வெசாக் பண்டிகை..!
நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனை, பல பண்டிகைகளை வெகுவிமர்சையாக
நடாத்தத்தடையாக இருக்கின்றது. மக்களின் கைகளில் பணப்பற்றாக்குறை நிலவுகின்றது. போதாததற்கு
விலைவாசிகளும் அதிகம். இந்நிலையில் கொண்டாட்டங்களுக்குப் பணம் கேட்பது என்பது சற்றுக்கடினமான காரியம்.
இருந்தாலும் இம்முறை நான் திருகோணமலையில் இருப்பதால், எப்படியாவது
சிறிய அளவிலேனும் வெசாக் நிகழ்வை நடாத்த திட்டமிட்டோம். வெசாக்கை நடாத்தக் கோரிக்கைகள் பல வந்தன. ஆனால்
எதிர்பார்த்த அளவு நிதி கிடைக்கவில்லை. இருந்தாலும் எம்மால் இயன்றவரை வெசாக் விளக்குகளை எமது மாணவர்கள் மூலம் கட்டினோம்.
கிட்டத்தட்ட மூன்று நான்கு நாட்கள் எனது வகுப்பைத் தியாகம் பண்ணி அவற்றினைக் கட்ட வைத்தேன்.
நான் மாத்திரமல்ல.. என்னைப்போல் பலரின் விரிவுரைகள் இந்த நிகழ்வால் தடைப்பட்டன. நாம்
தமிழர்களாக இருந்தாலும் மற்றைய நிகழ்வுகளையும் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளோம்.
மற்றவர்களை மதிக்கும் பண்பு எங்களுக்கு இருக்கின்றது.
சிங்கள் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், தமிழ் மற்றும் முஸ்லீம் மாணவர்களின்
உதவியுடனேயே இவையெல்லாம் நடந்தேறின.
கடந்த செவ்வாய் கிழமை, மாலை 6.00 மணிக்கு வெசாக் கூடுகளை நிறுவனச்
சுவர்களிலும், நிறுவன முன்பக்கத்திலும் கட்டி அதற்கு மின்சார இணைப்பை வழங்கி ஒளிரவிட்டோம்..!
இரவு பார்க்க ரம்மியமாக இருந்தன.
பல சிரமங்களுக்கு மத்தியில் எமது மாணவர்கள் குறிப்பாக சிலர் தமது உடல் ரீதியிலான பங்களிப்பை அதிகம் வழங்கினார்கள்..! அதனால் இரவு 8.00 மணிக்கு முதலேயே அனைத்தையும் கட்டித்தொங்கவிட்டோம்.
அது மாத்திரமன்றி, அடுத்த நாள் மாணவர்கள் “தன்செல்” செய்ய விரும்பினார்கள்..! முதலில்
“சௌ ” என்று சொல்லப்படும் சவ்வரிசிக்கஞ்சியை காய்ச்சிக்கொடுக்க நினைத்தோம். சுகாதாரப்பிரச்சனைகள்
இருப்பதாலும், சரியான முறையில் காய்ச்சுவதில் சிக்கல் இருந்ததாலும் அதனைத் தவிர்த்து, பின்னர் ஜஸ்கிறீமைக் கொடுத்தோம்.
அந்த நாள் மாலை நான் யாழ்ப்பாணம் சென்றுவிட்டேன். மாணவர்களுக்கும்
அடுத்த இரு நாட்கள் வெசாக் லீவு. சனிக்கிழமை
நிறுவனத்தின் முன்பக்கத்தில் கட்டிய பெரிய வெசாக் கூடு கடும் காற்றால் அறுந்துவிழுந்து,
அதன் பல்பும் உடைந்து, போய்விட்டது..!
இதனை எனக்கு சொல்ல வெளிக்கிட்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர் பின்னர் சொல்லாது
விட்டார். ஏன் சும்மா கவலைகளைப் பரப்புவான் எனநினைத்து விட்டுவிட்டார்..? என அறிந்தேன்.
ஞாயிறு இரவு வரும்போதே இந்தவிடயம் தெரிந்தது.
சரி வெசாக் லீவுகள் முடிந்து விட்டன. எனவே எப்படியோ நாம் அவற்றை அகற்றவேண்டிய
தேவை எழும். அதற்கு முன்னாடியே காற்றே அந்த வேலையைச் செய்து, எமது வேலைப்பழுவைக் குறைத்துள்ளது
என எடுத்துக்கொண்டேன்.
பொதுவாக நடப்பதை நல்லதிற்குத்
தான்.. என எடுத்துக்கொள்ள வேண்டும்.
நேற்று இரவு எமது பாதுகாப்பு ஊழியர்களுடன், திருகோணமலை நகரத்திற்குச்
சென்று வெசாக் கூடுகளைப் பார்த்துவிட்டு வந்தேன். ஏறக்குறைய 15 வருடங்களுக்கு முன்பு
இவ்வாறான நிகழ்வுகளைப் பார்ப்பது வழக்கம். யாழ்ப்பாணம் போன பின்னர் அந்த எண்ணங்கள்
குறைந்துவிட்டது. யாழ் உயர்தொழில்நுட்பவியல் நிறுவனத்திலும் சிங்கள மாணவர்கள் இவ்வாறான
நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துவது வழமை. ஒரிரு முறை மாத்திரம் கலந்துகொண்டுள்ளேன் என
நம்புகின்றேன். ஒருவாறு திருகோணமலையில் வெசாக்காலத்தைக் கழித்தது வேறுபட்ட ஒரு மகிழ்ச்சியைத் தந்தது.
ஆ.கெ.கோகிலன்
28-05-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக