மஞ்சுமல்போய்ஸ்..!
இந்தக்காலத்தில் மக்களுக்குப் படம் பார்த்து அலுத்துவிட்டது..!
பல நாட்களாக இவ்வாறான குளு குளு வண்டியில் படம் போடுவதில்லை. ஏன் பாட்டுக்களே போடுவதில்லை..?
ஆளாளுக்கு அவர்களது மோபைல் போனை நோண்டுவார்கள்..! இல்லை என்றால் உறங்குவார்கள். அருகில்
இருப்பவர்களுடன் கதைப்பது கூடக் குறைவு. இன்று என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை, இந்தப்படத்தைப்
போட்டார்கள்..!
நான், பட்டமளிப்பு விழாக்களின் ஆறு அமர்வுகள் கலந்துகொண்ட களைப்புக் காரணமாகத் தூங்கித் தூங்கியே, AC Bus இல் போட்ட இந்தப்படத்தைப்பார்த்தேன்..! ஒரு கட்டத்தில் தூங்கமுடியாமல், தொடர்ந்து
பார்த்தேன்..! ”மனிதன்
உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல..! அதையும் தாண்டிப்புனிதமானது..” என்ற வரி
படத்தில் ஒரு நிஜத்தையும் ஈர்ப்பையும் கொண்டுவந்துவிட்டது..! உண்மையில் சிறப்பான படம். தொடர்ந்து உறங்கமுடியவில்லை..!
இன்னும் ஒரு முறை முழுமையாகப் பார்த்துவிட்டு, ஒட்டுமொத்தமான கருத்தையும் சொல்ல நினைக்கின்றேன்.
ஆ.கெ.கோகிலன்
10-05-2024.
இரண்டு வாரங்களில் படத்தை இணையத்தில் இருந்து பதிவிறக்கம்
செய்துவிட்டு பார்க்க, நேரம் தேடினால் கிடைக்கவில்லை..! அவ்வளவு விரைவாக நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
நேற்று எப்படியாவது படத்தின் ஆரம்பத்தைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்துப் பார்த்தேன்..!
கேரளாவிலுள்ள பல இளைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து சுற்றுலாச்
செல்லத்திட்டமிட்டு, இறுதியாக அவர்கள் முடிவுசெய்த இடம் குணா படத்தில் வந்த குகை இருந்த
பகுதி..! அதனைக் குணா குகை என்கின்றார்கள்..!
இளைஞர்கள், பயமறியாதவர்கள், அரசின் அறிவுறுத்தல்களைக் கவனிக்காமல்
ஆபத்து நிறைந்த பகுதிக்குள் சென்று இயற்கையை ரசிக்க முற்பட, எதிர்பாராமல், சுற்றுலாவிற்கே
வர மறுத்த, பொருளாதாரத்தில் சற்றுச் சிரமமான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் குழிக்குள்
விழுந்துவிட்டான்.
அதன் பிறகு என்ன நடந்தது..? என்பதே திக் திக் கதை..!
உண்மையாக நடந்த சம்பவத்தைப் படமாக்கியதாகச் சொல்கின்றார்கள். படத்தில் ஹீரோ என்று ஒருவரைச் சொல்ல வேண்டும் என்றால் குழிக்குள் விழுந்தவனைத் தூக்க தனது உயிரைப் பயணம் வைத்துச்சென்ற, அந்த இளைஞர் கூட்டத்திலுள்ள சற்று முதிர்ந்தவரைச் சொல்லலாம். அவரைப் பல படங்களில் பார்த்துள்ளேன். மிகச்சிறப்பான நடிப்பு..! அவர் தான் படத்தின் தயாரிப்பாளர் சௌபின் ஷாகிர் (Soubin Shahir) அது மாத்திரமன்றி அவர் ஒரு இயக்குனரும் கூட..! அடுத்து குழிக்குள் விழுந்தவரின் நடிப்பு..!
இதைத்தவிர அனைத்துக் கலைஞர்களும் தரமான நடிப்பை வழங்கிப்
படத்தைப் பெருவெற்றிபெறச் செய்துள்ளார்கள்..!
அனைத்துத் தொழில்நுட்பங்களும் மிகத் தரமாக இருந்தன..!
படத்தின் ஆரம்பத்தில் இரு இளைஞர்கள் குழுக்களுக்குள் முறுகல்
ஏற்பட்டு, அதற்கு தீர்வு பெற “கயிறு இழுத்தல்” போட்டியை வைத்து, அதில் யார் வெல்கின்றார்கள்..?
என்பதை வைத்து “கெத்துக்குழுவைத்” தெரிந்தார்கள். படத்தில் குழிக்குள் மாட்டிய குழு
அங்கே தோல்வியுற்றார்கள்..!
ஆனால் குழிக்குள் மாட்டியவனைக் காக்கச் செய்த கயிறு இழுத்தலில்
வெற்றிபெற்று, மரணத்தின் விளிம்பில் நின்றவனைக் காத்து, அனைவரும் ஹீரோக்களாகத் தெரிந்தார்கள்..!
சில காட்சிகளில் குழிக்குள் இருப்பவனையும், அவனுடன் சம்பந்தப்பட்டவர்களையும்
சிறுவயது காட்சிகளூடாக அவர்களின் பிணைப்பையும், வலியையும், ஒரு வித மனப்பேதலிப்பையும்
அழகாக இயக்குனர் கடத்தியுள்ளார்.
குழிக்குள் விழுந்தவனை காப்பாற்றியவர் திருமணத்திற்கு தயாராக,
விழுந்தவர் சிகிச்சைகளூடாக குணமாகிவருவதையும் பார்க்க முடிவு நன்றாக இருந்தது..! அனைவரும்
ஏதோ பாதாளத்தில் விழுந்து மீண்டது போன்ற உணர்வை ஏற்படுத்தி, தன்னை நிரூபித்த இயக்குனர்
சிதம்பரத்தைப் பாராட்டலாம்.
நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் மற்றும் பாடம்..!
ஆ.கெ.கோகிலன்
29-05-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக