அரை நெல்லி..!

 


 


சில வருடங்களுக்கு முன்னர் எனது அலுவலகத்தில் வேலைசெய்யும் ஒருவர் நெல்லிக்கன்றுகள் சிலவற்றை எனக்குத் தந்தார். அவற்றைப் பல இடங்களில் நட்டேன். இரண்டு கன்றுகள் மட்டும் நன்றாக வளர்ந்தாலும் ஒன்று மட்டுமே சிறப்பாகக் காய்த்தது.  அது எனது வீட்டின் முன்பக்கத்தில் இருப்பதால் பாடசாலைப்பிள்ளைகள் அந்த மரத்திலுள்ள காய்களை சாப்பிடட்டும் என்று விட்டுவிட்டேன். 5 அல்லது 6 முறை காய்த்துவிட்டது. நான் அதனைப்பற்றி கவலைப்படுவதில்லை. பள்ளிப்பிள்ளைகள்  தங்களுக்குள் போட்டிபோட்டு, அடிபட்டு, மரத்தில் ஏறி அவற்றைக் காலிபண்ணுவார்கள். பார்க்க சந்தோசமாக இருக்கும்.

இந்த முறையும் நன்றாகக் காய்த்துத் தொங்கியது. வழமைபோல் பிள்ளைகள் பிஞ்சாக இருக்கும் போதே  கொப்பை முறித்து, சில காய்களை மட்டும் ஆய்ந்துவிட்டு அப்படியே மரத்தில் விட்டுவிட்டார்கள். ஒரு 3 கிலோ அளவிலான நெல்லிக்காய்களை நான் அக்கொப்பிலிருந்து ஆய்ந்து, மனைவியிடம் கொடுத்து, இதனை நெல்லி ஊறுகாயாகப் போடச்சொன்னேன். அவரும் கொஞ்சத்தை ஊறுகாயாகப் போத்தலில் அடைத்து வைத்தார். இரண்டு மூன்று முறை ரசித்து அவற்றை நான் உணவோடு உண்டேன். தம்பிக்கும் ஒரு போத்தல் கொடுத்தேன். ஓரிரு நாட்கள் பின்னர் நான் சாப்பிட்ட  ஊறுகாய் போத்தலில்  பூஞ்சணம் பிடித்திருந்தது. நானும் பிறிஜ்ஜூக்குள் வைக்க மறந்துவிட்டேன். அதேபோல் தம்பியும் மறந்துவிட்டார். அனைத்தும்  பூஞ்சணத்தால் பழுதாகிவிட்டது. உண்மையில்  ஜாம் போத்தலிலே அவற்றை அடைத்தோம். அதன் மூடியில் ஜாம்போத்தல் திறக்கும்போது போட்ட சிறு ஓட்டையைக் கவனிக்கவில்லை. அதனூடாகக்  காற்று உள்ளேபோய் உள்ளே இருந்த  ஊறுகாயைப் பழுதாக்கிவிட்டது. மனைவியிடம் திரும்பவும் நெல்லிக்காயின் மதிப்பைச் சொல்லி, இனிக்கவனமாக ஊறுகாயைப் போடச்சொன்னேன்.

இந்தக்கொடுமையான வெயில் காலத்தில் நெல்லி மரம் காய்ப்பதன் காரணம் நாம் அதனை உண்பதற்கே. அதனூடாக பல சத்துக்கள் உடலில் சேரலாம். அதனால் பல நோய்கள் வராது தடுக்கப்படலாம். இயற்கை இலவசமாகத் தரும்போது அதனைக் கவனிக்காமல், விளம்பரங்கள்  ஊடாக ஏதாவது விரைவு உணவுகளைக் காசுகொடுத்து வாங்கிச் சாப்பிடும் அளவிற்கு, வளர்ந்துவிட்டோம். “என்ன நோய் வருகின்றது..?” என்பதே தெரியாமல் மருத்துவருக்கு காசு கொடுத்து, நோயாளியாக வாழ்வதைவிட, இயற்கையைப் புரிந்து, அதனடிப்படையில் வாழ்வது எவ்வளவோ நல்லது, நிறைவானது மற்றும்  எளிமையானது.

உணவே மருந்து என்று நாக்கைப்படைத்து, அதனூடாக உடலுக்குத் தேவையான சத்துக்களை பெற முயற்சிக்கும் உடலுக்கு, நமக்கு அறிவும், பணமும் வந்ததால் தேவையில்லாத செயற்பாடுகளைச் செய்து, உடலையும் கெடுத்து, நாமும் கெட்டு, சமூகமும் பாதிக்கப்பட  ஏன் காரணமாக இருக்க வேண்டும்..? சிந்தியுங்கள். உண்மை புரியும். எளிமையான வாழ்வுக்குத் தேவை இயற்கையைப் புரிவதே..!

ஆ.கெ.கோகிலன்

21-04-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!