போர்த்தொழில்..!
சில படங்களுக்குத் தான் நல்ல விமர்சனங்கள் வரும். அந்த வகையில்
இந்தப்படத்தைப் பற்றி நல்ல, வாய் மூலமான விமர்சனங்கள் (Words of Mouth) வந்தன..! அப்பவே
நினைத்தேன் படத்தைப் பார்க்க வேண்டும் என்று..! 2023இல் போட்ட திட்டம் 2024இலே தான்
பலித்தது..!
இன்று தான் முழுப்படத்தையும் பார்த்து முடித்தேன்.
படம் தொடங்கியது முதல், முடியும் வரை தரமாகவும், விறு விறுப்பாக
இதுவரை பார்க்காத வகையில், உளவியல் மற்றும்
அறிவுக்கடத்தல் போன்ற அனுகுமுறைகளுடன் கூடிய சுவாரசியமான திரைக்கதை மூலம்
அசோக் செல்வன், சரத்குமார், நிகிதா விமல், சுனில் சுகாடா
மற்றும் மறைந்த சரத்பாபு போன்றோர் வாழ்ந்து இருந்தார்கள். அவ்வளவு யதார்த்தமாக படம்
சென்றது..! கொஞ்சம் கூட போரடிக்கவில்லை. சில
காட்சிகளைப் பார்க்கப் பயமாக இருந்தன..! சரத்பாபுவின் தோற்றம் நோஞ்சான் மாதிரித் தெரிந்தாலும்
உள்ளுக்குள் ஒரு பலமான மனிதன் இருப்பது போல் பயத்தை உருவாக்கியது..! அது மாத்திரமன்றி, அவர் செய்த கொலைகளைப் போல், அறிவுக்கடத்தலூடாக
இன்னோருவர் தொடர்கொலைகளைச் செய்வதும், அதனைக் கண்டுபிடிக்கப்போய், துப்பறியும் நாயகியே
மாட்டுவதும், அவரை கதாநாயகன் காப்பதும் என வழமைபோல் என்றாலும் அதுவும் தேவையாக இருந்தது.
உளவியல் ரீதியாகக் கொலையாளிகளைப் பார்த்தால் பாவமாக, மனநோயால்
பீடிக்கப்பட்டவர்களாகத் தெரிந்தாலும், இன்னோரு வழியில் பார்த்தால், என்ன குற்றத்தை
யார் செய்தாலும் அவர்களைக் கொல்ல முற்படுவது தவறுதானே என்ற கருத்தைப் படம் வலியுறுத்துவது
மக்களுக்கு நல்லதாகப் பட்டாலும், எல்லோரும் நீதி நியாயங்கள் பார்த்தால், யாருமே குற்றவாளிகள்
அல்ல..! இறைவனே குற்றவாளி என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கும். ஒவ்வொரு தொழிலுக்கும்
ஒரு தர்மம் உண்டு. அத்துடன் நிறுத்த வேண்டும். அதையும் தாண்டி இன்னொரு தொழிலுக்கான
தர்மத்தையும் சேர்த்து, செயற்பட முனைந்தால் முடிவு வழங்குவது கடினம். சில சமயம், நாமே
பொறிக்குள் மாட்டி மாயவேண்டியிருக்கும்.
தொழில்நுட்பங்களுடன், நடிப்பு மற்றும் இசை போன்றன போரடிக்கவில்லை.
விக்னேஷ் ராஜாவின் இயக்கம் தரம். 2023இல் இதுவும் ஒரு வெற்றிப்படம்.
ஆ.கெ.கோகிலன்
10-04-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக