சித்தா..!

 


 


நீண்டகாலத்திற்குப் பிறகு சித்தார்த் நடித்த, ஒரு நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படமாக இது இருக்கின்றது..!

இந்தப்படத்தின் கதையே, தந்தையை இழந்த பெண்குழந்தையுடன் திருமணமே செய்யாமல், அண்ணன் குழந்தைக்காக வாழும் சித்தப்பாவின் கதை..!

சிறுமிகளின் வாழ்க்கையில் நடைபெறக்கூடிய அபாயகரமான சூழ்நிலைகளில் படம் பயணிப்பதால் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லை.

ஒரு சில ஆண்கள் அதுவும் வயது கூடிய, முத்தியடைய வேண்டிய நிலையில் இருப்பவர்களின்  இன்னொரு கேவலமான முகத்தை காட்டும்போது, கொலைவெறியே வருகின்றது..!

குழந்தைகள் தெய்வத்திற்குச் சமமானவர்கள்.  அந்தச்சிறுமிகளிடம் பாலியல் தேவைகளை தேடும் இம்மாதிரியான விலங்குகளைத் மனிதத் தாய்களே பெற்றுள்ளார்கள்..! சாதாரண குடும்பங்களிலும் சுயரூபம் தெரியாமல், மறைத்து வாழ்க்கின்றார்கள்..! இவர்களைக் கண்டறித்து சமூகத்தில் இருந்து விலத்தி வைக்கவேண்டும். இல்லை என்றால் சிறைச்சாலைகளில் போட வேண்டும். அதுவும் நடைபெறவில்லை என்றால் குறைந்த பட்சம் மனநல மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும்.

மனிதர்கள் எல்லோரும், சரியான மனநிலையில் இருக்கின்றார்களா என்பதே ஒரு சந்தேகத்துடன் தான் நோக்க வேண்டியுள்ளது. நல்லவனையும், நல்லவன் போல் நடிக்கும் கெட்டவனையும் சமூகத்தில் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது.

சந்தர்ப்பங்கள் சில சமயம் நல்லவர்களையும் குற்றவாளிகளாக்கி வேடிக்கைபார்க்கும். இந்தப்படத்திலும் நாயகனின் நிலை, அவ்வாறாக அமைந்து, பின்னர் அனைவரும் உணர்ந்து அவரைப் புரிந்துகொள்கின்றனர். அதேபோல் குற்றவாளி என்று நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அப்பாவியே, கொலைசெய்யப்படும் சூழலிற்கு வருகின்றது..!

படத்தின் நாயகியே சிறுவயதில் நடந்த பாலியல்  துஷ்பிரயோகத்தில் இருந்து மீள முதலே, அவ்வாறான நிலைக்கு கொண்டுவந்தவன் இறந்துவிட்டான்..! இனி யாரைப் பழிவாங்க..! பதிலாகப் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்விற்கு எவ்வாறு உதவலாம்..? என  நாயகியின் ஊடாக உணர்த்தியதிற்கு இயக்குனர் எஸ்.  யூ. அருண்குமாரைப் பாராட்டலாம்.

தவறு இழைப்பவர்களுக்கு தண்டனை அளிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களையும் மீட்டெடுத்து சாதாரண வாழ்க்கை நிலைக்கு, அவர்களைக் கொண்டுவருவதும் அனைத்து மனிதர்களினதும் கடமையாக இருக்க வேண்டும். மனித விலங்குகளின் தோற்றத்தை தடுக்க, அறநெறிகளைத் தாய்ப் பாலோடு சேர்த்துக்கொடுக்க வேண்டும்.

இந்தப்படம் ஒரு பாடம் போல் இருக்கின்றது..! படத்தின் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் வாழ்த்துக்கள்.

தயாரித்த நடிகர் சித்தார்த்திற்கு, இது ஒரு சிறந்த வெற்றிப்படமாக அமைந்ததற்குப் பாராட்டுக்கள்.

நல்ல படங்களில் யார் நடித்தாலும் அதனைப் பார்க்க வேண்டும்.

அதுவே படங்களினூடே பிடிப்பினைகளை ஊட்ட உதவும். திருடன் கூட தியேட்டரில் பொறுமையாக இருப்பான்..! அவனுக்கு அறநெறிப்பாடம் எடுத்தால், அவன் வாழுவதைவிட இறந்துபோகலாம் என்றே தோன்றும். அவ்வாறானவர்களைக் கொஞ்சமாவது திருந்த வைத்தால், திரைப்படங்களும் சமயப்புத்தகங்கள் ஆகும்.

அன்பு, பாசம், காதல், காமம் இவை தொடர்பான சரியான புரிதல்கள் மனிதர்களிடம் வரவேண்டும். அதற்கு ஏற்ற கல்வித்திட்டங்களும் வாழ்வியல் நடைமுறைகளும் இருக்க வேண்டும்.

எந்த இடத்திலும் இவ்வாறான சிறுவர் கொடுமைகள் நடைபெறாது பாதுகாப்பது அனைத்துப்பெரியவர்களினதும் கடமை.

 


ஆ.கெ.கோகிலன்

03-05-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!