நாமும் நாயும்..!
சிறுவயதில் இருந்தே எனக்கு நாய்கள் மீது பற்றோ பாசமோ கிடையாது.
எமது வீட்டு நிலமை அப்படித் தான்..! அதனாலோ
என்னவோ வீதிகளில் போகும் போது நாய்கள் குரைத்தால், கடிக்க வந்தால் உடல் சிலிர்க்கும்.
எனக்கும் ஒரு பயம் கலந்த எதிர்ப்பு உணர்ச்சி மேலோங்கும். அதன் விளைவால் நாயைக்கல்லால்
அடிப்பதோ தடியால் அடிப்பதோ முடியாவிட்டால் ஓடுவதோ நடக்கும்.
ஏறக்குறைய 15 வயதுவரை இப்படியான நிலமை. பின்னர் வளர்ந்த பிறகு,
நின்று எதிர்க்கும் தைரியம் வந்துவிட்டது. பயமும் போய்விட்டது. ஒன்றில் நாய் அல்லது
நான் என்று பார்க்கும் தைரியம் நிறைய வந்துவிட்டது. பின்னர் நாய்களைத் துரத்துவதும்
நாய் வளர்ப்போரையே பிடிக்காமலும் போய்விட்டது..!
இந்தியாவில் நான் அகதிமுகாமில் இருந்த காலத்தில் பல இளைஞர்கள்
ஒன்றாக இருந்தோம். ஒன்றாகச் சமைத்து சாப்பிட்டு, காலத்தைக்கடத்தினோம். அவ்வேளை நான்
சிலம்பம் கற்றுக்கொண்டிருந்தேன். ஒரு நாள் நாம் சமைத்த உணவு அனைத்தையும் ஒரு பெரிய
நாய் காலியாக்கிவிட்டது..! எல்லோரும் கடும் பசியுடன் அன்று படுத்தோம். அடுத்த சிலநாட்களுள்
தடம் வைத்து,அந்நாயைப்பிடித்து, எனது சிலம்புத்தடியால் அடித்தே கொன்றுவிட்டேன். நான்
மாத்திரமல்ல, கூட இருந்தவர்களும் அடித்தார்கள். ஆனால் எனது அடியே பலமாக, நாய் இறக்க
காரணமாகியிருக்கலாம். பின்னர் இரண்டுபேர் சேர்ந்து,
நாயின் கால்களைக்கட்டி, உள்ளே சிலம்புத்தடியை
நுழைத்துத் தூக்கிக்கொண்டு மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், கட்டை அவிழ்த்துப்
போட்டுவிட்டு வந்தோம். அவ்வீதியில் வாகனத்தில் அடிபட்டு நாய் இறந்ததாக நினைக்கட்டும்
எனக்கருதி அந்நிகழ்வையே மறந்துவிட்டோம். அந்த
நாய் யாருடையது என்பது தெரியாது. எங்களின் உணவைக்காலி செய்து, இறுதியில் தானே காலியாகிவிட்டது.
இந்த பாவம், இன்றுவரை என்னையும் நாய்களையும் இணைப்பதில்லை..!
எனது காரைக்கண்டாலே பல நாய்கள் குரைப்பதைக் கண்டிருக்கின்றேன். இயற்கைக்குத் தான் தெரியும்,
எனது இந்த மனநிலைக்கு காரணம் என்ன என்பது..?
சில காலங்களுக்குப் பிறகு, திருமணம் முடித்து மனைவி வீடு
வரும்போது நாயும் பூனையும் வீட்டில் இருந்தன..!
அவற்றை எனக்குப் பிடிக்காது என்று சொல்லித்தள்ளி வைப்பது தான் வழக்கம். மாறாக
மனைவியின் தந்தையார் அவற்றின் மேல் அதிக பற்று வைத்திருந்தார். கொஞ்சக்காலத்தில் இந்தப்பற்று
மூத்த மகளுக்கும் தோற்றியது..! காலப்போக்கில் நாய்கள் மீதான பாசம் அவளுக்கு அதிகமாகவும், எனக்குச் சங்கடமாகவும் இருந்து
வந்தன. சில வருடங்களுக்கு முன்னர், இரண்டு கலப்பின குட்டிகளைப் போட்டுவிட்டு, ஒரு நாய் இறந்துவிட்டது. அதனை மகள் வளர்க்க முற்பட, நானும்
எனது மனவுணர்வுகளை மாற்றி, மகளுக்காக அவற்றுடன் பழக ஆரம்பித்தேன். அதுவரை நாய்கள் என்றால்
தொல்லை என்று கருதிய நான், மகளால், அவற்றில் அன்பு செலுத்தத்தொடங்கினேன். அவைபோடும்
கழிவுகளை வெறுப்பற்று, அகற்றப்பழகினேன். மகளுடன் சேர்ந்து, வைத்தியரிடமும் கொண்டுசென்றேன்.
அந்நேரம், நாய்களுடன் பழகுவது, நோயெதிர்ப்பு சக்தியைக்கூட்டும் என்ற உண்மையையும் அறிந்துகொண்டேன்.
இந்த நிலையில் அந்த இரு நாய்குட்டிகளும் காணாமல் போய்விட்டன. இது தொடர்பாக மகளின் கவலையைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
ஒருவாறு, அவரை மாற்றி படிப்பில் கவனம் செலுத்தும்படி வேண்டினேன். போதாததற்கு, வீட்டில்
CCTVஇனையும் பொருத்தினேன்.
நாட்கள் நகர்ந்தன..! இடமாற்றம் வந்தது..! வீட்டில் பெண்கள்
தனித்தார்கள்..! அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டி, தைரியத்தையும் சொல்லயே வைத்துள்ளேன்.
இருநாட்களுக்கு முன்னர் மகள் ஓடிவந்து சொன்னாள் “அப்பா..!
தொலைந்துபோன நாய்களில் ஒன்று நன்றாக வளர்ந்து வீட்டிற்கு வந்துள்ளது..! வந்து பாருங்கள்..”
என்றாள். வீட்டில் எல்லோரும் ஆச்சரியப்படும்
அளவிற்கு, அது உரிமையுடன் எல்லாம் செய்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. இறைவனையும்,
இயற்கையையும் மாத்திரம் நம்புகின்றேன். எல்லாவற்றிற்கும் காரணம் இயற்கைக்கே புரியும்..!
நோயும் அவரே..! மருந்தும் அவரே..!
ஆ.கெ.கோகிலன்
28-04-2024.
குறிப்பு- தற்போது அந்த நாயைக் காணவில்லை..!
24-05-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக