காதல் ஒரு பயணம்..!

 


 


சுகாஷ் என்பவன் பாடசாலையில் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தான். அவனது குடும்பத்தில் தாய் மட்டுமே இருக்கின்றாள். அவனைப்படிக்க வைப்பதே அவளின் முக்கிய கடமையாக இருக்கின்றது. சுகாஷ் பாடசாலைக்கு சைக்கிளில் செல்வது வழக்கம். பழைய அந்தச்சைக்கிள் கறல் பிடித்துள்ளது. இருந்தாலும், அதனை  மிதித்துப் பாடசாலைக்கு சந்தோசத்துடன் போய்வருவான்.

-----------------------------------------------------

குறித்த அதே பாடசாலையில், சமூகத்தில் நல்ல மரியாதைகொண்ட குடும்பத்தில் பிறந்த ரம்மியா என்பவளும் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தாள்.  மிகவும் அழகான தோற்றம் கொண்ட ரம்மியா படிப்பிலும்  கெட்டிக்காரி.

அவளது பெற்றோர் மற்றும் சகோதரங்கள் எல்லோருமே அந்த ஊரின் மதிப்பு, மரியாதைக்கு உரியவர்களாகும். பொருளாதாரத்திலும் அவர்கள் வலுவாகவே இருந்தார்கள். பொதுவாக நல்ல வசதிகள் இருந்தாலும், ரம்மியா பாடசாலைக்கு பஸ்ஸிலேயே போவாள்.

-----------------------------------------------------

சுகாஷ் சைக்கிளை மிதித்துக்கொண்டு பாடசாலைக்குப் போகையில் பஸ்ஸில் போகும் ரம்மியாவை பார்த்துக்கொண்டே செல்வான். ஆனால் ரம்மியாவிற்கு இவனைப்பற்றி ஒன்றும் தெரியாது.  இருவரும் ஒரே வகுப்பில் படித்தாலும் கடைசியில் இருப்பவன்  தான் சுகாஷ்..! ஆனால் ரம்மியா முதல் வரிசையில் இருப்பவள். அவளது பரீட்சைப்பெறுபேறுகள் 75 இற்கு மேலேயே இருக்கும். சுகாஷ் 40 எடுப்பதற்கே தடுமாறுவான். இப்படியான கல்வி இலட்சணம் அவனுக்கு இருந்தாலும், அவளை மட்டுமே என்றும் ரசித்தும், நினைத்தும் வந்தான். இதை அவனது சில நண்பர்களும் அறிவார்கள். விருப்பத்தைத் தெரிவிக்க சொல்வார்கள். இவன் மறுத்துவிடுவான். இவனுக்கே தெரியும் தனது விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்பது..!  ஆனால் அவளை மறக்க முடியாமல், அவள் நினைப்பிலேயே வாழ்ந்தான். தாய்க்கு இவனின் போக்கு ஓரளவு புரிந்தாலும் இறுதிப்பரீட்சை முடியட்டும் எனக்காத்து இருந்தாள்.

இந்தச்சூழலில் வழமைபோல் சுகாஷ் பாடசாலை போகும்போது,  அவள் சென்ற பஸ்ஸினது எஞ்சின் பழுதடைந்ததால், பஸ்  இடையில் நின்றது. எல்லோரும் வெளியே வந்து அடுத்த பஸ்ஸினையோ அல்லது மற்றவர்களின் உதவியையோ எதிர்பார்த்து நின்றனர். இதனைப்பார்த்த சுகாஷ், அவளைச் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு செல்ல விரும்பினான். இருந்தாலும், அவள் “ஓம் என்றால் தான்” அவனின் கனவு பலிக்கும். ஒருவாறு அவளுக்கு கிட்டச்சென்று உங்கள் வகுப்பில் தான் நானும் படிக்கின்றேன். நீங்கள் விரும்பினால், சைக்கிளில்  நான் உங்களைக் கொண்டுசென்று விடுகின்றேன் என்றான். அவளும் எந்தக் குழப்பமும் இல்லாமல், “ஓம் என்று சொல்லி” அவனது சைக்கிள் பின் ஹெரியரில் ஏறியமர்ந்தாள். அவனும் கனவில் நடப்பது போல் சந்தோசமாக  வண்டியை மிதித்தான். பாடசாலை வந்ததும், அவள் இறங்கி, அவனுக்கு நன்றி சொல்லி நகர்ந்தாள். அவள் போவதையே பார்த்துப் பின்தொடர்ந்தான். இந்த நிகழ்விற்குப்பிறகு, அவள் இவனைப் பார்க்கும் போது மெல்லிய சிரிப்பை உதிர்ப்பாள். அது இவனுக்கு பல நாட்கள் உயிர்வாழ்வதற்கான சக்தியைக் கொடுக்கும். இப்படியான நிலை இருந்தாலும், ஒரு நாளும் அவளிடம் தன்னுடைய காதலை அவன் வெளிப்படுத்தவே இல்லை. அந்த அளவிற்கு, தன்மேல் நம்பிக்கையற்று இருப்பதற்கு அவனது குடும்பச் சூழல்  முக்கிய காரணம்.

காலங்கள்  விரைவாகப் பறந்தன..!  இறுதிப்பரீட்சை வந்தது. அவள் நல்ல பெறுபேறுகளுடன் பல்கலைக்கழகம் தெரிவானாள். இவன் இரண்டு பாடங்கள் மட்டுமே பாஸ் பண்ணி மேற்கொண்டு உயர்கல்வி படிக்கத் தகுதியற்று வீட்டில் முடங்கினான். காதலியை மாத்திரம் இன்னும் மனதில் வைத்திருந்தானே தவிர பாடங்கள் ஒன்றும் அவன் மனதைப் பாதிக்கவும் இல்லை. அவன் மனதில் பதியவுமில்லை..!

ஒரு கட்டத்தில் தாய், தம்பி என்னால் இனி உனக்கு உதவ இயலாது இருக்கின்றது. உனது வாழ்க்கையை நீ தான் பார்க்க வேண்டும். அதற்காக நீ உழைக்கவேண்டும், இப்படியே படிப்பிலும் கோட்டைவிட்டு, எந்தவோர் முயற்சியுமின்றி இருந்தால் உன்னை ஒருவரும் மதிக்கமாட்டார்கள்.  எனக்கும் நிம்மதி கிடைக்காது. எனக்குப்பிறகு உன்னைப் பார்க்க உறவுகள் இருக்காது எனப்பல போதனைகளைச் செய்தாள்.  போதனைகள் அவனை மாற்றின. அவன் தொழில் செய்யத் தன்னைத் தயார் படுத்தினான். அதற்காக மோட்டார் வண்டிகள் திருத்தும்  ஒரு கடையில் அடிமட்ட ஊழியராக இணைந்தான். படிப்பில் தான் தன்னால் சாதிக்க முடியவில்லை. இந்த துறையிலாவது சாதிக்க முயற்சி எடுத்தான்.  அதற்காக மிகக்கடுமையாக உழைத்து, முதலாளியின் நம்பிக்கையைப் பெற்றான்.

--------------------------------------------------

மோட்டார் திருத்தும்  அக்கடை முதலாளிக்கு மனைவியும் மூன்று பெண்பிள்ளைகளும் இருந்தார்கள். சுகாஷைத் தனது மகன்போலவே அவர் கருதினார். அவ்வாறே அடிக்கடி அவனுக்கும் தனது வீட்டுப் பொறுப்பினையும், தனது பெண்பிள்ளைகளை  நல்ல நிலையில் வாழவைக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் கூறியுள்ளார்.

சுகாஷிற்கு என்றும் அவர்மீது நல்ல மரியாதையே இருந்தது. அவனும் அவரைத் தந்தைபோலவே பார்த்தான்.

இவ்வாறு மனம்விட்டு கதைத்த சில மாதங்களில், மாரடைப்பு ஏற்பட்டு முதலாளி இறந்துவிட்டார். அவரது குடும்பத்தினர், அவரது இறுதிக்கிரிகைகள் எல்லாம் முடித்த பிறகு, சுகாஷிடம்,  தம்பி நீயே இனி இந்தக்கடையைக் கட்டிக்காக்க வேண்டும். நீதரும் பணத்தை வைத்தே நாம் வாழவேண்டும் என்று  சொல்லி, அவனிடம் கடையின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.  காதல் எண்ணம் மனதில் இருந்தாலும் அவற்றையெல்லாம் மறைத்துக்கொண்டு கடுமையாக உழைத்தான்.  அதன்பயனாகப்பல கடைகள் உருவாகின. முதலாளியின் பிள்ளைகளை திருமணம் செய்து வைத்தான். தாயாருக்கும் நல்ல ஒரு வீடு கட்டிக்கொடுத்தான். இவ்வாறாக தனது அனைத்துக் கடமைகளையும் நிறைவுசெய்தான். பதிலாக, அவனுக்கு திருமணம் செய்ய முதலாளி குடும்பமும் தாயும் விரும்பினார்கள். இதுவரை மறைத்து வைத்திருந்த தனது ஒருதலைக்காதலைப்பற்றிச் சொன்னான். முதலாளியின் பெண் பிள்ளைகள்,  அந்தப்பெண்ணின் பெற்றோரிடம் பெண்கேட்டுச் செல்ல முடிவெடுத்தனர். அவ்வாறு செல்லும் போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

