பிறேமலு..!
இன்று போயா தினம். கொஞ்ச நேரம் வேலை ஒன்றும் இல்லாமல் இருக்க, நித்திரை
வந்துகொண்டிருந்தது. அப்போது எழும்பிச்சென்று ஒரு பத்திரிகையைப் பார்க்கும் போது ஒரு
மலையாளப்படம் 3 கோடியில் எடுக்கப்பட்டு 130 கோடி தாண்டி ஓடிக்கொண்டிருக்கின்றது என
இருந்தது. அந்தப்படத்தை உடனே இணையத்தில் தேடிப் பார்த்தேன்.
நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு அழகான காதல் கதையாக அப்படம் இருந்தது..!
முன்னைய காலங்களில் பெண்கள் ஆண்களுடன் அதிகமாகப் பழகுவதில்லை. அப்படி பழகினால் அவர்கள், உறவினர்களாக அல்லது சகோதரங்களாகவே இருக்க
முடியும். தற்போதைய காலத்தில் ஒரு பெண்ணிற்கு பல ஆண் நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்களில்
யாரை அப்பெண் விரும்புகின்றார் என்பதை அவளாக வாய் திறந்து சொன்னால் ஓழிய யாரும் சொல்லிவிட
முடியாது..! அது மாத்திரமன்றி, வாய் திறந்து சொன்னாலும், அதனை முழு மனத்துடன் சொல்கின்றாளா
அல்லது ஒரு விளையாட்டுக்காகச் சொல்கின்றாளா என்பதைப் பொறுத்தே அப்படியான காதலின் ஆழம் இருக்கும்.
இந்தப்படத்தின் கதையே அவ்வாறான சூழலில் மிகவும் சுவாரசியமாகவும், நகைச்சுவையுடனும்
பின்னப்பட்டுள்ளது. ஒருவனை காதலிப்பது போல் பல இடங்களில் செயற்பாடுகள் இருந்தாலும்,
அவளால் அவனைக் காதலிக்க முடியவில்லை. அதே நேரம் இன்னோருவனை காதலிக்க முடியாது என்பது
போல தெரிந்தாலும் இறுதியில் அவன் மேல் காதல் வயப்பட்டு, அவனையே கரம் பற்றுகின்றாள்.
நாயகன், நாயகியாக நடித்த நஸ்லென் கெ. கபூர் மற்றும் மமிதா பஜ்ஜூ ஆகிய இருவரும் பாராட்டுக்குரியவர். அது மாத்திரமன்றி
இந்தக்கதையில் பல இளைஞர்களும், யுவதிகளும் நடித்துள்ளார்கள். படமே மிகவும் கல கலப்பாகவும்,
ஒரு இடத்திலும் தொய்வில்லாமலும் பயணிக்கின்றது. தொழில்நுட்பங்களும் தரமாக இருக்கின்றன.
கிறிஷ் ஏ.டி என்பவரின் இயக்கமும் தரம். ஏற்கனவே இதே போலான பல படங்கள் வந்தாலும் இந்தப்படத்தையும்
மக்கள் கொண்டாடினார்கள் என்பது படத்தின் வசூசில் இருந்தே புரிகின்றது..! பெரிய அளவில்
முகவரிகள் இல்லாத நடிகர் நடிகைகள் படத்தில் இருந்தாலும் படத்தின் கதையும், அது சொன்ன
விதமும் ரசிக்கும்படியாக இருந்ததால் படத்தின் வெற்றியை யாராலும் தடுக்கமுடியவில்லை.
ஆ.கெ.கோகிலன்
23-04-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக