மலர்வடி கண்டம்..!
சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியபுரி என்ற நாட்டை பாண்டுகாயன் என்ற ஒரு மாமன்னன்
ஆண்டு வந்தான். அவனது மனைவியான ராணியை வேணுகாதேவி என்று அந்நாட்டு மக்கள் அழைப்பார்கள். அந்த
மன்னனுக்கு சம்மேகா மற்றும்
சுகந்தன் என்ற இரு பிள்ளைகள்
இருந்தார்கள். அந்த நாட்டையும், அந்த நாட்டைச்சுற்றியுள்ள நாடுகளான வடபுரி, வலம்புரி, தென்புரி மற்றும் இடம்புரி என்ற நான்கு நாடுகளின் மன்னர்களையும் தனது கட்டுப்பாட்டில்
வைத்திருந்தான். அது மாத்திரமன்றி இந்த ஜந்து
நாடுகளிலும் “சாருயா” என்று அழைக்கப்படும் இறைவனைக் கொண்ட மதமான “சாருகீயம்” என்பதனையே அனைவரும் பின்பற்றிவந்தார்கள்.
இந்த இணைந்த 5 நாடுகள் மேல், உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் ஈர்ப்பு இருந்தது. இந்த நாடுகளில் மத்தியபுரி கடல் மட்டத்தில் இருந்து ஏறக்குறைய 5000 அடி
உயரத்திலும், மற்றைய நான்கு நாடுகளும் ஏறக்குறைய கடல்மட்டத்திலும் இருந்தன. மலைப்பாங்கான பகுதியில் மத்தியபுரி இருப்பதாலும்,
இயற்கை அரணைக்கொண்டமைந்ததாலும் யாராலும் அந்நாட்டை கைப்பற்ற முடியவில்லை. கடல் வளம்
தவிர்ந்த ஏனைய சகல வளங்களும் அந்நாட்டில் இருந்தன. மத்தியபுரி தனது கடல்வளத்தேவைகளை அதன் ஏனைய அயல்
நாடுகளில் இருந்து பெற்றுக்கொண்டது.
இந்நாடுகளைச் சேர்த்துப் பொதுவாக “மலர்வடி கண்டம்” என்று அழைப்பார்கள். உலகிலுள்ள அனைத்துக்கண்ட மக்களுக்கும் மலர்வடி கண்டத்திற்கு
போக வேண்டும், அந்நாட்டுடன் தொடர்புகளைப் பேணவேண்டும் என்று பேரவா கொண்டு இருந்தார்கள்.
இந்த மலர்வடிகண்டத்தைச் சுற்றி பெரிய ஆழமான “பூக்கடல்” என்று அழைக்கப்படும்
கடலுண்டு. கடலைத்தாண்டியதும் நான்கு பெருநிலக்கண்டங்கள் உண்டு. அவை முறையே தேவநாடு,
கள்ளநாடு, அரக்கநாடு மற்றும் வள்ளநாடு அழைக்கப்படும்
பெரிய நாடுகளாகும். இந்த நாடுகளை, அவற்றின் பெருநிலப்பரப்புக்காரணமாக, அவற்றினைக் கண்டங்கள்
என்றும் சொல்லப்படும்..!
இந்த 5 கண்டங்களையும் சேர்த்தே பூமி இருந்தது..!
அன்றைய காலத்தில் நாடு பிடிப்பதும், நாட்டிலுள்ள மக்களை அடிமைகளாக்குவதும்,
விரும்பினால் மன்னர் குடும்பப் பெண்களை மணப்பதும், இல்லையென்றால் அழிப்பதும் சாதாரணவிடயமாகவே
கருதப்பட்டது.
எல்லாமக்களும், வீரம், விவேகம் இரண்டையும் பெற எல்லா முயற்சிகளையும்
எடுப்பார்கள். சாருகீயம் என்ற மதத்திலும், ஏனைய அயல் கண்ட நாட்டிலுள்ள மதங்களிலும்
இந்த அறிவை அளிப்பதற்கே பெரிய முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
கப்பல் போக்குவரத்துக்கள், விமானப்போக்குவரத்துக்கள் போன்ற வசதிகள் அன்று இருந்தாலும் அவை எல்லோராலும் பயன்படுத்தும் விதத்தில் இருக்கவில்லை..! சில மாமன்னர்களின் கைகளுக்குள் மட்டுமே அவை இருந்தன.
அரக்கநாட்டு மாமன்னன் சூரமைந்தன், தனது பாரியாரான மோகனாவுடன் கழுகு விமானப்பயணம்
செய்யும்போது மலர்வடி கண்ட நாடுகளின் அழகையும்
இயற்கையின் கொடையையும் கண்டு மயங்கி, அக்கண்டத்தைத் தன்கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டம்
தீட்டினான். அதற்காக மாமன்னர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்து அவர்களின் அனுமதியைப்
பெற விரும்பினான். இந்த நான்கு மாமன்னர்களில்
அபாயம் மிக்கவன் சூரமைந்தன். உலகைக் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர எதையும் செய்யத்
தயங்காதவன். இதை நன்கு அறிந்த தேவநாடு, கள்ளநாடு மற்றும் வள்ளநாடு மாமன்னர்களான தேவராஜன்,
மணிமாறன் மற்றும் ஈகைவேந்தன் ஆகிய மூவரும் சூரமைந்தனுக்கு ஒத்து ஊதி வந்தார்கள்..!
போர் தொடங்கியது. சகல பலத்தையும் கொண்டு மலர்வடி கண்டத்தைக் குறிப்பாக மத்தியபுரியைக் கைப்பற்ற
முனைந்தார்கள். முடியவில்லை.
வடபுரி, வலம்புரி, தென்புரி மற்றும் இடம்புரி மன்னர்களான
குமார வர்மன், ராமவர்மன், அகில வண்ணன் மற்றும்
நீல வாணன் ஆகிய நான்கு குறுநிலமன்னர்களும்,
பாண்டுகாயனுக்கு பெரும் பக்க பலமாக இருந்தார்கள். அத்துடன் இயற்கை அரண்களையும் மலர்வடி
கண்டம் கொண்டிருந்ததால், மற்றைய கண்டங்களால் மலர்வடி கண்டத்தைக் கைப்பற்ற முடியவில்லை.
-----------------------------------------------------
இவ்வாறாகப்பல அபாயங்கள் வந்தாலும் அசைக்க முடியாத பாண்டுகாயன், தனது மகளின் திருமணத்திற்கான ஏற்பாட்டைச் செய்யத்தொடங்கினான். அதன்வழியாக, மாமன்னன் மகளான சம்மேகாவிற்கு, சுயம்வரம் நடந்தது. இந்த சுயம்வரத்தில் குமாரவர்மன் மற்றும் குமுதினியின் மகனான நவீனன் வெற்றிபெற்று, அவளை மனைவியாக்கியதால் குமார வர்மனுக்கும் பாண்டுகாயனுக்கும் நெருக்கம் கூடியது. மேலும், சுகந்தனும் அகில வண்ணன் மற்றும் வசந்தாதேவியின் ஏக புத்திரியான சுரேகாவை மணம் செய்த காரணத்தாலும் இருநாட்டுக்குமான உறவு வலுவாக இருந்தது. வலம்புரி நாட்டின் ராஜா, ராணியான ராமவர்மன் மற்றும் நந்தினியின் மூத்த புதல்வியை வடபுரி மன்னனின் இன்னொரு மகனைத் திருமணம் செய்ததாலும் வடபுரிக்கும், வலம்புரிக்கும் இடையில் பகையெழும் வாய்ப்புக்கள் குறைவாகவே இருந்தன. ஆனால் நீலவாணன், கன்னிகாவின் மகனான சந்தி வாணனும் சம்மேகாவை மணக்க விரும்பினான். சுயம்வரத்திலும் கலந்துகொண்டான். ஆனால் அவனால் சுயம்வரத்தில் நவீனனை வெல்ல முடியவில்லை. இதனால் வெறுப்படைந்த சந்திவாணன், தனது சகாக்களுடன், தந்திரமாக நவீனனைக் கொன்றுவிடுகின்றான்.
இதனை அறிந்த வடபுரி, வலம்புரி, தென்புரி மற்றும் மத்தியபுரி மன்னர்கள் இடம்புரியை வெறுக்கத்தொடங்குகின்றார்கள். இந்தப்பகை மலர்வடி கண்டத்தில் பெரும் பிரளயத்தைக் கிளப்புகின்றது. இதனை அறிந்த அரக்க நாடு, ஏனைய தோழமைக்கண்டங்களுடன் சேர்ந்து, இடம்புரியை தமது உறவு நாடாக மாற்ற மணவுறவைப் பயன்படுத்துகின்றார்கள். மதங்கள் வேறுபட்டாலும், உட்பகை, பெரும் பகையாக மாறுகின்றது. அது பெரும் போராக முடிய, மலர்வடி கண்டம் அரக்கநாட்டின் கீழ் வருகின்றது. இடம்புரி மன்னனைத் தவிர அனைத்து மலர்வடி கண்டத்தின் அரசர்களும் கொல்லப்படுகின்றார்கள்.
இறுதியாகத் தனது மகனின் பேராசையால் மலர்வடி கண்டம் அழிந்ததை நினைத்து கவலையால் இறக்கின்றான்
நீல வாணன். அதனைத் தொடர்ந்து, தனது ஆசைக்காக, உறவு என்றும் மதிக்காமல், கன்னிகாவையும்,
சந்திரவாணனையும் கொலைசெய்து மலர்வடி கண்டத்தை முழுமையாகக் கைப்பற்றி உலகின் மாமன்னாக மாறினான் சூரமைந்தன்..!
-----------------------------------------------------
வந்த பெருவெற்றி, ஆணவத்தை அளிக்க, சூரமைந்தனின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரிக்க தேவநாடு, கள்ளநாடு, வள்ளநாடு தமது நெருக்கத்தை அவனுடன் குறைக்க முனைந்தன.
கள்ள நாட்டு மாமன்னன் மணிமாறன், மையல்நாயகிக்கு 4 பிள்ளைகள். அந்நால்வரில் இரண்டாவது பெண்ணை போரில் இறந்த ராமவர்மன் என்ற வலம்புரி மன்னனின் இரண்டாவது பிள்ளையும், முதலாவது ஆண் வாரிசுமான, ராமவர்மனின் மகன் பூக்கடல்வழியாக தப்பிச்சென்று, கள்ளநாட்டில் சில வருடங்கள் தங்கி, அம்மக்களின் நல்லெண்ணத்தையும் பெற்று, மாமன்னனின் மகளையும் மணந்து, கள்ளநாட்டை தன்னுறவாக்கி, அந்நாட்டின் உதவியை தன்நாட்டிற்காகப் பெற்றான்.
அதேபோல் இறந்த மாமன்னன் பாண்டுகாயனின் மகனான சுகந்தனும், போரில் உயிர் தப்பி தன்னுடைய நாட்டை மீட்கப்போராடினான். அதற்காக மலர்வடி கண்ட மீட்புப்படை என்ற ஒன்றை இரகசியமாக உருவாக்கி, கள்ளநாடு, தேவநாடு மற்றும் வள்ளநாட்டின் மறைமுக ஆதரவோடு அரக்கநாட்டுடன் போராடினான். இந்தப்போராட்டம் பல வருடங்கள் நீடித்தது.
இறுதியில் நீதி வெல்லும் என்பதற்கு இணங்க சூரமைந்தன் போரில்
இறந்தான். பிற நாடுகளும் தமது ஆதரவை, அரக்க நாட்டுக்குக் கொடுக்காததால், அரக்கநாடு பாரிய அழிவுக்கு
உட்பட்டது. சூரமைந்தனின் வம்சமே அழிந்தது.
தேவநாட்டின் மாமன்னனான தேவராஜன் மற்றும் தெய்வானை
தம்பதிகளின் கடைசி மகளை சுகந்தன் இரண்டாவது திருமணம் செய்து தேவநாட்டுடனும் உறவுவைத்திருப்பதால், உலக ஆதரவு
அவனுக்கு கிடைத்தது. இறுதியில் அனைத்து
நாடுகளின் அனுமதியுடன், மத்தியபுரிக்கு மாமன்னன் ஆனான் சுகந்தன்.
ஆ.கெ.கோகிலன்
12-04-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக