கடற்குளியல்..!
இன்று நாள் மிகப்பரபரப்பாகப் போய்கொண்டு இருந்தது. மகளுடன்
கதைத்து இன்று மதியம் எல்லோரும் காங்கேசன்துறைக்கடற்கரைக்கு சென்று, குளித்துவிட்டு
வருவோம் எனத்தீர்மானித்து இருந்தேன். இடையில் உறவினர், கேட்டதற்கு இணங்க யாழ் செல்லவேண்டிய
சூழல் வந்தது. சரி இன்னொரு நாளைக்குப் போகலாம் என நினைத்து, அவர்களை எனது காரில் ஏற்றிக்கொண்டு
யாழ்ப்பாண நகரம் சென்றேன். அவர்கள், இறங்கி, ”தேவை என்றால் அழைக்கின்றோம்..!” ஏன் நீங்கள்
சும்மா அலையவேண்டும் எனநினைத்து என்னைப் போக அனுமதித்தார்கள்..!
வீடு வந்ததும் மகளிற்கு சந்தோசம்..! உடனேயே எல்லோரும் வெளிக்கிட்டு
குளிக்க காங்கேசன் துறைக்குச் சென்றோம்.
கடந்த பல வாரங்களாக சூரியர் எம்மைப் படாதபாடு படுத்துகின்றார்.
ஒரே வியர்வை..! உடுப்புக்களில் உப்புக்கறை..! உடலே ஒரே கச கச என ஒரு மாதிரி வெறுப்பாகவே
இருக்கின்றது. எங்கும் படுக்க முடியவில்லை..! சூடு..! சூடு தான்..! யாழிலும் அதே தான்..!
திருகோணமலையிலும் அதே தான்..! ஏன் பட்டமளிப்பு விழாவிற்கு கொழும்பு சென்றேன், அங்கும்
அப்படித் தான்..!
மின்விசிறியைப் போட்டாலும் காற்று சூடாகவே வருகின்றது. ஏசிக்குள்
படுத்தால் தொண்டையே கட்டுகின்றது. கடலில் குளித்தால் கூட நிம்மதி வருமா தெரியவில்லை..!
கடல் கூடச்சூடாக இருப்பதாகவே செய்திகள் வருகின்றன..!
இந்தச் சூழலில் காரில் நானும், மனைவியும், பிள்ளைகள் இருவரும்
சென்றோம். திடீரென காலநிலை மாறுவதுபோல் தெரிந்தது. வானம் இருட்டியது. நாம் கடலுக்குள்
இறங்குவது என்ற முடிவில் மாற்றம் இல்லை. அனைவரும் கடலுக்குள் இறங்கினோம். கடல் தண்ணீர் சுட்டது..! போனமுறை குளிக்கும்போது,
கடல் நீர் குளிர்ந்தது..! இம்முறை கடல் நீர் சுட்டது..! கடலைத்தாங்கும் தரைகூட வெப்ப
அலையால் பாதிக்கப்பட்டுள்ளதா..? என்பது தெரியவில்லை. ஆனால் கடலே, கனலாகத் தெரிந்தது..!
இருந்தாலும் குளித்தோம். சிறிது நேரத்தில்
மழைத்துளிகள் விழத்தொடங்கின..! நன்றாக கடலையும் வானத்தையும் ரசித்தபடி குளிர்த்தோம்.
மழைத்துளிகள் குளிர்ச்சியாக இருந்தன..! வானம் இன்னும் இருட்டியது.
மழையும் அடித்துக்கொட்டியது..! அங்காங்கே பாரிய சத்தத்துடன்
இடி மின்னல் விழுந்தது. அந்தக்காட்சிகள் கண்ணைப்பறித்தன. பிள்ளைகளும் மனைவியும் பதறினார்கள்..!
பயப்படவேண்டாம் என்று சொன்னேன். மேலும் மின்னல் வெட்டி இடி முழங்கியது. கடற்கரையில்
உள்ள இளைஞர்கள் ஓட்டம் பிடித்தார்கள்..! யாரோ ஆமிக்காரர்கள்
விசில் ஊதியதாகச் சொன்னார்கள்..! என்னையும் வெளியே வர வற்புறுத்தினார்கள். வெளியே வரும்போது
மேலும் பலமாக இடி இடித்துக்கொண்டு மழைகொட்டியது. உடுப்பை மாற்றமுடியவில்லை. இடி இடிக்க
நாமும் கார் நின்ற இடத்திற்கு விரைந்துசென்றோம். பிள்ளைகளும் மனைவியும் ஏன் நான் கூடப்பதற்றப்பட்டேன். கடற்கரையில் நின்றவர்களும் எழுந்து ஒரே ஆச்சரியத்துடன்
மழையையும், இடி மின்னல்களையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஈர உடுப்புக்களுடன் தலை கூடத்துவட்டாமல் கரையெடுத்துக்கொண்டு
வீதிக்கு வந்தோம். எங்கும் தண்ணீர்..! வீதியைப் பார்க்க முடியவில்லை. வாய்குள் ஊறிய
உப்புத்தண்ணீரின் எச்சிலை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் வீடு நோக்கிப்பறந்தோம்.
மழை கடும்பிடி பிடித்தது..! நானும் கடுகதியில் தெல்லிப்பழை
மற்றும் மல்லாகம் கடக்க மழை குறைந்தது. வீடு வர மழையே இல்லை எனலாம்..! வழமைபோல் வெப்பம்
மாத்திரம் இருந்தது. முதலில் காரை திறந்து வாயில் இருந்த உப்பு நீரை துப்பிய பின்னரே
கதைத்தேன். கடலில் இருந்து எழுந்து காரை எடுத்து வீடுவரும் வரை வாயைத் திறக்க முடியவில்லை.
பதட்டமே சாதாரண செயற்பாடுகளையும் மாற்றிவிட்டது..! என்னுடன் வந்த எல்லோரும் பெண்கள்
என்பதால் அவர்களின் பயம் இறுதியில் எனக்கும் தொற்றி, வீடுவரை கொண்டுவந்துவிட்டது. இவ்வளவும்
ஏறக்குறைய ஒரு அரை மணிநேரத்தில் நடந்து முடிந்துள்ளது..!
சில நேரங்களில் இடி விழுந்து குடும்பமே மாழுவதாகக் கேள்விப்பட்டுள்ளேன்..!
அது எமக்கும் நடந்திருக்கலாம்..! இறைவனின் அருள் இருந்ததோ என்னவோ தற்போது உயிருடன்
இருந்து இதை எழுதுகின்றேன்.
ஆ.கெ.கோகிலன்
10-05-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக