தமிழ் புதுவருடக் கொண்டாட்டம்

 


அண்மைக்காலமாக நாட்டின் பொருளாதார வீழ்ச்சியால் பல விடயங்கள் தடைப்பட்டுள்ளன. மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளது. இம்முறை புத்தாண்டுக்காக வாங்கப்பட்ட வெடிகள் மற்றும் வாணங்கள் மிகக்குறைவாகவே எனக்குப்பட்டது. நான் கூட 3 வெடிகளுடன் புத்தாண்டை முடித்துக்கொண்டேன். புத்தாடைகள் அணிவதும், உறவுகளுக்கு கொடுப்பதும் குறைந்துள்ளது.  இதேநிலை எங்கும் இருந்துள்ளதா என்பது தெரியவில்லை. எனது ஊரிலும், அண்மைய கிராமத்திலும் நிலை இவ்வாறாகவே இருந்தது.

புத்தாண்டை முடித்துக்கொண்டு ஒருவாறாக அலுவலகம் போகும் போது, அங்கும் புதுவருட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. எனக்கும் ஒரு பொறுப்புத் தரப்பட்டது. நிறுவனத்தலைவர் என்ற வகையில் அதனை நான் தான் செய்ய வேண்டும். அதனைத் தவிர்ப்பது அழகல்ல. அந்த வகையில் கைவிசேடம் அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முற்கூட்டியே செய்து வைத்தேன். என் வாழ்நாளில் ஒரு முறையும்  பணத்தின் புதுத்தாள்களை வங்கியில் பெறவில்லை. இம்முறை எமது நிறுவனத்திற்காக அதனைப்பெற்றேன். அத்துடன் நான் உற்பத்தி செய்த வெற்றிலை மற்றும் பாக்குகளையும் தயார் செய்தேன். மேலும் எனது தாயாரின் உற்பத்தியான நெற்களையும் பெற்றுக்கொண்டேன்.

குறித்த நாளில் நான் நினைத்ததைவிட மிகச்சிறப்பாக கைவிசேட நிகழ்வுகளும், தொடர்ந்து வழங்கப்பட்ட சிற்றூண்டிகளும் இருந்தன.

இவற்றினை ஒழுங்குபடுத்திய  எமது நிறுவன ஊழியர் நலன்புரிச்சங்கத் தலைவருக்கும், ஏனைய உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்.

இந்த இடத்தில் ஒருவிடயத்தை சொல்லியாக வேண்டும். கைவிசேடம் கொடுப்பது என்பது எனது காலப்பகுதியில் தான் நடைமுறைக்கு வந்தது. கைவிசேடத்திற்குரிய பணத்தை எமது நலன்புரிச்சங்கமே வழங்கும். நிறுவனத்தலைவர் என்ற வகையில் நான் மற்றவர்களுக்கு கொடுப்பது கடந்த சில வருட நிகழ்வுகள். ஆனால் கடந்த வருடம், பொருளாதாரச் சிக்கலால் நலன்புரிச்சங்கம் நலன்புரி உறுப்பினர்களுக்கு மட்டும் என பணத்தை வழங்கியது. நான் சொன்னேன்  “நலன்புரிச்சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத பயிற்சி ஊழியர்களுக்கும், ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் துப்பரவு ஊழியர்களுக்கும், பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இதனை வழங்கவேண்டும் என்று..” அத்துடன் அவர்களைத் தவிர்ப்பது நிறுவனத்திற்கு அழகல்ல எனவும் சொன்னேன். மேலும் அதற்கான பணத்தை நானே கொடுப்பதாகக் கூறி, அந்த தற்காலிக ஊழியர்களுக்கும் வழங்கினேன்.

இந்த முறை நலன்புரி சங்க நிதிநிலைமை நாட்டு நிலைமைபோல் மிகமோசமாகப்  போனதாலும், நலன்புரிசங்க தலைவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் இதனைச்செய்தேன்.

சிலர், இவ்வாறாக நடந்து, அனைவரையும் விலைக்கு (இலஞ்சம்) வாங்குவதாக நினைக்கலாம்.  உண்மையான காரணம் மேலே சொல்லப்பட்டுள்ளது.

யாருக்கு மேலேயும் நான் இருக்கவில்லை.  அதேபோல் யாருக்குக் கீழேயும் நான் இருக்கவில்லை. நான் ஒரு முதலாளி அல்ல. நானும் அனைவர் போல் இருக்கும் ஒரு சக தொழிலாளியே..!

நாம் அனைவரும் இலங்கை அரசு நடாத்தும் ஒரு கல்வி நிறுவனத்தின் ஊழியர்களே..

கொடுப்பதும், கொடுக்க வைப்பதும் இயற்கையின் அருளே..! நாம் நினைத்தாலும், கொடுக்க விரும்பினாலும் அது முடியாது போன சந்தர்ப்பங்கள் பல எனது வாழ்வில் வந்துள்ளன.  அனைத்திற்கும் இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி பாராட்ட வேண்டும். எல்லாம் அவற்றிற்கே..!

 

ஆ.கெ.கோகிலன்

17-04-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!