைகள், கவிதைகள் எழுதிய எழுத்தாளர்
நல்ல படசாலை முகாமையாளர்
ஆங்கில ஆசிரியர்
அறிவாளிகளின் ஆலோசகர்
சமூகத் தொண்டன்
சிறந்த தந்தை
சமூகப்போராளி
நிறையச் சொன்னார்கள்…
பிரமித்துப்போனேன்..!
எமது ஊரிலேயே இப்படியான ஒருவரா…?!
ஊருக்கே அவரால், அவர் வாழ்க்கையால் பெருமை….!

அவரின் உறவில்லாத வாரிசாக நானும் மாறவேண்டும்.
ஆஸ்திகளுக்காக அல்ல
விட்டுச்சென்ற நற்பணிகளைத் தூர இருந்தே தொடர்வதற்காக..
ஆசை வந்தது…பார்ப்போம் எண்ணம் ஈடேறுமாவென்று…!

சாதிமாறித்; திருமணம் செய்து சமூதாயத்தில் புரட்சி செய்தார்..
நல்ல ஆசிரியராக அதிபராக ஆலோசகராக சேவையில் சிறப்புச் செய்தார்..
அறிவாழிகளை உருவாக்கும் சிற்பியாக சிற்பிஜயா வாழ்ந்தார்..
வைத்தியர், பொறியியளாளர், மற்றும் முகாமையாளர் எனப்பிள்ளைகளை உருவாக்கி
வீட்டிலும் குறிப்பாக குழந்தை வளர்ப்பிலும் முன்னூதாரணமானார்…

பிரேத ஊர்வலம் ஏறக்குறைய ஜந்திற்கு தொடங்கியது..
உடுவில் குளத்தடி பாதையூடாக சங்கம்புலவுச் சுடலைக்கு 
சென்றது பிரேதம்..
நானும் அதனைப் பின்தொடர்ந்தேன் மோட்டார் வண்டியை உருட்டிக்கொண்டு…
ஏறக்குறைய ஆறுமணிக்கு சுடலைச் சடங்கு நடந்தது…
அது எனக்கு விநோதமானதாகப் பட்டது.
மூன்று இடத்தில் வைத்து கிரிகை செய்தார்கள்.
மூவரும் மூத்த பிராமணர் கூறிய வார்த்தைகளின் படி செயற்பட்டார்கள்…
ஆரவாரமற்ற அமைதியான சவ ஊர்வலம்
கற்றவர்கள் இப்படித்தான் என ஊருக்குச் சொன்னது…!
சுடலைவரை வெடியோ அல்லது சுடலைச் சோடாவோ இல்லாதது
என்றும் மறக்க முடியாத இறுதியாத்திரை எனத்தொன்றியது.
உழைத்த பணம் பேசுவதைவிட ஆற்றிய சேவை பேசியது உயிர்ப்பாய் இருந்தது…!
அறிவே  சகலத்திற்கும் தலை இங்கு தான் புரிந்தது..
எதிர்காலத்தில் நானும் இப்படியாக வரவும் வாழவும் வேண்டும்…!?
அதிக அளவில் முயல வேண்டும் என்பது மட்டும் தெளிவாய் தெரிகின்றது.

(உண்மை சம்பவம் )                                                                     -ஆ.கெ.கோ-

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!