விடுமுறை நாட்களில் அலுவலகத்தில் நின்ற அனுபவங்கள்..!
ஏறக்குறைய 6 வருடங்களுக்கு
மேலாக பணிப்பாளராக இருந்த போதிலும், ஊழியர்கள் சமூகமளிக்காத சந்தர்ப்பங்களில்
நான் வேலை செய்வது இல்லை. பொதுவாக எனது அலுவலகக் கடமை என்பது அரசு சொல்கின்ற விதிகளின்
அடிப்படையிலேயே அமைந்திருக்கும். உதாரணத்திற்கு 8.00 மணிக்கு ஒரு நிகழ்வு என்றால் நான்
8.00 மணிக்கு அந்த நிகழ்வில் இருக்கக்கூடிய வகையிலே திட்டங்களை மேற்கொள்வேன்.
அலுவலக நேரம் முடிந்தால் உடனே வீடு சென்றுவிடுவேன். அங்கும் எனக்கான
வேலைகள் இருக்கும். அதனைச் செய்யாவிட்டாலும் எனது தலையே உருளும்..!
யாரும் என்னை உருட்ட முடியாது. ஆனால் நானே என்னை உருட்டுவேன். நான்
மற்றவர்களுக்குப் பயப்படுவதைவிட, எனக்குக் கூடப்பயப்படுவேன்..! இறைவன் எனக்குள் இருக்கின்றார்
என்ற பெரு நம்பிக்கை வந்து நிறைய ஆண்டுகள் கடந்துவிட்டன..! அதேபோல் இறைவன் எல்லோருக்குள்ளும்
இருக்கின்றார் என்பதும் தெரியும். அதனைப் புரிந்தால் உங்கள் வாழ்க்கை வேறுமாதிரியாக
இருக்கும் என்பது நான் கண்ட உண்மை. கஷ்டங்கள் இருந்தாலும் வாழ்வில் ஒரு முழுமை கிடைக்கும்.
இப்படியான கொள்கைகளுடன் இருக்கும்போது, ஏப்பிரல் 6 மற்றும் 7 ஆம் திகதிகள்
வேலைசெய்துவிட்டு தமிழ் புதுவருடத்திற்காக 10ஆம் திகதியில் இருந்து வீட்டில் நிற்கத்தீர்மானித்தேன்.
ஆனால் திட்டங்கள் மாறியதாலும், எனது வேலைகளை ஏப்பிரல் 5 மதியத்திற்குள் முடித்ததாலும்,
வீட்டிற்குப் போக மனம் ஏங்கியது. அதற்கு எண்ணை ஊற்றுவது போல் எனது ஊழியர்கள் சிலரும்
கருத்துச்சொல்ல உடனேயே வெளிக்கிட்டுவிட்டேன். மதியம் வரை 10ம் திகதியே போவது என்ற எண்ணத்தில் இருந்த
நான், மதிய உணவு எடுத்தவுடன் எண்ணம் மாறி, உடனேயே ஏதோ சிலவற்றைப் பையில் அடைந்துகொண்டு, பிற்பகல் 2.45மணிக்கு பஸ்
நிலையம் சென்றுவிட்டேன்..! கடும் வெயில் கொழுத்திக்கொண்டிருந்தது. சரியான முறையில்
திட்டமிடாததால் பல குழப்பங்கள் நடந்தன. காய்ச்சிய பாலுக்குச் சொல்லியிருந்தேன். அது
வந்துவிட்டது. ஆனால் நான், பஸ் தரிப்பிடத்தில்
நின்றிருந்தேன். வேண்டாம் என்றாலும் சரியில்லை என்ற நினைப்பில் தரிப்பிடத்திற்கே கொண்டுவரச்சொன்னேன்.
