குட்நைட்..!
தமிழராகிய எமது வாழ்க்கைக்கும் ஆங்கிலேயர் வாழ்க்கைக்கும்
இடையில் பல ஒற்றுமைகள், திணிப்புக்கள் ஊடாகவே வந்தன..! கடந்த 500 வருடங்களில் வந்த
தாக்கங்களாகவே, நான் அவற்றைப் பார்க்கின்றேன். பிறப்பிலேயே மனிதர்கள் விலங்குகள் போலவே
உருவாகிப் பிறந்தாலும், பின்னர் ஊட்டப்படும் உணவுகள் போன்று கல்வியும் பழக்க வழக்கங்களும்
எம்மால் அறிய முடியாத யாரோ சிலரின் தீர்மானங்களாகவே
இருக்கின்றன..! என்ன செய்வது, ஆதீக்க குணம் கொண்டவர்களின் இவ்வாறான திணிப்புகள் ஊடாக,
பல வாழ்வியல் விடயங்கள் தவறுகளாகவோ அல்லது குறைபாடுகளாகவோ பார்க்கப்படுவதும், பரப்பப்படுவதும்
இன்னும் தொடர்கின்றது..! இயல்பாக இருக்கும் சில விடயங்கள், தற்போதைய நவீன மற்றும் நாகரீகப்படுத்தப்பட்ட
சூழலில் குறைபாடுகளாகவே பார்க்கப்படுகின்றன..! முயற்சிகள், பயிற்சிகள் ஊடாக கல்வியையும்
ஏனைய சில திறன்களையும் பெறுவது போல், இவற்றால் மாற்ற முடியாத சில இயல்புகளும் இருக்கின்றன
என்ற உண்மையைப் பலரால் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை.
இயற்கையாக வந்தாலும், அதனைக் குறைபாடாப்பார்த்து குழம்பும்
கதையாக இப்படம் வந்துள்ளது..! குறட்டை (Snoring) என்பது ஒரு சாதாரண விடயம்..! நிறம் ஒரு சாதாரண விடயம்..! வியர்வை நாற்றம் ஒரு
சாதாரண விடயம்..! இவ்வாறாக பல விடயங்கள் மனிதர்களை வேறுபடுத்துகின்றன..! ஆனால் கொடுத்த
அல்லது பெற்ற அறிவு அனைவரையும் ஒரே மாதிரிச் செயற்பட வைக்கின்றது. இயற்கையாக இருக்கும்
வேறுபாடுகளை ஏற்க மனம் மறுக்கின்றது.
தற்போதைய சந்ததிப்பிள்ளைகளைப் பார்க்கப் பாவமாகவும், அவர்களின்
வாழ்க்கையை நினைக்கப் பயமாகவும் இருக்கின்றது..!
இந்தப்படத்தின் கதை குறட்டையால் வரும் குடும்பச்சிக்கல்களையும்,
பிள்ளை வேண்டும் என்று செய்யும் அதீத செயல்களாலும், கடந்த கால வாழ்க்கையால், தனிமையான
பயமான சூழலில் மாட்டியுள்ள ஒரு இளம் பெண்ணின் உணர்வுகளுக்கும் இடையில் பயணிப்பது, யதார்த்தமாகவும்,
அழகாகவும், இருப்பதுடன் ரசிக்கவும் முடிகின்றன.
மனிதர்கள் பல தடவைகள் குழப்பமான சூழலுக்குள் தள்ளப்பட்டு,
பல சுற்றுக்களின் பின்னர் தெளிவடைவதை, மிக அழகாக ரசிக்கும் படி காட்டியதற்கு, விநாயக்
சந்திரசேகரன் என்ற இயக்குனரைப் பாராட்டலாம்.
படத்தின் நாயகன் கெ.மணிகண்டன், நாயகி மீத்தா ரகுநாத் மற்றும் அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தன. தொழில்
நுட்பம் தரம். இசை இன்னும் காதுக்குள் ஒலிக்கின்றது..! “நான் காலி நான் காலி..” என்ற
பாடல் கொஞ்ச நாளைக்கு வாய்களில் தவளும்..!
கதையை நம்பி களமிறங்கிய அனைத்து கலைஞர்களையும் பாராட்டலாம்.
சில மிகைப்படுத்தல்கள் இருக்கின்றன. இருந்தாலும் இந்தக்கதையை யதார்த்தம் போல் எடுத்ததற்கு,
இயக்குனரை மீண்டும் பாராட்டத்தோன்றுகின்றது. 2023இல் வெளிவந்து வெற்றிபெற்ற இந்தப்படத்தை
அனைவரும் ஒருமுறை பார்க்க வேண்டும்.
ஆ.கெ.கோகிலன்
11-04-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக