உதவிப் பதிவாளரின் பிரியாவிடை..!
அண்மைக்காலமாக எனது வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் மிகுந்த
ஆச்சரியத்தை எனக்கு ஏற்படுத்துகின்றன. சில விடயங்கள் நான் நினைப்பதைவிட வித்தியாசமாக
நடக்கின்றது.
கொரோனா, அதைத்தொடர்ந்த உக்ரேன் – ரஷ்யப்போர் என்பன முழு உலகத்தையும் பாதித்தன. ஆனால் இலங்கையை இன்னும் ஆழமாகப் பாதித்தன. அதற்கு எமது மக்களின், செயற்பாடுகளும், அதற்கேற்ற அரசியல் வாதிகளின் சாகசங்களும் மக்களை அடிநிலைக்கு கொண்டுவந்தன. சாதாரண மக்கள் வாழமுடியாத நிலைக்கு நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து இருந்தது. இந்தச் சூழலில் பலர் நாட்டைவிட்டு வெளியே செல்ல முடிவெடுத்தார்கள். நான் கூட அந்த எண்ணத்திற்கு சில தடவைகள் வருவதுண்டு. பின்னர், ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள சாதக பாதகங்களை அலசும்போது, இங்கிருந்து போராடுவதே சிறந்தது எனத்தோன்றும். பின்னர் முடிவை மாற்றி, அதற்கேற்ப சூழலையும் தயார்படுத்துவேன்.
இப்போது நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் எமது நிறுவன உதவிப்பதிவாளரும், திடீரென சம்பளமில்லா லீவை பெற
முயற்சித்தார். அதற்கு நானும், கணக்காளரும் ஒத்துக்கொண்டோம். இருந்தாலும் மேலிடம் ஒப்புக்கொள்ளவில்லை.
இவ்வாறு போவதால் நாட்டுக்கு நன்மையுண்டு என்றும், ஒவ்வொரு மாதமும் 500 அமெரிக்க டொலர்கள், இலங்கைக்கு வரக்கூடிய வாய்ப்பு இருந்தும், எமது நிறுவனத் தலைமை அதனைக் கவனத்தில் எடுக்கவில்லை.
பின்னர், உதவிப்பதிவாளர் கடந்த 10 ம் திகதி வேலையைவிட்டு
விலகும் கடிதத்தைத் தந்தார். அத்துடன் 11ம் திகதி எமக்கு ஒரு மதிய உணவு வழங்கவும் விருப்பப்பட்டார்.
அதற்கு நானும் ஒத்துக்கொண்டேன். எமது நலன்புரிச்சங்கமும் அதற்கு உடன்பட்டு, தமது சார்பிலும்
சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது.
நினைத்த மாதிரி குறித்த நாள் வந்தது. அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக நடந்தன. பலர் பேசினார்கள். நானும் ஆளுமைகள் பற்றிக்கூறினேன். இருந்தாலும், நாம் எல்லோரும் இவ்வாறான சூழலுக்கு தொடர்ந்து முகம்கொடுக்கவேண்டிய நிலை வரும். அதற்குத் தயாராக இருக்க வேண்டும். எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்தால் எந்தக்கஷ்டமான சூழலையும் இலகுவாகக் கடக்க முடியும்.
உதவிப்பதிவாளருக்கும் எனக்கும் சில எதிர்பாராத தொடர்புகள் இருக்கின்றன. நான் முன்பு வணங்கும் சாய்பாபாவின் பிறந்த திகதியே இவருடைய பிறந்த திகதி..! இருவருடைய அம்மாவின் பெயரும் ஒன்றே..! பிறப்பு
எண், பிள்ளைகளின் எண்ணிக்கை, நிறம், ராசி என்பனவும் நெருங்கியதாக இருக்கின்றது..! மேலும் உறவுகளின் திருமணவழி உறவு, நிறுவனத்திற்கான தொடர்பு, படித்த இடம், நிறுவனச் சூழல் எனப்பல புள்ளிகள் ஒத்திணைவாக உள்ளன. அவற்றைத் தொடுக்கும்போது ஏதோவோரர் உண்மை
அல்லது தேவைக்காகவே இவை நிகழ்ந்தன என்பது புரிகின்றது.
எல்லாம் இயற்கையினதும், இறைவனினது செயலே என்று சொல்லி, முகாமைத்துவக்கோட்பாடு ஒன்றைப்பற்றியும் சொல்லி, அது அவரது உறவினரால் கூறப்பட்டது என்பதையும் சொல்லி, அவரும், மனைவி பிள்ளைகளும் இலண்டனில் சிறக்க வாழ ஆசியும், வாழ்த்தும் கூறியமர்ந்தேன்.
நலன்புரிச்சங்கமும் சிறப்பாக அனைத்து ஒழுங்குகளையும் செய்ததால் எல்லாம் நிறைவாக முடிந்தது. சில சாணக்கியர்கள், தமக்குப் பிடித்ததை எப்படியாவது செய்துவிடுவார்கள். எனக்கு சில சமயம் அவை பிடிக்காவிட்டாலும், உதவிப் பதிவாளரின் திறமையால் அதனை நாசுக்காகச் சாதித்துவிடுவார். அந்த வகையில் அவர் விலகிச்செல்வது, எனக்கு கஷ்டமாக இருந்தாலும், சில விடயங்களை எனக்குப்பிடித்ததுபோல் செய்ய வாய்ப்பும் வருகின்றது எனநம்புகின்றேன். ஒவ்வொரு காரியத்திலும் சாதகங்களும், பாதகங்களும் இருக்கின்றன. திறமையானவர்கள், எதனையும் சாதகமாக மாற்றுவார்கள். அந்த வகையில் இந்த சூழலைக்கொண்டுசெல்லவே நானும் விரும்புவேன்.
ஆ.கெ.கோகிலன்
11-04-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக