அம்மாவின் டிவி..!
நான்கு அல்லது ஜந்து வருடங்களுக்கு முன்னர் அம்மாவிற்கு நான் ஒரு டிவி வாங்கிக்கொடுத்தேன். அது இலங்கைத் தயாரிப்பு. தம்றோ என்ற நிறுவனத்தில் வாங்கினேன். நானும் அவ்வாறான ஒன்றையே வைத்துள்ளேன்.
அதேபோல் சற்றலைட் சனல்கள் பார்ப்பதற்கான டிஸ்க் மற்றும் ரிசீவர் என்பவற்றையும் வாங்கிக்கொடுத்தேன். கொஞ்சக்காலம் பணமும் கட்டிக்கொண்டு வந்தேன். நாட்டுப்பொருளாதாரச் சூழலால் சிலவற்றை என்னால் தொடர முடியவில்லை. ஆனால் அதைவிட முக்கியமான ஒரு விடயத்தை கடந்த பல வருடங்களாக அவர்களுக்குச் செய்துவருகின்றேன்.
சில தினங்களுக்கு முன்னர், அம்மா தனது டிவி பழுதாகிவிட்டது வந்து பார் என்றார். நானும் போய் பார்த்தேன். சரிவரவில்லை. இப்படியான டிவிக்கள் 5 வருடம் வேலைசெய்வதே பெரியவிடயம். ஆனால் இந்த டிவியும் ஏறக்குறைய 5 வருடங்கள் வேலை செய்து இருக்கலாம். ஆகவே, இனி ஒரு நல்ல புது டிவியை தம்பியிடம் சொல்லி வாங்கச் சொன்னேன்.
அவனும் இப்போது டிவிக்களின் விலைகள் மிக அதிகம். கொஞ்சம் காலம் போனால் குறையும் என்றார். நானும் சரி என்றேன். அதற்குள் மற்றத்தம்பி, எனக்கு அடுத்தவர், ஒரு மெக்கானிக்கிடம் கொடுத்து, ரூபா.8000.00 இற்குள் பழுதாகிய அந்த த்டிவியைதிருத்திவிட்டான். உடனே அம்மா சொன்னார் நீ புதுசு வாங்க வேண்டும் என்றாய். ஆனால் அவன் திருத்தி இப்ப அது வேலை செய்கின்றது என்றார்.
நான் சொன்னேன் நல்லது. ஆனால் இப்போது ஒரு பாட் (One Part) பழுதாகி மாற்றியுள்ளீர்கள். இதேபோல் இனி ஒவ்வொன்றாகப் பழுதாக மாற்றவேண்டி வரும். அவ்வாறு மாற்றும் போது சிலவேளை புது டிவியைவிட அதிக விலைகொடுக்க வேண்டி வரும் என்றேன்.
பின்னர் சில நாட்கள் அம்மா என்னுடன் கதைக்கவில்லை. என்னடா இவன் இப்படிச்சொல்கின்றான் என நினைத்திருப்பார் போலும்..!அதேசமயம், எனக்கும் உடல் நிலை சரியில்லை. இப்படியான விடயங்களை சும்மா புரிய வைக்க முடியாது. காலமே உணர்த்த வேண்டும். எனக்குக் கிடைத்த அனுபவமே இவ்வாறு கூற வைத்தது. சிலவேளைகளில் அம்மாவிற்கு கிடைக்கும் அனுபவம் மாறுபடலாம். உண்மையான நிலையை ஒவ்வொருவருடைய அனுபவப்பாடம் புரியவைக்கும்.
ஆ.கெ.கோகிலன்.
03-04-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக