செய்நன்றி மறவோம்..!

 


 


நான் திருகோணமலை வரும்போது, எனது நண்பரும் மற்றும் முன்னாள் ஆசிரியரும், ஓய்வுபெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளருமான ஒருவர் வீட்டிற்கு வருவதை வழக்கமாக  வைத்திருந்தேன். அவருடைய வீட்டில் சில நாட்கள், எனது குடும்பத்துடன் தங்கிய அனுபவமும் உண்டு.! நீண்ட காலத்திற்குப் பிறகு, இம்முறை இடமாற்றம் பெற்று,  திருகோணமலை வரும்போதும், அந்த எண்ணமே இருந்தது..! பின்னர் அவரது உறவினர்  மூலம் தெரிந்தது, அவர் ஊரில் இல்லை..! கனடாவில் குடும்பத்துடன் இருப்பதாக..! அத்துடன் அவரை மறந்து விட்டேன். இனி எப்படி நேரடியாக அவரைச் சந்திப்பது..?

அவர் சில வருடங்களுக்கு முன்பு மகனைப் பறிகொடுத்து மிகுந்த துயரத்தில் இருந்தார்..! அந்நேரம், நானும், மனைவி மற்றும் பிள்ளைகளும் அவரது வீட்டிற்கு வந்தோம். அவர்கள் சோகம் கேட்டுக்கவலை அடைத்தோம். அவருக்கு என்னால் ஆறுதல் மட்டுமே சொல்லமுடிந்தது.

இவ்வாறாகச் சூழல், சில வருடங்கள் கடந்த பிறகு, குறிப்பாக சில நாட்களுக்கு முன்னர், ஒரு அழைப்பு வந்தது.! நான் யாழ்ப்பாணம் வரவேண்டும் என்றும் மற்றும் உங்களைச் சந்திக்க வேண்டும் என்றும் அதே நண்பரான  ஆசிரியர் கேட்டுக்கொண்டார்..!

 உடனே நான் சொன்னேன் நானே உங்களைப் பார்க்க விரும்புகின்றேன். தற்போது நான் திருகோணமலையில் தான் இருக்கின்றேன். குறித்த நிறுவனத்தில் தான் பணிபுரிகின்றேன்.  உங்களை அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் செல்லுகின்றேன். தற்போது சில நாட்கள் மட்டும் அவரசப்படாமல் இருக்கச்சொன்னேன். அவரும் சம்மதித்தார்.

எல்லாம் சுமூகமாக அமைய, நான் யாழ்ப்பாணம் அவரை அழைத்துக்கொண்டு சென்று சில நாட்கள் எனது வீட்டில் தங்க வைத்துப்பின்னர், அவரது உறவினர் வீட்டிலும் தங்க வைத்து, எனது ஊர் கோவிலுக்கும் கூட்டிச்சென்று, இருவரும் அந்தக்கோவிலில் அன்னதானமும் உண்டு மகிழ்ந்து, அவருடைய சகோதரியின் வீட்டிலும் தங்க உதவிசெய்து, அதன்பின்னர், குறிப்பாக எனக்கு எனது நிறுவனத்தினர், பிரியாவிடை செய்த நாள் அன்று, அவரையும், அவருடைய பல சாமான்களையும் எனது காரில் ஏற்றிக்கொண்டு அவரது திருகோணமலை வீட்டிலே விட்டுவர இறைவன் தருணம் அமைத்துக்கொடுத்தான்..!

பொதுவாக உதவி செய்தவர்களுக்கு, திருப்பி உதவி செய்யும் வாய்ப்பு கிடைப்பதில்லை..! சிலவேளை இறைவன், எம்மைக் கடன்காரராகவே மாற்றிவிடுவான். இங்கு இறைவன் சற்று இரக்கப்பட்டு, உதவி செய்தவருக்கு என்னால் இயன்ற சிறு உதவியையாவது செய்ய வைத்ததற்கு  இறைவனுக்கு நன்றி சொல்லக்கடமைப்பட்டுள்ளேன். அது மாத்திரமன்றி, அந்த உதவி எனக்கும் ஒரு மனநிறைவைத் தந்தது என்றால் அது மிகையாகாது..!

நான் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்று, ஆரம்பத்தில் வழங்கப்பட்ட முற்பயிற்சியிலே அவரைச் சந்தித்தேன். அவரைப்பார்த்ததும் எனது அப்பாவின் சகோதரியைப் பார்த்த மாதிரி இருந்தது..! முன்னாயத்தம் இல்லாமல் வகுப்பிற்குப் போனால் என்ன நடக்கும் என்பதை, ஒரு ஜோக் மூலம் விளங்கப்படுத்தி, அனைவரையும் சரிக்கவைத்தார்..!

நான்  மூதூரிலுள்ள சேனையூரில் படிப்பித்த காலத்தில் அடிக்கடி வந்து என்னுடன் தங்குவார். விளையாட்டுக்கள் பற்றி நிறையக்கூறுவார். அது மாத்திரமன்றி, நான் முதன் முதலாக எடுத்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததே அவர் தான்..! அதுவும் என்னைக் குருநாகல் கூட்டிச்சென்று, எனது பட்ஜட்டிற்கு ஏற்ப ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கித் தந்தவரும் அவர் தான்..!

நான், உவர் மலையில் இருந்த காலத்தில் அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து என்னுடன் கதைப்பார். எனது முயற்சிகளை பாராட்டுவார்.  அவரது மூத்த மகன் வசிக்கும் நாடான சிங்கப்பூர் போனால், எனது பிள்ளைகளுக்கு ஏதாவது சட்டைகள் வாங்கி வருவார்..! உறவினர்களே இங்குள்ள பிஸ்கேட் பெட்டிகளுடன் வரும்காலத்தில், எம்மைப்பற்றி நினைத்து அந்த நாட்டிலே வாங்கி வருவதென்றால் ஏதாவது தனிப்பட்ட பாசம் இருக்க வேண்டும். அவருக்கு அது இருந்தது..!  இம்முறையும் அது வெளிப்பட்டது..! அவருக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். அவருக்கு நிறைய உதவிகள் செய்ய வேண்டும் எனவும் அவருடன் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும் எனவும் நினைத்தேன். தற்போதைய அவசர சூழல் அதற்கு இடமளிக்கவில்லை. பார்ப்போம் காலம் வழிவிட்டால், அவருடன் சில நாட்கள் முழுமையாகத் தங்கி, அவருக்குப் பிடித்த சைவ உணவுகளை சமைத்து உண்டு, ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் செய்து, அவரை மகிழ்விக்க வேண்டும்.  அவரது சோகத்தை முற்றாக குறைக்க முடியாவிட்டாலும், கொஞ்சமாவது குறைக்க, முயலவேண்டும்.

 

ஆ.கெ.கோகிலன்

05-03-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!