மேதகு..!

 



சில திரைப்படங்கள் இலங்கையில் கிடைக்காது. இலங்கையின் அரசியல் சட்டங்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதால் அரசு அதனை ஊக்குவிக்காது. மாறாக அதனைத் தடுக்கவே முற்படும். தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை யாராலும் தடுக்கவோ, தவிர்க்கவோ முடிவதில்லை. எதுவும் எமது கைகளில் வந்துவிடும். அரசு எத்தனை தொழில்நுட்பவியலாளர்களை வைத்து அவ்வாறான விடயங்களைத் தடுத்தாலும், அதையும் தாண்டி அவ்விடயங்களை அணுகுவதற்கு உதவக்கூடிய தொழில்நுட்பங்களும் இருக்கவே செய்கின்றன..!

பொலிஸ் எவ்வளவு கட்டுப்பாடுகள், சோதனைகள் என செய்தாலும், குற்றங்கள் குறைகின்றதா என்றால் கேள்விக்குறி தான்..! இது உலக நாடுகள் அனைத்திற்கும் பொருந்தும். நன்மைக்கான தொழில்நுட்பங்கள் வர, அதனை முறியடிக்கவும், தீமையை ஊக்கிவிக்கவும் தொழில்நுட்பங்கள் வருவதை யார் தான் தடுப்பது..? கள்ளனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..!

சரியான அறிவு எது என்பதைப் பிறர் சொல்வதை விட, அவரவர்  தமது அனுபவத்தினூடாகவும், கற்றலின் ஊடாகவும் தெரிந்து பயன்படுத்த வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்னர் திரு.த.கிட்டு என்பவர் இயக்கிய தமிழர்களின் போராட்ட வரலாறு தொடர்பான மேதகு என்ற திரைப்படத்தை,  உலகிலுள்ள பலர் சேர்ந்து தயாரித்தார்கள்..! வெளிநாடுகளில் படத்தைப்பற்றி நல்ல கருத்துக்கள் வந்தன. அதேவேளை மாற்றுக்கருத்துக்களும் இருக்கத்தான் செய்தன.

படத்தில் வரும் சம்பவங்கள் உண்மையில் நடந்த காலகட்டத்தில்,  நான் சிறுவனாக இருந்துள்ளேன். எனது தாய், தந்தை அந்நேரத்தில் சிங்களவர்கள் செய்யும் இனப்படுகொலைகள் பற்றி சொல்லக்கேள்விப்பட்டு, கவலைப்பட்டுள்ளேன். எனது மாமா நீண்டகாலமாக கொழும்பிலுள்ள தனிச்சிங்கள இடமான பொரளையில் இருக்கின்றார். அவரைச் சிங்களக்காடையர்கள் கொல்ல முற்பட்டும், உடமைகளைச் சேதப்படுத்தியும் இருந்தார்கள்..! அதே வேளை சில நல்ல சிங்களவர்கள் அவரையும், அவரது குடும்பத்தையும் காப்பாற்றி, அவரது வீடு, தீயில் எரிவதைத் தடுத்தும் இருந்தார்கள்.  இன்றுவரை, அவர் அதேவீட்டில் சில அடிப்படைத் திருத்தங்களுடன், இறைபற்றுடன் வசிக்கின்றார்..! நாட்டைவிட்டு ஓட வாய்ப்பிருந்தும், ஏதோ ஓட மனமில்லாமல், கணத்தை என்னும் சுடலை அருகிலே உள்ளது..! ”அடித்தவனும் அங்கே தான் வரப்போகின்றான்..! அவனால் செத்தவனும் அங்கே தான் போனான்..! இடையில் நின்றவனும் அங்கே தான் போகவேண்டும்..! அறிவில்லாமல் மனிதர்கள் அடிபடுகின்றார்கள். நான் பெரிசு, நீ பெரிசு என முரண்படுகின்றார்கள்..” என்பார்..!

இந்தப்படத்தைப் பார்க்கும்போது எனக்குள் ஏற்பட்ட எண்ணங்களே மேலே கூறப்பட்டவை. மற்றவனை அடிக்கவேண்டும் என்ற எண்ணம் வரும் அளவிற்கு மட்டான கல்வி முறைகள் பரவிவிட்டன..!

பாவம்..! சிறு பிராயத்தில் இருந்து, தமிழர்கள் சிங்களவர்களால் தாக்கப்படுவதையும், தரப்படுத்தல்கள் போன்ற கல்வித்தடைகளால் பாதிக்கப்படுவதையும், அப்பாவிப்பெண்கள்  பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுவதையும் கேட்கும்போது, ஏற்படும் விடுதலையுணர்வு,  அவருக்கு திருப்பி அடிக்கவேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது..!

இந்த எண்ணத்திற்கு, தமிழர் அட்பிரட் துரையப்பா என்ற யாழ் நகர மேயர் பலியாகத் தொடர்கின்றது புலிகளின் வரலாறு..!

நான் ஆரம்பத்தில் சொன்னமாதிரி படத்தைப் பல கோணங்களில் பார்க்கலாம். பிரபாகரன் பார்வையில் அவர் தன்னால் இயன்றதை முயன்று இருக்கின்றார். இன்னும் பல பார்வைகள் இருக்கின்றன..! 360 பாகை ஒரே தளப்பார்வைகளும்,  360 பாகையிலான பல பரிமாணப்பார்வைகளும், ஏன் முடிவிலிப்பார்வைகளும் இருக்கின்றன..!

இந்த உலகத்தில் யாரும் நிலைக்க முடியாது..! சில ஆயிரம் ஆண்டுகளுக்கு வேண்டுமானால் திட்டம் போடலாம்..! ஆனால், பிரபஞ்சம் எதனை அனுமதிக்கின்றதோ அதுவே நிலைக்கும். அது தமிழாகவும் இருக்கலாம்.

குறைந்த பட்ஜெட்டில் படம் இருப்பதால் பல காட்சிகள் நாடகம் போல் இருக்கின்றன. படத்தில் வரும் பல இடங்களும் பொருத்தமாக இல்லை. இருந்தாலும் கதைக்குள் இருக்கும் உணர்வு எல்லாத் தமிழர்களுக்கும் வந்தே இருக்கும்..! அதேபோல் தமிழர்களுக்கிடையே இருக்கும்  நீயா நானா போட்டி, அவர்களை அறியாமல் தற்போதைய சூழலுக்கு எம்மை எல்லாம் அழைத்துக்கொண்டுவந்துள்ளது.

சிறந்த தலைவன் செத்தாலும் வாழ்வான்..!  தலைவன் உண்மையாக இருந்தாலும் தொண்டர்கள் அவ்வாறு இல்லை என்றால் தோல்விகளும், வரலாற்றுத் தவறுகளும் வந்து தொற்றிக்கொள்ளும். அது இங்கே நடந்துள்ளது..! மிச்சப்பாகங்கள் வர, நிஜம் அனைவருக்கும் புரியும்.

எமது வரலாற்றைத் துணிந்து திரைப்படமாகத் தொடங்கியதற்கு இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.  பங்குபற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். அனைத்துப்பாகங்களும் வரட்டும்.  தகவல் என்பது யாவரும் அறிந்து கொள்ள வேண்டியதே..! உண்மைகள் கசக்கலாம்..!  ஆனால் என்றும் நிலைக்கும். மறைத்தாலும், காலத்தால் வெளிப்படும். பிழையான வரலாற்று தகவல்களை வழங்கினால், சான்றுகளுடன் அவற்றைத் திருத்தக்கோரலாம். அறிவான சமூகங்கள் அதனை ஏற்றும். அறிவிலிச்சமூகங்கள் வரும் காலத்தில் அனுபவப் பாடமாக அவற்றை தெரிந்து, உணர்ந்து கொள்ளும்.

 


ஆ.கெ.கோகிலன்

15-04-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!