-----------------------------------------------------

உண்மையில் சிறுவயதிலேயே ரம்மியாவிற்கும், அவளது மாமாவின் மகனுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது. அவர்கள் இந்தவிடயத்தை வெளிப்படுத்தவில்லை.  ஒருவருக்கும்  தெரியாது. இருவரும் பல்கலைக்கழக்கத்தில் படித்தவர்கள்.  அவர்களுக்கு திருமணமும் முடிந்துவிட்டது.

-----------------------------------------------------      

இந்தச்செய்தி சுகாஷூக்கும் தெரியவந்தது. இருந்தாலும் அவன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்யத் தயங்கினான். தனது தொழிலில் அதிக கவனம் எடுத்துப் பெரிய பணக்காரனானான்.    தனது கடைகளைப் பார்த்துக்கொள்ள பலரை நியமித்தான்.  தாய்க்கும், முதலாளி குடும்பத்திற்கும் அவனது நிலை கவலை அளித்தாலும், அவன் விருப்பப்படியே வாழ்வை அனுபவிக்கட்டும் என அமைதியாகி விட்டார்கள்.

-----------------------------------------------------

ரம்மியாவிற்குத் திருமணம் முடித்து ஒரு வருடத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அது வளர்ந்து திருமண வயதை அடைந்த சமயம் கணவர் மரணமானார்.  தனது மகளின் திருமணத்தை உறவுகளின் உதவியோடு செய்துவிட்டு, அவளும் தனக்குப் பிடித்த வகையில் தியானம், ஆன்மீகச்சுற்றுலா    என தனது எஞ்சிய வாழ்க்கையை நிறைவாகக் கழிக்கத் தொடங்கினாள்.

-----------------------------------------------------

இதேகாலகட்டத்தில் சுகாஷூம் இயற்கை, அழகு, கவிதை, ஓவியம் என ஊர் ஊராக ரசித்தும், வரைந்தும் வந்தான்.  இன்றுவரை தனது இளமைக்காதலை  அவன் மறக்கவே இல்லை.  இவ்வாறாக அவனது வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கையில், ஒரு மலைக்கோவிலில் உச்சியில் அதன்  அந்தக்கோவிலின் அழகை ஓவியமாக காகிதத்தில் வரைந்தான். அந்த காகிதத்தில் தனது காதலியின் படத்தையும் வரைந்துகொண்டிருந்தான்.  அந்தக்கோவிலுக்கு ரம்மியாவும் ஆன்மீகச்சுற்றுலாஎன்ற பெயரில் வந்திருந்தாள். அங்கே ஓவியர் ஒருவர், வரையும் படத்தைப் பார்த்தாள்.  அந்த ஓவியரும் அவளைப் பார்த்தார். அண்ணளும் நோக்கினார். அவளும் நோக்கினாள்..! இது முதுமையில் நடந்த நோக்கல்.

இருவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டனர். ஏன் என் படத்தை இதில் வரைந்தீர்கள். எப்படி என்னை  ஞாபகத்தில் வைத்திருக்கின்றீர்கள்.. எனப் பலகேள்விகள் கேட்க, தனது ஒரு தலைக்காதலைப் பற்றிக் கூறினான்.  நான் இறந்தால் தானே  உங்களை மறப்பதற்கு என்று முடிக்க, அவளால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை. மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்   “நட்புடனான பயணத்தை இனி அவனுடன் தொடர்வதற்கு..!

காதல் என்பது சேர்ந்தால் மாத்திரம் தான் சந்தோசம் தரும் என்பது அல்ல. அந்த நினைப்பில் வாழ்ந்தாலும் சந்தோசம் வரும். ஒருத்தர் மீது ஒருத்தர் நட்புப்பாராட்டியும் அது நிலைக்க முடியும்.

அவளுக்கு கணவன் இல்லை..!

இவனுக்கு திருமணமே நடக்கவில்லை..!

முதுமைக்கு காமம் தேவையில்லை..!

இருவருக்கும் நட்பு என்ற துணை  மட்டுமே வேண்டும்..!

அந்தத்துணை  கிடைத்த மகழ்ச்சியில், இருவரும் ஒரு திசையில் பயணப்படத்  தயாரானார்கள்.

 

ஆ.கெ.கோகிலன்

08-04-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!