பரீட்சைப் பணிப்பாளர்..!

 



என்னுடைய விருப்பம் தாண்டி, நான் திருகோணமலைக்கு மாற்றலாகிப்போகக் காரணம் முன்னைய பணிப்பாளர் நாயகம்..! அவர் என்னிடம், ஒர் உதவியாக கேட்டார் ”யாழ்ப்பாணத்தை விட்டு திருகோணமலைக்கு சென்று அங்குள்ள பணிப்பாளர் யாழ் வர உதவி செய்யவும், அத்துடன் தற்போதைய பரீட்சைப் பணிப்பாளர் ஓய்வு பெற்றதும் அதற்கு விண்ணப்பித்து, தலைமையகத்திற்கு போகவும், முயலச்சொன்னார்.” தற்போது திருகோணமலையில் வேலைசெய்து நான்கு மாதங்கள் முடிய முன்னரே பரீட்சைப் பணிப்பாளருக்கு கோரியுள்ளார்கள்..! திருகோணமலை வந்து, இன்னும் சரியாகத் தொழிற்பட முன்னரே இப்படியான நிலமை வந்தது, தர்ம சங்கடமாக இருக்கின்றது.  திருகோணமலைக்கு ஒரு பதில் பணிப்பாளரே போதும். கடந்த காலத்தில் 8 வருடத்திற்கு மேலாக அவ்வாறே நடந்தது..! தற்போதும் அதற்குப் பொருத்தமான ஒருவர், அங்கு நீண்டகாலமாகக் காத்தும் இருக்கின்றார். தற்போதைய நிலையில், முதலில் இருந்தே, நானும் திருகோணமலைக்குச் செல்ல விரும்பவில்லை. ஆனால் இடமாற்றம் என்று வந்ததால், ஏற்று என்னால் இயன்ற அளவில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றேன். கடந்த 5 வருடங்களுக்குப் பிறகு படிப்பிக்கவும் தொடங்கியுள்ளேன்..! பிள்ளைகளுடன் கதைப்பதும், படிப்பிப்பதும் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்து வருகின்றது. இந்நிலையில் திருகோணமலையில் தொடர்ந்து இருந்தாலும் பராவாயில்லை என்ற எண்ணம் இருந்தாலும், வரும் வாய்ப்பை தவறவிடவும் மனமில்லை. எமது பணிப்பாளர்கள் அனைவருக்கும் எனது இந்தக்கோரிக்கை தெரியும்..! பணிப்பாளர் தரம் 1 இல் 4 வருடங்களுக்கு மேல் இருந்தால், பரீட்சைப் பணிப்பாளர் ஆவதற்கு  சிக்கல் இல்லை. சில சமயம், மொழி ஒரு சிக்கலாக மாறினால் ஒன்றும் செய்ய முடியாது. எமது நிறுவனம் ஆங்கிலமொழி வாயிலாகவே பாடங்கள் நடந்தாலும், சில இடங்களில் அலுவலக மொழியாக பிரதேச மொழிகள் பயன்படுகின்றன..! தலைமையகத்திலும் அவ்வாறான சூழல்கள் இருக்கின்றன..! பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று..? நாளை என்பது எமது கையில் இல்லை. நேற்றையது வரலாறாகிவிட்டது..! இன்று, அதுவும் இக்கணம் மட்டுமே எம்மிடம் இருக்கின்றது. இயற்கையினதும் இறைவனதும் அனுக்கிரகம் இருந்தால், தான் நாம் நாளை என்பதைச் சந்திக்கலாம். இது தான், ஒவ்வொருவருடைய உண்மையான வாழ்க்கையும்..! எந்தக்காசையும், அறிவையும், புகழையும் வைத்து நாளையை எமக்காக யாரும் 100 சதவீதம் மாற்றமுடியாது.

இந்த வாரம் திருகோணமலையில் இருந்து, சனி மற்றும் ஞாயிறு வேலைசெய்ய முனைந்தேன். வெள்ளியுடனேயே, பல வேலைகளை முடித்துவிட்டேன். இருந்தாலும் வார இறுதியில் பிள்ளைகளுக்கு படிப்பிக்கலாம் என்று நினைக்க, அவர்களும் தற்போதைய கடும் வெப்பச் சூழலில், வரும் நீண்ட விடுமுறைகளுக்கு, வீடுகளுக்குச் செல்லவும், சுற்றுலாச் செல்லவும் தொடங்கிவிட்டார்கள்..!  ஏப்ரல் மாதம் வரும் 8ம் திகதி சம்பளம் போடவும்

ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது. அதன் பிறகு நடைபெறுவதற்கான நிகழ்ச்சிகளையும் ஒழுங்குபடுத்தாகிவிட்டது. இனி சும்மா இங்கு இருப்பதில் பயனில்லை என நினைத்து, தீடிரெனத் தங்கும் முடிவை மாற்றி, உடனேயே பஸ் எடுத்து, வீடு வந்துவிட்டேன். முடிவுகளை இடையில் மாற்றியதால், சில குழப்பங்களும் நடந்தன..! மாலை குடிப்பதற்கு பால் கேட்டிருந்தேன். சுடச்சுடக் காய்ச்சிய, கறந்த பசுப்பால் எனது பஸ் நிலையம் வரைவந்து எனது வயிற்றிற்குள் சென்றது..! அவசரப்பட்டுக் குடித்ததால் உதட்டில் கூடக்காயம் வந்தது. இடையிலே தான் தெரிந்தது, போன் சார்ஜ்ஜரை  மறந்துபோய்  அலுவலகத்திலே விட்டுவந்துவிட்டேன் என்பது..! எனது அலுவலகத்தில் எரிந்த லைட்டுக்களை கூட அணைக்க மறந்துவிட்டேன்..! பஸ்வரும் நேரத்தில், முடிவு மாறியதால் வந்த வினைகளே இவைகள். பஸ் கூட நிறையச் சனங்களுடன் வந்தது..! நான் நினைத்தேன் இன்று நின்று தான் யாழ்ப்பாணம் போகவேண்டும் என்று..! ஆனால் ஆச்சரியம் ஒரு வயதானவர், சாம்பல் தீவு கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் என்னை இருக்கச்சொன்னார். ஹொரோபொத்தானை வரமுதலே இருக்க இடம் கிடைத்தது சந்தோசம். சிறிது நேரத்தில் வேறோர் இடம் கிடைக்க அவருக்கு அந்த இடத்தை திரும்பக்கொடுத்தேன். வவுனியாவிற்குப் பிறகு எனக்கு அருகிலுள்ள யன்னல் கரையை விரும்பியதால், அவரை அழைத்து இருக்க வைத்தேன். அவரது வாழ்க்கையே  இறைவனோடும், தியானங்களோடும் போகின்றது..! பிள்ளைகள் இல்லை என்பதால் மனத்தில் வருத்தங்கள் இருந்தாலும், பூமி வாழ்க்கையே போலியான மாய வாழ்க்கை தான் என்ற உண்மை அவருக்கு நன்றாகப் புரிந்துள்ளது..! இருந்தாலும், அதற்கு ஏன் இவ்வளவு அடி பிடிகள்..? அதன் பிறகுள்ள நிரந்தர நிம்மதியான வாழ்விற்குப் போட்டி குறைவு..! அவருக்கு உலக உண்மை விளங்கியதால், சரியான திசையில் பயனிக்கத்தொடங்கிவிட்டார். அவர் திருகோணமலை என்றாலும் அவரது உறவினர்கள் சாவகச்சேரியில் இருப்பதால், அங்கே செல்கின்றார். மரணவீடு என்று சொன்னார். அப்பாவியான மனிதர். சிலருக்கு வித்தியாசமாகத் தெரியும். வரும்போது இடையில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று அந்தரப்பட்டார். உண்மையில் பாவமாக இருந்தது. மகிந்தா போட்ட காப்பெட் வீதிகள் விரைவாகப் போக வழிவகுத்ததால், சனம் அதில் பறக்கவே விரும்புகின்றது..! என்ன செய்ய, வயதானவர்கள் பாடு சங்கடம் தான்..? கொன்டக்டர் மற்றும் ரைவருடன் கதைக்கச் சொன்னேன். ஒரு இடத்தில் நிற்பாட்டி, அவருக்கு உதவினார்கள்..! வண்டியில் இருந்தவர்கள் ஒரு மாதிரி அவரைப் பார்த்தார்கள்..! அதனைப்பொருட்படுத்தாமல்,  என்னைப் பார்த்து  மிகுந்த சந்தோசத்துடன்  அமர்ந்தார். சந்தோசம் எங்கும் இருக்கின்றது..! வெயில் இருந்தால் தான், நிழலின் அருமை புரியும். வாழ்க்கையிலே துன்பங்கள் இருந்தால் தான் இடையிடையே கிடைக்கும் இன்பங்கள்  மருந்தாகவும், ஊக்கச்சக்தியாகவும் இருக்கும். சிலருக்கு தொடர் தோல்விகளும், சிலருக்குத் தொடர் வெற்றிகளும் அமைவது உண்டு..! அவை பின்னர் மாறலாம்..!

போன ஞாயிறு போகும்போதும், சில மறக்க முடியாத சம்பவங்கள் நடந்தன. நான் 10 இலக்க சீற்றை புக்பண்ணி இருந்தேன். பஸ்ஸில் ஏறியதும் அந்த இடத்தில் ஒரு பெண் இருந்தார். 3 சீற்றுகள் கொண்ட அந்த சீற்றில் தொடர்ந்து அமர்ந்தேன். இடையில் நடத்துனர் வந்து, உங்கள் இருக்கை எண்  என்ன..? என்று கேட்க போனைப் பார்த்தேன். அதில் 12 என்று இருந்தது. எனது மறதியை பற்றி நினைத்துகொண்டு, 12 இலக்கத்தில் போய் இருந்தேன்.  பிறகு போனைப் பார்த்தேன். நான் 10 இலக்கத்தில் தான் புக்பண்ணியிருந்தேன். இடையில் சீற்றை மாற்றி எனக்கும் அறிவித்து இருந்தார்கள். சரி..! போனைப் பார்க்காது விட்டது எனது தவறு என்று உணர்ந்து, பேசாமல் இருக்க அந்தப்பெண்ணுக்கும் நடத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது..! சண்டை பிடித்தார்கள். அந்தப்பெண்ணுக்கும் 10ம் இலக்கம் கொடுக்கப்பட்டு இருந்தது. பிறகு பார்த்தால், இன்னோருவருக்கும் 10 ம் இலக்கம் கொடுக்கப்பட்டு இருந்தது. பிறகு தான் எமது சீற் புக்கிங் தொடர்பான புரோக்கிராம் மீது சந்தேகம் வந்தது. இறுதியாக வந்த 10 இலக்க நபர், சீற் இல்லாமல் நின்றுவந்தார். நடத்துனர் அந்தப் பெண்ணுடன் சண்டைபோட்டார். அந்தப்பெண்ணும் சாதாரண  பெண் போன்று இல்லாமல் மிகப்பருமனாகவும் நின்றுவர முடியாதவராகவும் இருந்தார். பின்னர் நான் நிலமையை உணர்ந்து, எனது சீற்றை அந்த நபருக்கு கொடுத்தேன். அவர் சங்கடப்பட்டார். நீங்கள் நிற்பதால் நடத்துனர் அந்தப்பெண்ணுடன் வாக்குவாதப்படுகின்றார். பெண்ணினது நிலமையைப் பார்க்க பாவமாகவுள்ளது. எனக்கும் தொடர்ந்து இருந்து பயணிப்பது, கஷ்டமாக இருக்கின்றது. “இருங்கள்..” என்றேன். பின்னர் இருந்தார். பிறகுதான் தெரிந்தது திருகோணமலை ஈசொப்டில் விரிவுரையாளராக வேலை செய்கின்றார் என்பது..! அவரும் அவரது மகனும் அன்று வந்திருந்தார்கள். மனைவியும், இன்னோரு மகளும் வடமராட்சியில், அவர்களது இன்னோரு மகப்பேறிற்காக வந்துள்ளார்கள்.  ஒருவாறு அன்றைய பஸ் பயணம் முடிந்தது..! இன்றைய பஸ் பயணமும் நிம்மதியாக முடிந்தது..!  எல்லாம் சுபமாக முடிய, இறைவனின் கருணையே எமக்கு வேண்டும் என்ற உணர்வோடு முடிக்கின்றேன்.

 

ஆ.கெ.கோகிலன்

06-04-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!