துப்பரவுப் பணியாளர் ஒருவர் உதவியுடன் பஸ் வரமுதல், ஒரு சில்வர் போத்தலில் காய்ச்சிய பால் வந்தது. அவசர அவசரமாகக் குடிக்க முற்பட,
அது நாக்கை அள்ளியது..! அவ்வளவு சூடு..! வெளியிலும் வெயிலின் சூடு..! பஸ் வேறு வரப்போகின்றது
என்ற பதட்டம் வேறு..! எப்படிக் குடிப்பது என்றே
புரியவில்லை..? துப்பரவுப் பணியாளர் பெண் “ நீங்கள் ஆறுதலாகக் குடியுங்க சேர்..! நான்
இதில் இருக்கின்றேன் எனக் காத்திருந்தார். இவ்வளவிற்கும், அந்த வெயிலில் என்வயதையொத்த
வயதுடைய அந்தப்பெண் அரை கிலோமீற்றர் தூரம் கடந்து எனக்கு அதனைக்கொண்டுவந்து தரும்போது,
மனம் மிகவும் சங்கடப்பட்டது. அவசரப்பட்டதால்
தேவையில்லாமல் பலருக்கு கஷ்டத்தைக்கொடுக்கின்றேன் என்ற நினைப்பு, என்னை மேலும் சிந்தனைக்குள்
உட்படுத்தியது..! ஒருவாறு நிறைய நேரம் எடுத்து, ஊதி ஊதி, ரோட்டில் போவோர் பார்த்துக்கொண்டிருக்க
குடித்துமுடித்து, அதற்கான பணத்தையும் சற்றுக்கூடவாகக் கொடுத்து அனுப்பினேன். பால்
கொண்டுவந்து காய்ச்சியது ஒரு துப்பரவுப் பணியாளர் என்றால், அதைக் கொண்டுவந்து சேர்த்தது
இன்னோரு துப்பரவுப் பணியாள்.
இங்கு அன்பும் சேவையும் தான் முக்கியம். அது யாராக இருந்தாலும் எனக்கு
ஒன்று தான். இந்த நிலைக்கு வர நான் பலவருடங்கள் பயிற்சி எடுத்துள்ளேன்..! நம்புவீர்களா..?
(இந்த எண்ணம் கலைந்து நிஜத்தில் இருந்த போது..)
“என்ன ஆச்சரியம்..! இன்று
சித்திரா பௌர்ணமி..! ( ஏப்பிரல் 23)நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் போது அந்தப்பணியாளர்
என்னிடம் வந்து, இன்று நிற்பீங்களா சேர்..? அந்தோனியாருக்கு இன்று நேத்தி வைத்துப்பொங்கப்
போகின்றேன். உங்களுக்கும் பிரசாதம் தர விரும்புகின்றேன் என்றார். அன்புடன் செய்யும்
அனைத்தும் ஆன்மாவுடன் சேருகின்றது..! அதேநேரம் இன்னோர் பணியாளரும் இன்று சித்திரா பௌர்ணமிக்
கஞ்சியைக்கொண்டுவந்து எனது அலுவலக அறையில் வைத்துவிட்டுச் சென்றார்..! பாருங்கள் அன்பு செய்யும் ஆற்றலை..! நாம் எல்லோரையும்
அன்புடன் நடத்தினால் அந்தப் பிரபஞ்சம் எம்மை அன்புடன் பார்த்துக்கொள்ளும் என்பதற்கு
இதுவே சாட்சி..!”
(மீண்டும் பழைய எண்ணமே மனத்தில் வர..)
அடுத்த கிழமை நிறைய லீவுகள் வருவதாலும், இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும்
பஸ் நிரம்பிய நிலையிலே வந்தது. ஒருவாறு அடித்துப்பிடித்து ஏறி, சில மணிநேரம் நின்று
மூச்சுவிட, ஒரு வயதானவர் எனக்கு சீற் தந்து இருக்கச்சொன்னார்..! அவர் என்னைவிட வயதானவர்..!
நான் பராவாயில்லை. நீங்கள் இருங்கள் என்றேன்.. அவர், இல்லை..! நீங்கள் இருங்கள் என்று
அன்புடன் அழுத்திக்கூறினார். மறுக்க மனமும் வரவில்லை..! கொஞ்சம் காலுக்கு ஓய்வும் தேவைப்பட்டதால்,
நன்றி சொல்லி, ஏற்றுக்கொண்டு இருந்தேன். என்னைத் தெரியுமா என்றேன்..! தெரியாது என்றார்.
பின்னர் ஏன் எனக்கு சீற் தந்தீர்கள் என்றேன். தனக்கும் என்னைப்போல் நீண்ட நேரம் உட்காருவது
கடினம் என்றும், தனக்கு சலரோகம் இருப்பதால், சிறுநீர் கழிக்க வேண்டும் போல் தோன்றுவதால்
எழுந்துவிட்டதாகக் கூறினார். நான் ரைவருடனும், கொன்டக்டருடனும் கதைக்கச்சொன்னேன். கதைத்தார்..!
காரியம் முடிந்தது..!
அவரும் நிம்மதியாக இன்னோரு சீற்றில் அமர, நானும் அவருடன் கூடப்பயணிக்க
முடிந்தது. நிலாவெளியைச் சேர்ந்த அவர் ஒரு இறைதொண்டன். மனைவியுடன் வசிப்பவர். ஓய்வுபெற்றவர்..!
நிம்மதியாக வாழ்வை கடந்து போக நினைப்பவர். பயணம் போனதே தெரியவில்லை அவருடன் கதைத்துக்கொண்டு
வந்தது..! சாவச்சேரி வைரவர் கோவிலடியில் இருக்கும்
அவரது உறவினரின் மரணச்சடங்கிற்கு செல்கின்றார்..! அத்தோடு அவருடைய உறவு முடிகின்றது..!
வாழ்வே ஒரு பயணம் தான். எம்முடன் பல வருகின்றார்கள். சிலர் தொடர்கின்றார்கள். சிலர்
விரைவாகவே இறங்கிவிடுகின்றார்கள். பயணம் முடியும் வரை நாம் பயணிக்க வேண்டியது தான்..!
இவ்வாறான சித்தாந்தத்தோடு வீடுபோய் சேர இரவு 8.00மணி தாண்டிவிட்டது.
பின்னர் குளித்துச் சாப்பிடும்போது தான் தெரிந்தது போன் சார்ஜ்ஜரை விட்டுவந்தது..!
ஏறக்குறைய 15 நாட்களுக்கு கிட்ட லீவில் இருக்கப்போகின்றேன். போன் இல்லாமல் சமாளிப்பது
கடினம். பல சார்ஜ்ஜர்களை தேடிப்பார்த்தேன். வீட்டில் ஒன்றும் சரிவரவில்லை. அயலிலுள்ள உறவினர்
வீட்டு சார்ஜ்ஜர் சரி வந்தது. இரு முறை அவர்களிடம் வாங்கி சார்ஜ் செய்தேன். தம்பியின்
மகளின் சார்ஜ்ஜரும் சரியாக வரும் என்று தோன்றியது. ஆனால் பயன்படுத்தத் தேவை வரவில்லை.
அந்த நேரத்தில் மனைவியின் சார்ஜ்ஜரும் பழுதாக
அவருக்கு ஒரு டேற்றா கேபிள் வாங்க யாழ்ப்பாணம் போகவேண்டிவந்தது. அப்போது எனது போனுக்கு
ஒரு டேற்றா கேபிள் வாங்கி, லப்டொப்பினூடாகச்
சார்ஜ் செய்தேன். ஊருக்கு விரைவாகப் போனதால், எனது முன்னைய நிறுவனத்தில் நடந்த
கலாசார விழாவில் பார்வையாளராகக் கலந்துகொண்டு, நிகழ்வுகளைப் பார்த்து ரசித்தேன். பணிப்பாளர்
நாயகத்துடனும் கதைக்க முடிந்தது. அத்துடன் பழைய நிறுவனத்தில் மதிய உணவை அருந்தி, அவர்களுடன்
கதைத்து விடைபெற்றது இனிமையான தருணமாக இருந்தது.
புதுவருடக்கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது. உறவுகளுக்கு கைவிஷேடம் கொடுத்து,
நானும் மகிழ்ந்துகொண்டேன்.
நண்பரது மனைவியின் மறைவையொட்டி வழங்கப்பட்ட அந்தியேட்டி நிகழ்விலும்
கலந்து, அவரது துன்பத்தில் பங்குகொண்டேன்.
வருடப்பிறப்பன்று, இரவே மருத்துநீர் தலையில் வைத்து தோய்ந்தேன். மனைவியும் அவ்வாறே செய்தார்கள்.
இரவே பணத்தையும் கைவிஷேடத்திற்காகத் தொட்டு, மனைவிக்கும் கைவிஷேடம் கொடுத்து மகிழ்ந்தேன்.
மறுநாள் உறவுகளுக்கு கொடுத்தேன்.
மருதடி தேர் அன்று, மனைவி, மாமி மற்றும் பிள்ளைகளுடன் சென்று பிள்ளையாரை
வணங்கி, வரும்போது எனது நண்பர் குடும்பத்துடன் வந்தார்கள். எல்லோரும் சேர்ந்து குளிர்களிகளை உண்டு
கதைத்து, வந்தோம். அன்றைய பொழுது இனிமையாகக் கடந்தது.
15ம் திகதி காலை காக்கைதீவுக்கு மீன் வாங்க மகளுடன் சென்று, ஏறக்குறைய
ரூபா.12000 இற்கு பாரை, சூவாப்பாரை, கணவாய் மற்றும் நண்டு என்பவற்றை வாங்கி, இருநாட்களும்
நன்றாக கடலுணவை உண்டு கழித்தோம்.
17ம் திகதி மகளின் பிறந்த நாள் வந்தது. அவளை மகிழ்விக்க மேலும் சில
நாட்கள் லீவு எடுக்கவேண்டி வந்துவிட்டது. தவிர்க்கமுடியவில்லை..!
அன்று மதியம் இரண்டு மகள்களுடன் நான் காங்கேசன் துறைக்கு சென்று கடலில் குளித்து, வீடுவந்து கடலுணவை புசித்தோம்.
மேலும் ஹெக்வெட்டிக் கொண்டாடியதுடன், அயலவர்களுக்கும் பகிர்ந்தோம். அம்மா மற்றும் தம்பி
குடும்பத்தினருடனும் பகிர்ந்தோம்..! மேலும் இரவு உணவாக செல்வா ஹொட்டலில் கொத்துரொட்டி
எடுத்துச் சாப்பிட்டோம். அவளது 20 ஆவது பிறந்த
தினம் இனிமையாகக் கழிந்தது. அன்றிரவு, அடுத்தநாள் திருகோணமலை வருவதற்காக, இரவு
9.00 மணிக்கு முதலே நித்திரைக்குச் சென்றேன்.
18ம் திகதி, அதிகாலையே எழுந்து, எமது ஊழியர்களுக்கு என்று ஆள்பிடித்துச்செய்த
பலகாரங்களுடன், வாழைபழங்களையும் எனது காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு, ஏறக்குறைய காலை
6.00 மணியளவில் வவுனியாவில் எனது நண்பரையும் ஏற்றிக்கொண்டு திருகோணமலைக்கு 7.40இற்கு
முன்பே வந்துவிட்டேன்..! பின்னர் அவரையும் நகரத்திலுள்ள அவர்போகவேண்டிய இடத்தில் இறக்கிவிட்டு,
எமது நிறுவனத்தில் பால் காய்ச்சி புதுவருட உணவுகளை உண்டதுடன், திருகோணமலை கிழக்குப்
பல்கலைக்கழகத்திற்குச் சென்று அவர்களது கூட்டத்திலும் கலந்துகொண்டு, அன்று நினைத்த
அனைத்தையும் செய்து முடித்ததில் திருப்தியடைந்தேன்..! அடுத்த நாளும் பறந்தது. 20, 21 ஆகிய இரு தினங்களும் பகுதிநேர மாணவர்களை
பார்க்கவும் அவர்களுடன் கதைக்கவும் செலவிட்டதுடன் எனது சில வேலைகளையும் செய்தேன். இனிவரும் வாரங்கள் பல நிகழ்வுகள் கொண்டாட இருப்பதால்,
அதற்கான தயார்படுத்தல்களைச் செய்ததுடன், மாணவர்களுடனும் கதைத்து, அவர்களை ஊக்கப்படுத்தினேன். 22ம் திகதி வேலை நாள்..! விரைவாகப் பறந்துவிட்டது.
இன்று 23ம் திகதி, போயா தினம். ஏதாவது ஊருக்கு பொழுதைக்கழிக்க திட்டம்போட,
பல மாணவர்கள், சில தேவைகளுக்காக நிறுவனத்திற்கு வர அனுமதிகேட்க, நானும் கொடுத்து, எனது
திட்டங்களை பிற்போட்டுக்கொண்டு, அலுவலகத்தைத் திறந்தேன். காலைச் சாப்பாடு முடித்து
இருக்க, சித்திராக்கஞ்சி வந்தது..! அது மாத்திரமன்றி
பாதுகாப்பு உத்யோகஸ்தர் மதியம் குழைசாதம் கொண்டுவந்தார்.
இன்னோர் துப்பரவு ஊழியர் மாலை சக்கரைப் பொங்கல் தந்தார். இவற்றைப் பார்க்கும்போது இறைவனின் அருளும்
புரிந்தது..! வீட்டிற்குப் போனால் கூட இந்த நிறைவு வந்திருக்காது.
ஆக நடப்பது எல்லாம் நன்மைக்கே என எடுக்கும் பக்குவத்தை பெறமுனைய வேண்டும்.
ஆ.கெ.கோகிலன்
23-04-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக