Are you ok baby?

 



மனித வாழ்வியலில் தனி இயல்புகள் நீண்ட காலத்திற்கு கடத்தப்பட தேவையாகக் கருதுவது வாரிசுகளைத் தான்..!

பிள்ளைகள் பெறுவது என்பது ஒரு சாதரண விடயமாகக் கருதமுடியாது. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்தால் பிள்ளை வருமா என்றால் சந்தேகம் தான்..! எத்தனையோ குடும்பங்கள் பிள்ளைகள் இல்லாமல் வாழ்வினையே வெறுத்துக்கொண்டு, மீதமுள்ள வாழ்க்கையைப் பெரும் சுமையாகக் கருதி, கஷ்டப்பட்டு அதனைச் சுமந்து மறைகின்றார்கள்.

அதேவேளை எத்தனையோ சந்தர்ப்பங்களில் கருக்கள் உருவாகி, அவை முழுமை பெறாமல் அதுவும் இயற்கையாக நிகழாமல், செயற்கையாகத் தனிப்பட்டவர்களின் விருப்பத்திற்காக அழித்து, இறைவனின் தொழிலை காசுக்காகவும், காமத்திற்காகவும் மனிதர்கள் கையில் எடுத்து வைத்துள்ளார்கள்..!

பூமியிலுள்ள அனைத்து உயிர்களும் இந்தப் பிரபஞ்சத்தில் நீடித்து இருக்க, இருக்கும் ஒரே வழி, அவற்றின் வாரிசுகள் தான்..!

உதாரணத்திற்கு ஒரு பூனை நீண்டகாலம் இருக்கவேண்டும் என்றால் தன்னால் இயன்ற அளவு குட்டிகளைப் போட்டு, தான் இறந்தாலும், தனது இயல்புகளை அக்குட்டிகள் மூலம் பூமியில் இருக்க விட்டுச்செல்கின்றது..!  இந்த ஆசை மனிதர்களை மிக அதிகமாக பாதிக்கின்றது. சாதனைகள் செய்தால் என்ன..? செய்யாவிட்டால் என்ன..? நான் போனாலும் எனது வாரிசுகள் இந்தப்பூமியில் இருக்க வேண்டும் என்ற ஒரு விருப்பம் இயல்பாகவும், மனித கற்பித்தல்கள் ஊடாகவும் எல்லோருக்கும் வருகின்றன..! இந்த மனித இயல்பு உண்மையானதா..? நியாயமானதா..? என்பது  விவாதத்திற்கு உரியது. ஆனால் பெரும்பாலோனரின் விருப்பம் அவ்வாறே உள்ளது..!

இந்தப்படத்தின் கதையே, குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும், குழந்தையே பிறக்காக, வசதியான தம்பதி ஒன்றிற்கும், பணத்திற்காக வேறுவழியில்லாமல் குழந்தையை விற்கும் தாய்க்கும், அதுமாத்திரமன்றி, இதனை ஒரு விவாதப்பொருளாக மாற்றி, அதனூடாக தனது TRPஜ ஏற்ற முனைந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் இடையில் இருக்கின்றது..!

பலமுறை கருக்கலைப்பு செய்த தாயின் கதாபாத்திரத்தில் நடித்த பெண் உண்மையாகவே வாழ்ந்துள்ளார்..! அவரை ஏமாற்றி, பகட்டாக அலையும் பங்காளனைக்காணக் கடுப்பாக இருக்கின்றது.  நல்லது செய்கின்றோம் எனநினைத்து  எம்மையறியாமலே தவறுகள் செய்வதற்கும் வாய்ப்பு உண்டு. சானலின் நிலை அப்படித்தான் இருக்கின்றது. அரசு, இதனை முறைப்படுத்த சட்டரீதியிலான வழிமுறைகள் இருந்தாலும், அதையும் தாண்டிப் பணத்திற்காகவும், உதவிக்காகவும் சில தவறுகள் இயல்பாக நடந்துவிடுகின்றன..! எல்லாவற்றிற்கும் சட்டங்களைப் பார்க்காமல் எது நியாயம் எது சரி என்ற ரீதியில் படத்தை முடித்திருப்பது நிறைவைத் தந்தாலும், அப்பாவி அபலைப் பெண்களைக் காக்கவும் நல்ல வழிமுறைகளை அரசு வழங்கவேண்டும்.  என்ன தான் அரசு என்றாலும், ஒவ்வொரு தனிமனிதனும் தனது கடமையை உணர்ந்து செயற்பட்டால் ஒழிய, இவ்வாறான சிக்கல்களைத் தவிர்க்க முடியாது.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நன்றாக தமது பங்கைச் செய்துள்ளார்கள். வழமைபோல் நடிகை லஷ்மி ராமகிருஷ்னன் படத்தை  தரமாக இயக்கியுள்ளார்..!

ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது என்பது சரியான முறையில் நடைபெறவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக  குழந்தையின் நலனையே அங்கே முக்கியமாகக் கருதவேண்டும். அது தான் வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லது. சிலவேளை இக்கூற்று பெற்ற தாய்க்குத் தவறாகவும் இருக்கலாம். இருந்தாலும் பிள்ளை முக்கியம்..!

அரசின் பொறுப்பு, அனைத்தையும் காப்பதே..!

 


ஆ.கெ.கோகிலன்

13-04-2024.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!