நாடு
இந்த உலகில் ஒவ்வொரு நாடும், அந்நாட்டு மக்களும் தமது நாடு நல்லா வரவேண்டும். பொருளாதாரத்தில் சிறக்க வேண்டும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும் என்ற நோக்கோடு தான் செயற்படுவார்கள். அவ்வாறே தமது நாட்டின் அரசியலை முன்னெடுப்பார்கள். நாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அரசையே மக்களும் தேர்ந்தெடுப்பார்கள்.
இவ்வாறான சூழலில் சில விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகள்
மட்டும் சரியான கொள்கைகளும், கோட்பாடுகளும், இல்லாமல் மக்களை ஏமாற்றி, தேவையில்லாத விடயங்களை முன்நிலைப்படுத்தி, மக்களின் வாக்குகளைப்பெற்று,
ஆட்சி என்ற பெயரில் நாட்டின் பொருளாதாரத்தை வீணடித்து, மக்களை மேலும் துன்பத்திற்குள்
கொண்டுவந்துவிடுகின்றார்கள்..!
அரசியல் வாதிகள் தான் மக்களையும், நாட்டையும் ஏமாற்றுகின்றார்கள்
என்று பார்த்தால் பெரும்பாலான மக்களும் அதே
எண்ணத்தில் தான் இருக்கின்றார்கள். உண்மைக்கும்,
நியாயத்திற்கும் மரியாதையில்லை. நாடு, தரும் எவ்வளவோ நன்மைகளைப் நாம் பெற்றுவிட்டு,
நாடு கஷ்டத்தில் இருக்கும்போது ஓட எப்படி மனம் வருகின்றது..? எமது நாட்டுக்காக போராட
ஏன் மனம் வரமாட்டேன் என்கின்றது..? ஆனால் நாடு தரும் எத்தனை இலவசங்களை நாம் பெற்றோம்.
கல்வி, மருத்துவம் என்பன வளர்ந்த நாடுகளிலேயே இலவசமாகக் கொடுக்க முடியாது, மாணவர்களுக்கு
கடன்களையே கொடுக்கின்றார்கள். ஆனால் நமது நாடு, நாம் கல்வியில் முன்னேற எத்தனை இலவசத்
திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. போட்டிபோட்டுப்
படித்து இலவச மருத்துவம் படித்து, நாட்டுக்கு சேவை செய்ய எத்தனை பேர் தயாராக இருக்கின்றார்கள்.
எல்லோரும் தம்மை மட்டும் பார்த்தால் சரி என நினைக்கின்றார்கள். நான் கூட சிலசமயம் அவ்வாறு நினைப்பேன். பின்னர்,
எனக்கு நானே சொல்லி, என்னுடைய தவறை உணர்வேன்.
உண்மையில் இப்படியான நிலை வந்ததற்கு காரணம் என்ன..?
எமக்குச் சரியான நாட்டுப்பற்று என்பது கிடையாது. சின்னவயதில்
இனத்துவேசம் பேசி தமிழர்களுக்கு தனிநாடு வேணும் என்று அடம் பிடித்துப் போராடி களைத்து
உலகம் பூரா இன்னும் அலைந்துவாழும் அநாதைகளாக தமிழர்கள் வாழ, பௌத்தநாடு என்று சொல்லி,
தமிழர்களை அழிப்பதே நாட்டின் வளர்ச்சி என்று முட்டாள் தனமாக செயற்பட்ட அனைத்து சிங்கள
மக்களும், தற்போது உலக அரங்கில் அவர்களின் தலைவர்களை தாமே அவமானப்படுத்தி அனுப்பி,
தாங்கள் உத்தமர்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, மீண்டும் தவறுகள் செய்யும் நோக்கில்
இவர்களும் நாட்டைவிட்டு ஓட நினைப்பது வேதனையாக இருக்கின்றது. நாட்டை நாசமாக்கிய அனைவரும் தற்போது உலக நாடுகளின் வசதியான அடிமைகளாக வாழ்ந்து, மாய்கின்றார்கள்.
நாம், நாடு பற்றிய
அறிவு எமக்கு இருந்தாலும் நாட்டை பாதுகாப்பதற்கும்,
நாட்டை முன்னேற்றுவதற்கும் தயக்கம் காட்டுவதும், தவிர்த்து ஓடுவதும் நிறுத்தப்பட வேண்டும்.
அனைவரும் நாட்டு பற்றுவர ஒரு பாடத்தையே நாம் பாடசாலைப்படிப்போடு சேர்க்க வேண்டும்.
ஆன்மீகம் படிப்பதால் வேற்றுமைகள் தோன்றும், மொழிகள் படிப்பதாலும் அதுவே நிகழும். ஆனால்
நாட்டுப்பற்று வருமானால் மொழிகளும் பிடிக்கும். மதங்களும் மதிக்கக்கூடியதாக இருக்கும்.
பல முன்னேறிய நாடுகளில் நாடு தொடர்பான அறிவையும், அதன் நிலையையும்,
அதனை மேன்மைப்படுத்த செய்யவேண்டிய விடயங்களும் கண்டிப்புடன் சொல்லப்படுகின்றன. பாடங்களாகவும்
இருக்கின்றன. நமது நாட்டிலும் அப்படியான நிலை வரவேண்டும். அனைவரும் நாட்டை முன்னேற்ற
பாடுபட வேண்டும். நாம் நாட்டுக்கு நல்லது செய்தால் நாடு நிச்சயம் நன்மையை நமக்குச்
செய்யும்.
ஆ.கே.கோகிலன்
23-04-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக