ரேடியோ மணியம்..!
பெற்றோர்கள் சின்னச்சின்ன விடயங்களைப் பெரிது படுத்துவதால்
குடும்பங்களுக்குள் நெருக்கங்கள் குறைவதுண்டு. அவ்வாறான நிலைமை எனது தாயாரின் குடும்பத்திற்குள்ளும்
நடந்துள்ளது. மிகவும் நெருங்கிய உறவாக இருக்க வேண்டியவர்கள் பகையாளிகள் போல் தள்ளிப்போய்விட்டார்கள். பலரது
முகங்களும், அவர்களின் மதிப்பும் தெரியாமலே போய்விட்டது.
காலங்கள் பல போய்,
பகைகளை வளர்த்தவர்கள் மறைந்து போக, சிலரே எமக்குத் தெரிந்தவர்களாக இருக்க முடியும்.
அவ்வாறான ஒரு உறவே மணியம் அங்கிள். உண்மையில் எனது தாயாரின் மச்சான். ஆனால் தொடர்பில்லாமல்
போய்விட்டது. எனது தாயாருக்கு 70 வயதுக்குப் பிறகே
இவ்வாறான உறவுகள் தொடர்பான பற்றுப் பாசம் வந்துள்ளது. அதன் வாயிலாக நமக்கும் அது வந்துள்ளது. எனது தாயாரின் மூத்த சகோததர் மட்டுமே ஒரு இணைப்பாக
இருந்து, இப்படியான உறவுகளைக் காட்டினார்.
அதன் பிறகு நாமும் எம்மால் முடிந்தளவு அவற்றைப் பேண முயல்கின்றோம். இந்த சூழலில் கடந்த மாதம் காலமான மணியம் அங்கிளின்
அந்தியேட்டி இன்று நடந்தது. மரண வீட்டிற்கும், அந்தியேட்டிக்கும் லீவு போட்டு, எனது
தாயாரைக் கூட்டிசென்றேன்.
கண்ணை மூடும் காலத்தில், பகைகளை மறப்பதால் என்ன பயன்..?
பகைகளைப் பெரிது படுத்தாமல் மன்னித்து, கூடி வாழ்வதே உறவுகளுக்கு
பயனுடையது. ஆணவமும், அகங்காரமும் சேருவதால், சின்ன மன்னிக்கக்கூடிய விடயங்களும் பெரிதாக
மாறுகின்றன. தனி நபர்களுக்குள் இருக்கும் பிணக்குகள் குடும்பத்திற்குள் வந்து உறவுகளையே எதிரிகளாக மாற்றுகின்றது.
மனித வாழ்வே கொஞ்சக்காலம் தான். அதற்குள் முரண்களை வளர்த்து,
அதனைச்சாதிப்பதால் எந்தப்பலனும் யாருக்கும் கிடைக்காது. பகை வராது பார்த்துக்கொள்ள
வேண்டும். அல்லது அதனைப் பெரிது படுத்தக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாகப் பொறுமையாக
இருக்க வேண்டும். அவசரப்படுவதால் சக்தியே விரயமாகும். நன்மை ஒன்றும் இருக்காது.
நானும் பகையில்லாமல்
வாழ, பாடமாக இவற்றை என்றும் மனதில் வைக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.
கண் கெட்டதன் பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் என்ன பலன்..?
காலம் கடந்து, கண்ணை மூடும் தருணத்தில் உறவுகளைப் பார்ப்பதால்
என்ன நன்மையை நாம் அவர்களுக்குச் செய்ய முடியும்..?
இருக்கும்போதே உதவ முயலவேண்டும்.
வாழ்வின் வரையறையே இது ஒன்று தான்.
ஆ.கெ.கோகிலன்
19-04-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக