புதிய சிற்றூண்டிச்சாலை..!

 


 

நான் திருகோணமலைக்கு வந்ததில் இருந்து எமது நிறுவனச்சிற்றூண்டிச்சாலையில் உணவு எடுப்பது மிகக்குறைவு..! காரணம் அது தொடர்பாக பல முறைப்பாடுகள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து வந்ததால், சரியான விசாரணைக்கு  அதுதொடர்பானவர்களை உட்படுத்த முனைந்தேன். நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த அவர்கள் முன்னாள் பணிப்பாளரினை கைக்குள் போட்டுக்கொண்டு விலைகளில் பல மாற்றங்களைச் செய்து வந்துள்ளார்கள்..!  தற்போது நான் வந்த பின்னரும் அவர்களுடன் சில விடயங்களைக்கதைத்து திருத்தச்சொன்னேன். ஓம் என்றார்கள். ஆனால் செய்யவில்லை.

எமது நிறுவனப் பிரச்சனைகள் தொடர்பான  பொதுக்கூட்டத்தில் மாணவர்களுடனும், ஊழியர்களுடனும் கதைத்தேன். மாணவ பிரதிநிதிகள் நிச்சயம்  அதனை மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.  அதன் பிறகு வழமையான அலுவலக நடைமுறைகள் மூலம் சிற்றூண்டிச்சாலை நாடத்த விரும்புபவர்களிடம் கோரிக்கை விடப்பட்டு, அவர்களது விலைகளுக்கு ஏற்ப புதிய சிற்றூண்டிச்சாலை மாற்றப்பட்டது..! பழையவர்களுக்கு சிறிது கவலை இருந்தாலும் மாணவர்கள் வெறுப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. குறிப்பாக உணவுகளின் விலைகளிலும், தரத்திலும், அளவிலும் ஏனைய சுத்தம் தொடர்பான விடயங்களிலும் முறைப்பாடுகள் இருந்தன. அவர்களுக்கு நியாயமான முறையில் அறிவுரைகள் சொல்லி, தவறுகளைத் திருத்தி அடுத்த வருடம் விண்ணப்பிக்கச் சொல்லி, ஒருவாறு அனுப்பிவிட்டேன்.

புதியவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் எனக்கு மிகவும் தெரிந்தவர்..! என்ன சாப்பாடு என்றாலும் தன்னிடம் கேட்கும் படியும், தான்  ஏற்பாடு செய்து தருவதாகவும் வாக்குத் தந்தார்..!  அவர் சொன்னபடி கடந்த நான்கு  நாட்களுக்கு மேலாக நிறுவனத்திற்குள்ளேயே எனது காலம் ஓடிக்கொண்டிருக்கின்றது. வெளியில் போகவேண்டிய தேவையே ஏற்படவில்லை..!

அதேநேரம் முன்பு எடுத்த சாப்பாட்டுக்கடைக்காரர்களிடம் இது தொடர்பாகச் சொல்லிக் குறை நினைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டேன். புதிய சிற்றூண்டிச்சாலையின் எல்லாச்சாப்பாடுகளும் சுவையானதாக இருக்கவில்லை என்றாலும் ஆரம்ப காலம் என்பதால், அது தொடர்பாக பொறுக்கவேண்டிய தேவையுள்ளது.

சிலநேரங்களில் சில சாப்பாடுகளுக்கு என்று சில கடைகளைத் தெரிந்து, சாப்பிடுவது வழக்கம். குறிப்பாக சுவையையும், விலையையுமே கவனத்தில் எடுப்பது வழக்கம். எமது சிற்றூண்டிச்சாலையைப் பொறுத்தவரை விலையும், தரமும் நன்றாக இருக்கின்றது. ஆனால் சுவை சற்று வேறுபட்டதாகவே இருக்கின்றது. அதற்குக் காரணம் அவர்கள்  சகோதர மொழியைச் சேர்ந்தவர்களாக இருப்பதோ என்னவோ தெரியவில்லை.

கடந்த மூன்று நாட்களில் பரோட்டா, பொல் ரொட்டி, பிட்டு, அப்பம், பாண், பொரித்த கோழிச் சோறு மற்றும் வழமையான சிங்கள கறிசோறு போன்றவற்றை உண்டு முடித்தேன்..!

இந்த கிழமைக்கு  சமாளிக்க முடிகின்றது..! நீண்ட காலத்திற்குத் தொடர முடியுமா என்பது போகப்போகத் தான் தெரியும்.

அதேநேரம் மாணவர்களையும், நிறுவன வளாகத்தைவிட்டு இடையில் வெளியே போக அனுமதிப்பதில் இறுக்கம் காண்பிக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. நான் வந்தபோது அவ்வாறு செய்யவில்லை. இப்போது செய்ய சில சல சலப்புக்கள் அங்காங்கே எழுகின்றன..! பொறுத்திருந்து பார்ப்போம் என்ன செய்யலாம் என்று..? ஒன்று மட்டும் நிச்சயம் எல்லோரையும் சமாளிப்பது என்பது மிகவும் கடினமான செயல். ஆனால் பெரும்பாண்மையானவர்களைச் சமாளிப்பது சுலபம். ஆகவே இரண்டாவது வழியை நாடுவதே இந்தச் சூழலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

காலம் என்பது தீர்க்கமானது. எது நடக்க வேண்டுமோ அதனை நிகழ்த்திக் காட்டியே செல்கின்றது..! ஆகவே யாவற்றையும் பொறுமையுடன் பார்த்து, ரசித்து சில வேளைகளில் அழுது கடந்து செல்வோம். அதுவே நம்மை நிஜமான வாழ்க்கைத் திசையில் பயணிப்பதை உறுதிப்படுத்தும்.

 

ஆ.கெ.கோகிலன்

21-05-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!