மேதகு 2..!
யாழில் நான் இருந்த காலத்தில் நடந்த சம்பவங்களைக் காட்சிகளாகப் பார்க்கும்போது
பல கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கின்றன..! என்னுடைய நிலைப்பாடுகளிலும் சில நெகிழ்ச்சிகளை
ஏற்படுத்தவேண்டியது உண்மை, என்று புரிகின்றது..! இருந்தாலும் ஒருவருடைய பார்வையை
100 சதவீதம் என்னால் நம்பமுடியவில்லை. ஆனால் உள்ளவர்களில் அவர் மேன்மையானவராக இருக்கலாம்.
காலம் என்ன சொல்கின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்தப்படம் மேதகு 1 இன் தொடர்ச்சிபோல் காட்டப்படுகின்றது.
உலகிலுள்ள பலர், இதனைத் தயாரிக்க உதவியுள்ளார்கள். சிலர் பெயர்களைக்கூட தெரிவிக்க இன்றுவரை
பயப்படுகின்றார்கள். இது தான் யதார்த்தம். இலங்கையில் இருந்து கொண்டு, இலங்கை அரசுக்கு
எதிராகச் செயற்பட்டால் அது தவறு என்பது அரசியல் சாசனம். அதேபோல் இந்தியாவில் இருந்துகொண்டு,
இந்திய அரசிற்கு எதிராகச் செயற்பட்டால் அதுவும் தவறுதான். இந்த இரண்டும் இந்தப்படத்தில்
கவனிக்கப்பட்டுள்ளது..!
மேற்கு உலகத்தவர் படையெடுப்பிற்கு முன்னுள்ள நிலைக்கு சென்றால்,
படத்தில் சொல்லப்படும் விடயங்கள் தவறு அல்ல..!
ஆக இந்த சிக்கல்களுக்குக் காரணம் மேற்கு உலகத்தினரும், அவர்களுக்கு
துணைபோன கைக்கூலிகளும்..!
தரப்படுத்தல், இனக்கலவரம், வன்கொடுமைகள் இவ்வாறு இனங்கள்
முரண்பட்டு இருக்கும் போது, தமது அரசியல் இலாபங்களுக்காக மக்களை ஏவிவிடும் மனிதர்களும்
எதிர்க்கப்பட வேண்டியவர்களே..!
படத்தில் சில காட்சிகள் வரலாற்றை மீட்டுகின்றன..! சில காட்சிகள்
உணர்வைத் தூண்டி வன்முறைப்பாதைக்கு இட்டுச்செல்கின்றன. சில காட்சிகள், சரியான கல்வியைப்
பெறுவதன் ஊடாக உண்மைநிலைகளை உணர்ந்து, எது சரியோ அதனை மக்களுக்காக, எம்மை நம்பியிருக்கும்
பெரும்பாண்மை மக்களுக்காகச் செய்யவேண்டியுள்ளது. பெரும்பாண்மை என்பது நாட்டைப்பொறுத்தும்
இனங்களைப் பொறுத்தும் வேறுபடுகின்றது. இனத்திற்குள்ளும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றது.
இந்திரா காந்தியின் மரணம் அந்நேரத்தில் எமக்கு கவலையளித்தாலும்,
இந்த படத்தில் காட்டப்பட்ட சூழலில் அது நன்மையானதே எனப்புரிந்தது. அதேவேளை அதேபகை ராஜீவ்
காந்தியைக் கொல்ல, உதவி செய்தவர்களே வெறுக்கும் அளவிற்கு நிலமை மாறியது..!
எம்ஜியார் மற்றும் கருணாநிதி பேச்சிற்கு அழைக்க, முதலில்
அழைத்த எம்ஜியார் பக்கம் சென்றது, இன்றைய தோல்விக்கும்,
இந்த நிலைக்கும் காரணமாகத் தோன்றுகின்றது. பிரபாகரன், மாவீரன் என்றாலும் மகா அறிவாளர்களை
கருத்தில் எடுக்கவில்லை என்றே தோன்றுகின்றது.
எது எப்படியோ நமக்கு என்ன வரவேண்டுமோ அதுவே வந்துள்ளது. வள்ளுவர்
சொல்வது போல்
“தீதும் நன்றும் பிறர் தர வராது” என்பது போல், நாம் நல்லாக
இருக்க வேண்டும் என்றால் முதலில் பிறருக்கு கேடு செய்யாது இருக்கவேண்டும்.
படத்தில் பொலிஸைக் கொண்டார்கள், தமிழ் அரசியல் வாதியைக்கொண்டார்கள்,
இவ்வாறு எய்தவனை விட்டு விட்டு அம்புகளை முறிப்பதால் பெரிய பலன் கிடையாது. முறிக்க
முடியாதவாறு அம்புகளை தயார்படுத்தி, இறுதியில் எம்மை அழித்து இன்று, இந்நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள்.
எம்மைப் பெரிதாக நினைப்பதில் தவறில்லை. அதற்காக மற்றவர்கள்
எல்லாம் முட்டாள்கள் என்று நினைத்துச் செயற்படுவது பெரிய தவறு..!
இந்தப்படத்தில் வில்லுப்பாட்டு மூலம் சில நிகழ்வுகளைச் சொன்னது
நன்றாக இருந்தது.
கண்தோண்டும், குட்டி மணியின் கொலைக்காட்சி, இனக்குரோதத்தைக்
காட்டியது..! அது பெருகி, வன்முறைகளாக மாறி, கருவறுப்புச் செய்வதைக்கூட அறியமுடியாமல்
மனிதம், விலங்காக அலைந்ததைப் பார்க்க, இறைவன் மரணத்தை வைத்தது சரியென்றே தோன்றுகின்றது. நீண்ட காலத்திற்கு, இவர்களை உலகில்
வைத்திருக்க முடியாது.
நியாயங்கள் படத்தில் நிறைய இருக்கின்றன..! எவ்வளவோ உதவிகளைத்
தமிழ்நாடு செய்துள்ளது..!
ஆனால் அவற்றிற்குப்பின்னால் அன்பும், மொழிபற்றும், உண்மையும்
இருந்தால், தமிழர்களுக்கு தனிநாடு தேவையில்லை..! முழு உலகமே வசப்படும். தமிழர்கள் எங்கும்
வாழலாம். மற்றவர்களையும் வாழ விடவேண்டும்.
நாசர் தவிர, அங்கே பெரிய தொழில்சார் நடிகர்கள் இல்லாததால்,
படம், சற்று நாடகம் மாதிரிச்சென்றது. செலவும் குறைவு என்பதால் காட்சிகளும் தத்துரூபமாக இல்லை.
இருந்தாலும், அனைவரையும் பாராட்டலாம். ராகோ யோகாந்திரன் ( Raako Yoagandran) என்ற இயக்குனரைப்
பாராட்டி, அவரது முயற்சிக்கு வாழ்த்தும் கூற வேண்டும். யாழ் வாசிகளான எமக்கே பல விடயங்கள்
தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
மேதகு படத்தின் பாகம் 3 ஜ எதிர்பார்ப்போம்.
ஆ.கெ.கோகிலன்
28-04-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக