சித்தரை வெய்யிலும், எமது நிகழ்வுகளும்..!

 


 


நான் திருகோணமலை உயர்தொழில்நுட்ப நிறுவனத்திற்கு மாற்றலாகி வந்தபிறகு, ஏதாவது பயனுள்ள விடயங்களில் மாணவர் கவனத்தைத் திருப்பலாம் என்று பார்த்தால் காலநிலை கடும்போக்காக நிற்கின்றது..! கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எல்லாம் பற்றி எரிவது போல் இருக்கின்றது சூழல்..!

வெளியில் செல்வதே கடினம்..! நான் பணிப்பாளராக இருப்பதால் பான்  (Fan) காற்றிலும், குளு குளு ஏசியிலும் இருப்பதால் மற்றவர்களோடு ஒப்பிடும்போது பராவாயில்லை என்றே தோன்றுகின்றது. ஆனாலும் இந்த வசதிகளுடன் தொடர்ந்து இருப்பது கடினம்.

அதேவேளை வெளியே கடும் வெய்யில் அடித்தாலும், மரநிழல்களிலும், காற்றுவரும் பகுதிகளிலும் இருக்கும் சுவாத்தியம் அலாதியானது மாத்திரமல்லாமல் ஆரோக்கியமானதும் கூட..! இந்தச் சூழலில் கடந்த  ஏப்பிரல் 25 இல் இரத்த தான முகாமை எமது மாணவர்கள் மூலம் அமைத்து, திருகோணமலை வைத்தியசாலைக்கு 56 நபர்களின் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது. குறிப்பாக மனிதநேய மதிப்பு தொடர்பான  பாடத்திற்கான ஒரு செயற்றிட்டமாக இந்நிகழ்வை எமது மாணவர்கள் நடாத்தினார்கள். பணிப்பாளர் என்ற வகையில் கலந்துகொண்டு நிகழ்வைத் தொடக்கி வைத்ததுடன் நானும் இரத்தம் கொடுக்க முனைந்தபோது, வைத்தியர் என்னைச் சோதித்துவிட்டு, உயர்இரத்த அழுத்தம் 170 இற்கு மேல் இருப்பதால் வைத்தியசாலைக்குப் போய் அதற்கு மருந்து எடுக்கச்சொன்னார்.

இந்தச் சூழலில் என்னால் இரத்தம் கொடுக்க முடியவில்லை. எனக்குத் தெரிந்து, இவ்வாறான பிரச்சனைகள் கொண்ட 10இற்கு மேற்பட்டவர்களிடம் இரத்தம் எடுக்கவில்லை.  இருந்தாலும் 56 பேர் இரத்தம் கொடுத்தது மகிழ்ச்சியைத் தந்தது.

இது தொடர்பான விளம்பரங்கள், செய்திகள் என்பவற்றை மாணவர்கள் என்னுடன் பகிர்ந்தார்கள். இந்தத்தருணங்கள் நிறைவாக நகர்ந்ததாக உணர்ந்தேன்.

நேற்று ஏப்பிரல் 30..!  இந்தவருடத்திற்கான தமிழ் சிங்களப் புத்தாண்டு கலை மற்றும் கலசார நிகழ்வுகளை நடாத்தினோம். வெயில் கொடுமைப்படுத்தினாலும், அதையும் தாண்டி பல நிகழ்வுகளை வெற்றிகராமாக நடாத்தி முடித்தார்கள் எமது மாணவர்கள். அவர்களுக்கு வெயில் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. ஆனால் ஊழியர்கள் தவித்தார்கள்..!

பாட்டு, ஆட்டம், வேடிக்கை விளையாட்டுக்கள் மற்றும் திரு மற்றும் செல்வி  ஏரிஜ (ATI) என்ற நிகழ்வு, முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல் போன்ற பல போட்டிகள் நடந்தன.

நானும்  பலூன் ஊதுதல், முட்டி உடைத்தல் போன்ற இரு போட்டிகளில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. வெற்றிபெறாவிட்டாலும் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி..! முன்பு தோல்வியைக்கண்டு, அஞ்சிப் போட்டிகளில் பங்குபற்றுவதில்லை..! இப்போது,  போட்டிகளில் கலந்துகொள்வதே வெற்றி என்ற மனப்பக்குவத்திற்கு வந்துவிட்டேன். வெற்றி யாரோ ஒருவருக்குத் தான் கிடைக்கும். நாம் துவளாமல் தொடர்ந்து போட்டிகளில் பங்குபற்றி, வெற்றியடைய முயற்சிக்க வேண்டும்.

பார்வையாளனாக இருப்பதைவிட பங்காளனாக இருப்பதே சிறந்தது. மேலானது..! தோல்வியே வெற்றியை தொடவைக்கும் பாடத்தைக் கொடுக்கும் முக்கிய படிப்பு..!

 இறுதியாகப் பரிசளிப்பு நிகழ்வும் நடந்தது. இதன் பிறகு எனது சிறு உரையுடன் நிகழ்வுகள் முடிவுக்கு வந்தன. என்ன வெயில் அடித்தாலும், கலங்காமல், துவளாமல் எமது பிள்ளைகள் போட்டிகளில் பங்குபற்றியது பாராட்டுக்குரியது.

பல போட்டிகளைத் நடாத்தத் தீர்மானித்தோம். இறுதியில் சிலவற்றினை நடத்தமுடியாமல் போய்விட்டது..! எல்லாவற்றையும் திருகோணமலை உயர்தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் வைக்க முடிவுசெய்துள்ளோம். சந்தர்ப்பங்கள் வரும்போது கொண்டாட்டங்களைத் தவிர்க்க முடியாது.

 

ஆ.கெ.கோகிலன்

01-05-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!