செம்பி..!
சில படங்கள் நிச்சயம் மக்களுக்கு தேவையான பாடங்களைப் புகட்டும். அந்த வகையில் செம்பி படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு பாடம்..! இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் போஸ்கோ சட்டம் என்பது தொடர்பாக நல்ல ஒரு அறிவை இப்படம் கொடுக்கும். வழமையாகவே பிரபு சொலமனின் படங்கள் என்றால் நம்பிப் பார்க்கலாம். இந்தப்படமும் அந்த வகையைச் சேர்ந்தது தான். சில இடங்களில் சில காட்சிகள் லொஜிக்கில் சிறிது பிசகினாலும், படத்தின் உயிரோட்டம் அதை மறங்கடித்து விடுகின்றது.
கோவை சரளா உண்மையில் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். அவரைக் கொமெடியனாகப் பார்த்தாலும், குணசித்திர நடிப்பை வழங்குவதிலும் சிறந்தவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். அடுத்து, சிறுமியாக நடித்த அந்தச் சிறு பெண். அவளின் கண்களும், நடிப்பும் சில இடங்களில் கலங்க வைக்கின்றது. அடுத்து இடையிலே வரும் படத்தின் ஹீரோ அஸ்வின் குமாரின் நடிப்பு கவனிக்கத்தக்கது. உண்மையில் இந்தப் படத்திற்குத் தேவையான நடிப்பை வழங்கி, மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்துள்ளார்.
பெற்றோர் இல்லாத குழந்தையை வளர்க்கும் மலைஜாதியைச் சேர்ந்த
ஏழைப்பாட்டி பாடும் பாடும், அந்தப்பேத்தி, கயவர்களால் நாசமாக்கப்பட்டதை அறிந்து படும்
வேதனையும், அதனைத் தொடர்ந்து நடக்கும் பேரம்பேசும் காட்சிகளும், கொலை முயற்சிகளும் என்று
படம் விறுவிறுப்பாகப் போகின்றது. அதோடு சேர்ந்து, முதல்வராகும் போட்டியும், அதற்கு
அந்த அப்பாவிப்பெண் பேசுபொருளாவதும் தற்போதைய மலிவான அரசியல் களத்தை மக்களுக்கு வெளிச்சம்
போட்டுக்காட்டுகின்றது.
படம் முடிவில் அன்பு என்ற ஒன்றைப்பற்றியும், அதன் தேவை பற்றியும் விளக்கம் கூறிப்படம்
முடிகின்றது. இறைவன் நல்லவர்களுடாகவே மக்களிடம் இருப்பார் என்ற உணர்வைத் தந்ததற்கு
பிரபு சொலமனுக்குப் பாராட்டலாம். படத்தின் அனைத்து தொழில்நுட்ப வல்லுணர்களும் சிறப்பாகத்
தமது பணியை ஆற்றியுள்ளார்கள். படம் வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியை அடையாவிட்டாலும், நல்லபடம் என்ற கருத்து
மக்களிடம் நிலைத்து இருக்கும்.
ஆ.கெ.கோகிலன்
01-04-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக