இப்படியொரு மனிதர்..!

 

 


அன்று ஒரு செவ்வாய் கிழமை மாலை எனது அலுவலகத்தில் அடுத்த நாள் வகுப்பிற்கான பாடத் தயார்படுத்தலில் இருக்கும்போது எமது நிறுவனத்தில் தற்காலிகமாக கடமையாற்றும் வருகைதரு விரிவுரையாளர் ஒருவர் என்னிடம் வந்து, ஒரு 1000 ரூபாய் கிடைக்குமா..? என்றார். அவர் எனது நிறுவனத்தில் வேலை செய்வது  பற்றித்தெரியும். அண்மையில் நடந்த ஒரு விபத்தில் காலில் காயம் ஏற்பட்டு, நொண்டி நொண்டி அலுவலகம் வந்தபோது கனிவாக என்ன நடந்தது..? எனக்கேட்க  விபத்துப்பற்றிச் சொன்னார். அவ்வளவு தான் எனக்கும் அவருக்கும் நடந்த உரையாடல்..!  ஒரு நாள் வருகைதரு விரிவுரையாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு, அங்கே நான் கதைத்ததில் இருந்து, என்னைப்பற்றி ஓரளவிற்கு அறிந்திருப்பார்.

இந்த நிலையிலே இவ்வளவு உரிமையுடன் என்னிடம் பணம் கேட்க, மனம் முதலில் சந்தேகப்பட்டது..! இது பெரிய தொகைப்பணம் அல்ல..! ஆனால் அவர் பிள்ளைகளுக்கு கல்வி வழங்கும் ஒரு குரு..! ஏன் இப்படிக்கேட்டார் என நினைத்தபோது, சிலவேளை உண்மையில் ஏதாவது தேவையிருக்கும். வேறுவழியின்றிச் சங்கடப்பட்டுக்கொண்டு, எப்படியென்றாலும் பணிப்பாளர் தானே..! அவர் தானே சம்பளம் தரவேண்டும் என்ற எண்ணத்தில் கேட்டாரா..? என்பது தெரியாது. ஆனால் கேட்டார்..!

நான், தேடுவதுபோல் தேடிவிட்டு, அவர் கேட்ட சில கேள்விகளுக்குப் பதில்சொல்லிக்கொண்டு இருந்தேன். குறிப்பாக இந்த குறைவான நாட்கள் கொண்ட செமஸ்டர் காலத்தில் தேவையில்லாத கல்விப்புறச்செயற்பாடுகளைத் தவிர்க்கலாம் தானே என்றார். நான் துறைத்தலைவருடன் ஏதாவது உங்கள் நேரம் விரயப்பட்டால் கதைத்து வேறுநேரம் தருகின்றேன் எனக்கூறினேன். மேலும் சில கேள்விகளைக்கேட்டார். நானும் பதில்சொல்லிக்கொண்டு, காசு தேடுவதை விட்டுவிட்டேன். மீண்டும் கேட்டார் நான்  சொன்ன 1000ரூபா தருவீர்களா..? என்று..! உடனே நான் கேட்டேன், எதற்கு என்று..! மோட்டார் சைக்கிளில் வந்தேன். இடையில் ஏதோ பிரச்சனை..! ஓட முடியாமல் உள்ளது. மெக்கானிக்கிடம் போகவேண்டும். அதற்குத் தான் என்றார்..? அந்தக்காரணம் எனக்கு ஓரளவு சரியென்று பட்டது. பின்னர் அவருடன் சென்று எனது அறைக்குப்போய் 1000 ரூபா எடுத்துவந்து கொடுத்துவிட்டு, அவரது மோட்டார் சைக்கிளைப் பார்த்தேன். நான் பார்க்கும் போது உருட்டிக்கொண்டு போனார். பின்னர் நான் வந்துவிட்டேன்.

தீடிரென ஒரு சந்தேகம் வந்தது..! கேட் தாண்டியும் உருட்டிக்கொண்டு போறாரா என்று..? நான் நினைத்தது சரி..! அவர் பின்னர் ஓடிக்கொண்டு போனார்..!

 அப்போது தான் விளங்கியது.. என்னை ஏமாற்றிப் பொய்சொல்லிவிட்டுப் போகின்றார் என்று..! எனக்குக் கடும்கோபம் வந்தது..! எனக்குப் பொய்சொல்லி ஏமாற்றுபவர்களைப்  பிடிக்காது. தெரிந்தால், நான் அவர்களுடன்  தொடர்பு வைப்பதைத் தவிர்ப்பேன். இனிமேல் இவருடன் கவனமாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஏமாற்றியதற்கு ஒரு பாடமும் படிப்பிக்க முடிவுசெய்து வைத்துள்ளேன்.

பின்னர், இந்தவிடயத்தைப் பற்றிப்பலருடன் கதைக்க அவரைப்பற்றி பல குறைகளைச்சொன்னார்கள்..! ஒரே குடி என்றும் அதற்குத் தான் இப்படிச் செய்கின்றார் என்றும், தான் தரம் தாழ்ந்து போவது, அவருக்கு உறைக்கவில்லை என்றும் சொன்னார்கள்..! எனக்குப் பணத்தைவிட ஒரு குருவாக மதிக்கப்பட வேண்டியவர் இவ்வாறு கண்ணியம்  தவறி நடப்பதைப் பார்க்க வேதனையாக இருந்தது. எவ்வளவு திறமையிருந்தும், கலைகள் தெரிந்தும் வாழ்க்கையில் முன்னேறாதவர்கள் பலர் இருக்கின்றார்கள். அதே போல் முட்டாள்தனங்கள் கூட இருந்தாலும் நல்ல நடத்தையாலும், முயற்சிகளாலும் உயர்ந்தவர்களும் இருக்கின்றார்கள்..!

நல்ல திறமையானவர் என்று சொல்கின்றார்கள்..! ஆனால் என்ன பயன்..? நடத்தை தவறாக உள்ளதே..?

இப்படித்தான் வாழவேண்டும் என்றும் மனிதர்கள் இருக்கின்றார்கள்..! எப்படியும் வாழலாம் என்றும் மனிதர்கள் இருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் படைத்து, பார்த்து, ரசிக்கும் நிலையில் இறைவனும் இருக்கின்றார்..!

 

ஆ.கெ.கோகிலன்

01-05-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!