10 கட்டளைகள்..!

 



 “The Ten Commandments” என்ற  ஆங்கிலத் தொடரின் தமிழ்மொழி பெயர்பை நேற்றுத்தொடங்கி இன்று பார்த்து முடித்தேன். ஏறக்குறைய 2 மணி 55 நிமிடங்கள் எடுக்கக்கூடிய இந்தப்படத்தின் கதை மோஸஸின் வாழ்வைப் பற்றியது.  எங்கோ பிறந்த ஒருவனால், தேசத்திற்கு ஆபத்து வரும் என்று அந்நாட்டு அரசன் பிறந்த குழந்தைகளைக் கொல்ல, அதற்குப் பயந்து  வேறுவழியின்றி, ஒரு பேழையில்  குழந்தை மோஸஸை ஆற்றில் விடுகின்றார் தயார்..! பின்னர் அக்குழந்தை ஒரு ராணியிடம் வளர்ந்து, ராஜாவாக வரக்கூடிய சூழலில், நன்மையின் நிமித்தம் நடந்த ஒரு கொலையால், நாட்டைவிட்டு துரத்தப்பட்டு, பாலைவனத்தில் அலைந்து, இறுதியில் ஒரு பெண்ணைத் திருமணம் முடித்து வாழ, இறைவன் தனது இருப்பை மலையிலுள்ள ஒரு மரத்தில் அக்கினியை ஏற்படுத்தி அதனூடாக வெளிப்படுத்தி, மோஸஸைத் தனது கருவியாக மாற்றிப் பல விடயங்களைச் செய்கின்றார்..!  இறைவனின் நம்பிக்கையில்  மோஸஸ் செய்யும் காரியங்கள், பல சந்தேகங்களையும், சங்கடங்களையும் எகிப்திய அடிமைச்சமூகத்திற்கு ஏற்படுத்தினாலும், பலர் இவரது வழியிலே சென்று நிறைவாக வாழ்வதாகவும்,  மோஸஸ் முதுமையடைந்து, அவர்களின் சந்தோசமான வாழ்வை பார்த்தபடி மறைவதாகவும் கதை முடிகின்றது.

பல வருடங்களுக்கு முன்னரே இந்தப் படத்தைப் பார்க்க பலர் பரிந்துரைத்தார்கள். அது எப்போது நடக்க வேண்டுமோ அப்போது தான் நடக்கும்.

அண்மையில் திருகோணமலையில் இருந்து யாழ்வரும்போது ஒரு கிறிஸ்துவ பாஸ்டரைச் சந்தித்தேன். அவர், இறைவன் திரும்ப வருகின்றார். அவர் பல செய்திகளைச் சொல்லச் சொல்கின்றார். நல்லவர்கள் அவரின் சொல்லைக்கேட்டு நித்திய மகிழ்ச்சியை அடையமுடியும். அவ்வாறு கேட்டு நடக்க முடியாவிட்டால் வழமைபோல் பழி பாவங்களில் மாட்டி துன்பம், இன்பம் இரண்டையும் மாறி மாறி அடைந்து இறுதியில் வாழ்வைச் சூனியமாக்கிக் கொள்வதை நடக்கும்..!

படைத்த இறைவனை நினைப்பதும் இல்லை..! அவர்கள் கேட்பதுமில்லை..! தேவையில்லாத விடயங்களைச் செய்து, இயற்கையைக் குழப்பி, பேராபாயங்களைச் சந்தித்து, உலகையே அச்சத்தில் வைத்திருப்பதையே விரும்புகின்றார்கள். உண்மையான இறைவன் அன்பால் ஆனவன்..! அனைவரையும் ஆசீர்வதிப்பவன்..! அவர் வழியைப்பின்பற்றினால் ஆயுளுக்கும் பாதுகாப்பை அளிப்பவன் என அவர்  7th day Adventure  என்ற மதத்தின் சார்பாகச் சொன்ன விடயங்கள் படத்தில் பிரதிபலித்தன..!

இப்படி எல்லாம் எனக்கு ஏன் நடக்கின்றது எனப்பல முறை நானே குழம்பியுள்ளேன். படத்தில் மோஸஸின் நிலையும் அவ்வாறாக இருப்பதைப் பார்த்து ஒரு வித மகிழ்ச்சி ஏற்பட்டது.

நான் இறைவனுடன் கதைப்பது, சண்டையிடுவது, பேசுவது, நன்றிசொல்வது, அழுவது, சிரிப்பது, கவலைப்படுவது போன்ற பல்வேறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவது வழமை..! எனது குடும்பத்தாருக்கே எனது இந்த நடவடிக்கைகள் ஒரு வேடிக்கையாக இருக்கும். சிலவேளை எனக்கே ஒரு மாதிரியிருக்கும். இருந்தாலும் நான் தவறு செய்யவில்லை என்ற எண்ணமும் படைத்தவனுடன் பகிர்வதை யார் பகிடியாகப் பார்த்தாலும் அதனை நான் பொருட்படுத்தக்கூடாது என்றே நினைப்பேன்.

மோஸஸையும் பார்க்க எனக்கு அவ்வாறே தோன்றியது. சில நேரங்களில் என்னை ஏன் படைத்து இப்படி வருத்துகின்றாய் எனக்கேட்பதுபோல் மோஸஸூம் கேட்க மனம் கலங்கிவிட்டது..!

உண்மையாக இருக்க வேண்டும். அன்பாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். புறம் பேசக்கூடாது. துரோகம் செய்யக்கூடாது. ஏமாற்றக்கூடாது.  உதவி செய்ய வேண்டும். ஆசைப்படக்கூடாது. அடுத்தவர் பொருளை  அபகரிக்கக்கூடாது போன்ற 10 கட்டளைகளை பின்பற்றினாலே இறைவன் எம்மை ரட்சிப்பார்.  எமது வாழ்க்கை ஒரு பயனுள்ள வாழ்க்கையாக பூமியில் இருக்கும். இறைவனுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும்  போன்ற  கருத்துக்களைத் தாங்கியபடி படம் முடிகின்றது..!

பல காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. கடல் பிரிந்து, அடிமை மக்கள்  செல்லும் காட்சி பிரமிக்க வைத்தது. சுனாமி வரும்போதே கடலுக்குள் எப்படியான நிலை இருக்கின்றது என்பதை நான் நேரில் கண்ணால் கண்டேன்.

உள்துறைமுகவீதியிலுள்ள திருகோணமலைக்கடல்  காலியானதையும் கடலில்  மனிதர்கள் நடக்கக்கூடிய சூழல் வந்ததையும் எனது வாழ்வில் ஒரு முறைபார்த்து வியந்துள்ளேன்..!

படம் பல இடங்களில் என்னைக்கட்டிப்போட்டது. எல்லா நடிக நடிகைகளும் சிறப்பாக நடித்திருந்தார்கள். தொழில்நுட்பங்களும் தரமாக இருந்தன. ரொபேர்ட் டோன்ஹேம்      (Robert Dornhelm) என்ற படத்தின் இயக்குனருக்கு சலூட் அடிக்கலாம்.  நல்லதை விதைப்பதே, நல்லதாக அறுவடைசெய்ய முடியும். யூதர்கள் நம்பும் மோஸஸைப்பற்றி ஒரு அறிவு இன்றுதான் வந்தது.  இது உண்மையில் படம் அல்ல. தொலைக்காட்சித்தொடராக வந்ததை படம் போல் யூரியூப்பில்  வெளியிட்டு இருக்கின்றார்கள். நான் பார்க்க விரும்பியது உண்மையில் பல ஒஸ்கார் அவார்டுகளை வாங்கிய 1956இல் வெளிவந்த  The Ten Commandments என்ற திரைப்படத்தையே..! இதிலும்  எனக்கு ஒரு ஏமாற்றமே..!  இணையப்பொருட்களை நம்பக்கூடாது என்பதற்கான ஒரு பாடம்.

 


ஆ.கெ.கோகிலன்

23-05-2024.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!