பிரதம விருந்தினர்..!
நான் எனது வாழ்க்கையில் இதுவரை வந்த எந்த பிரதம விருந்தினர் அழைப்பினை நிறைவேற்றவே முயல்வேன். ஆனால் அண்மையில் எமது பொறியியல் மாணவர்கள் பல ஒழுங்குமுறை விதிகளூடாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் அவர்களது பொறியில் அணிகளுக்கு இடையிலான போட்டிகளை நடாத்தவும், அதற்கான இறுதிவிழாவில் கலந்துகொள்ளவும் சம்மதம் தெரிவித்தேன். அத்துடன் அதற்கான தயார்படுத்தல்களையும் மேற்கொண்டேன். குறிப்பாக என்ன பேசவேண்டும் என்பதையும் தயார்படுத்தி, பிடிஎப் போமற்றில் வைபரூடாக எனது போனுக்கு அனுப்பிவைத்தேன். மேலும் வீட்டுவேலைகளை குறிப்பாக தண்ணீர் பாய்ச்சும் வேலைகளை சனியன்றே முழுநேரம் மினக்கட்டு, நிறைவுசெய்தேன். அடுத்த நாள் காலை எழும்பும் போதே ஒரு மாதிரியாக உடல் இருந்தது. இருந்தாலும் உடுப்புக்களை அயன்செய்து, காரையும் துடைத்து, வேளைக்கே குளித்து தயாராக இருந்தேன். இந்த நேரம் உடல் சிறுது சோர்வாகவும், தலைப்பாரமாகவும், மூக்கடைப்பாகவும், சிறிய காய்ச்சலாகவும் இருந்தது. நேரம் செல்ல செல்ல அதிகரித்தது. வேறுவழியின்றி, பொறியியல் துறைத்தலைவர் ஒருவருக்கு போன்பண்ணி விடயத்தைச் சொன்னேன். அவரும் தங்களுக்கும் அவ்வாறே என்றார். வேறு என்ன செய்ய.? சில முயற்சிகளைச் செய்து என் சார்பாக யாரையாவது அனுப்பலாமா எனமுயற்சிக்க ஒருவரும் சம்மதிப்பதாக இல்லை. இறுதியில் பொறியியல் பீட போதனாசிரியர் ஒருவரை எனக்காகப் போகச் சொல்லவிட்டு, படுத்தேன்.
போன வருடமும் என்னிடம் அனுமதியோ, தகவலோ தராமல் இவ்வாறான ஒரு
அழைப்பை எனது மேசைக்கு அனுப்பியிருந்தார்கள். அதையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லாவற்றிற்கும்
ஒரு முறையுண்டு. அதைக் கடைப்பிடித்தாலே என்னால் சில காரியங்களைச் செய்ய முடியும்.
இவர்களுக்கு முதலே சொன்னான், தனியே பொறியியல் என்று செய்யாமல்
எல்லா கற்கைநெறிகளையும் இணைத்துச் செய்யும் படி..! ஆனால் அவர்கள் அதற்குத் தயாராக இருக்கவில்லை.
நான் அவர்களை தடுக்க முடியும். ஆனால் இது மீண்டும் எனக்கும் மாணவர்களுக்கும் பிரச்சனையாக
முடியும். ஆகவே பொறுமையாக, அந்த சமயம் என்ன செய்ய வேண்டுமோ அதனையே செய்தேன். ஆனால்
இறைவனோ அல்லது இயற்கையோ இதற்கு சம்மதிக்கவில்லை என்பது மட்டும் எனது வருத்தத்தினூடாகப்
புரிந்தது. பிரிந்து சாதிப்பதை விட இணைந்து
சாதிப்பதே அனைவருக்கும் நன்மை பயக்கும். புரிந்தால் நல்லது. இல்லையேல் இதே சூழல் தொடரலாம்.
ஆ.கெ.கோகிலன்
02-04-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக